புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும்!- பொன்.செல்வராசா


புரையோடிப்போயுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் மட்டுமே தீர்வினைக் காணமுடியும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இன்று காலை கல்லடி, உப்போடையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
10 வருடமாக நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல சேவைகளை புரிந்துள்ளேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்காத காலத்திலும் பல சேவைகளையாற்றியுள்ளேன். குறிப்பாக போர் மற்றும் சுனாமி அனர்த்த காலத்தில் பல சேவைகளையாற்றியுள்ளேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என சிலர் கேட்கின்றனர். இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, இனத்தின் தேவைப்பாடுகள், தமிழர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே தீர்வினைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்று கேட்பவர்கள் அபிவிருத்தியை மட்டும் வைத்து தமிழர்களிடம் செல்கின்றனர். அவர்கள் தமிழர்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் சிந்திப்பதில்லை. இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்று எங்களிடம் நேரடியாக கேட்டால் அதற்குரிய பதிலை நாங்கள் விரிவாக அளிப்போம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாட்டில் இருந்திருக்காவிட்டால் இன்று நீதிமன்றில் கூட தமிழ் மொழி பாவனையில் இருந்திருக்காது. தமிழை இந்த நாட்டில் அரசகரும மொழியாக்கியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே. தமிழர்களின் மிக முக்கிய பிரச்சினைகளை தீர்த்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே.
2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட போது வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தலைமை யார் என்ற கேள்வியெழுந்த போது 2010ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் தலைமை தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டினர்.
அதேபோன்று 2010 தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பகுதிகளில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களாக அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே தெரிவு செய்யப்பட்டனர். தமிழ் தேசியத்தினை கிழக்கு மக்கள் முழுமையாக ஆதரித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினை தமிழ் மக்கள் புறக்கணிக்கவில்லை.
நாங்கள் கடந்த அரசாங்கத்துடன் இனப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். பல சுற்று பேச்சுகள் நடைபெற்றன. அவர்கள் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க முன்வராமல் தாங்களாகவே பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டனர்.
உள்நாட்டில் புறையோடிப் போன இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை உணர்ந்து கொண்டதன் காரணமாகவே சர்வதேசத்துக்கு தமிழர்களின் இன்னல்களை வேதனைகளை தெளிவுபடுத்தினோம். அதன் காரணமாகவே ஐ.நா.வில் மூன்று தடவைகள் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஐ.நா.வின் இறுதி அறிக்கை தள்ளிப்போடப்பட்டுள்ளது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் அந்த அறிக்கை வெளிவரவுள்ளது.
அந்த அறிக்கை வெளிவந்தால் அதனால் மகிந்தவுக்கு பிரச்சினையை கொடுக்கும் அதனைக் கொண்டு அவர் அரசியல் செய்ய முற்படுவார் என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற தேர்தலை அறிவித்தார். தீர்க்கதரிசனத்துடன் இதனை ஜனாதிபதி மைத்திரிபால செய்தார்.
இந்த தேர்தல் தமிழ் மக்களை பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருக்கின்றது. சர்வதேச சமூகம் புதிய அரசாங்கத்திற்கு தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற அழுத்தத்தினை வழங்கும் நிலையுருவாகியுள்ளது.அதற்காக நாங்கள் பலமான சக்தியாக மாற்றமடைந்து சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கவேண்டிய கட்டாயதேவையுள்ளது.
அதேபோன்று எதிர்வரும் தேர்தலில் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத கட்சியாக மாறும் நிலையுள்ளது. அந்தவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்றாவது நிலையில் இருக்கும் கட்சியாக மாறும்.இதன் காரணமாக பேரம்பேசும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு திகழும். ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை நாடும் நிலையேற்படும்.
இந்த நிலையை தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். எந்தக் காலத்திலும் இல்லாத மிகவும் சாதகமான நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் பேரம் பேசும் சக்தியை பெறும் நிலைக்கு நாங்கள் வரக்கூடிய சாத்தியமான நிலை அதிகம் உள்ளது.
கடந்த 2010 தேர்தலில் 14 பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கிய தமிழ் மக்கள் இந்த தேர்தலில் அதனைவிட அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உருவாக்குவார்கள் என நம்புகின்றோம்.
நாங்கள் தேசிய கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் எங்கள் பேரம்பேசும் சக்தியை இல்லாமல் செய்துவிடும் என்பதற்காகவே தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என நாங்கள் கோரி வருகின்றோம்.
இன்று இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணாவிட்டால் என்றும் அதற்கு தீர்வு காணமுடியாத நிலையே ஏற்படும்.
இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் மட்டுமே நாங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காணமுடியும். ஐ.தே.கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளையும் இணைத்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அதன் மூலம் இனப்பிரச்சினைகான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க அவரால் மட்டுமே முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ad

ad