புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2015

ஒன்றும் செய்யவில்லை என்று மன்னிப்புக் கேட்டு வாக்குகளை கெஞ்சிக் கேட்கவில்லை! கரவெட்டியில் சுமந்திரன் முழக்கம்








தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருட காலத்தில் பாராளுமன்றம் மற்றும் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்காக சாதித்த சாதனைகளை முன்வைத்தே வாக்குக் கேட்பதாக கரவெட்டியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வேட்பாளர் சுமந்திரன் குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சர்வதேச விசாரணை என்கின்ற விடயம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும்.
சர்வதேச விசாரணை என்றால் என்ன என்கின்ற அடிப்படைகள் கூடத் தெரியாதவர்கள், அதைக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று அதனை புறம் தள்ள முயன்றார்கள்.
எனினும் நாம் சர்வதேசத்துடன் தொடராக தொடர்புகளை மேற்கொண்டு, இறுதிப் போரில் நிகழ்ந்த விடயங்களை எடுத்துக் கூறியதன் விளைவாகவே சர்வதேச விசாரணை என்கின்ற விடயம் உருப்பெற்றது.
அன்று அதனை எதிர்த்தவர்கள், இன்று ஒரு வதந்திக்குப் பின்னாலே சென்று, எம்மீது வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். எம்மைப் பொறுத்தவரை சர்வதேச விசாரணை என்கின்ற விடயத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களையும் மேற்கொள்ளப் போவதில்லை.
விசாரணை ஆகட்டும், தமிழ் மக்களுக்கான தீர்வு ஆகட்டும், சர்வதேச பங்களிப்பு கட்டாயம் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
கடந்த ஐந்து வருடங்களில் நாம் நமது மக்களுக்காக சாதித்தவை அதிகம், சர்வதேச விசாரணை மட்டுமின்றி, வலி வடக்கு நில ஆக்கிரமிப்பு வழக்குகள், சம்பூர் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், திவினகும சட்டமூலத்திற்கு எதிரான வழக்குகள் என்று பல விடயங்களை நாம் மேற்கொண்டோம்.
சொந்தமாக தேர்தல் விஞ்ஞாபனம் கூட வெளியிட முடியாதவர்கள் நம்மைக் குறை கூறுவதையே தொழிலாகக் கொண்டு, மக்கள் தமக்கும் வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
சிலர் சொல்வது போன்று மகிந்தவிற்கு எதிராக மைத்திரி களமிறங்கிய மாற்றம் என்பது நவம்பர் 19 ஆம் திகதி இரண்டு முட்டை அப்பம் தின்றுவிட்டு திடீரென முடிவு செய்த ஒன்றல்ல.
மாறாக, இது தொடர்பில் இரண்டு மூன்று வருடங்களாக நாம் பல்வேறு தரப்புக்களுடன் இணைந்து பிரயத்தனங்களை மேற்கொண்டோம், கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள் என்று பல விடயங்கள் பகிரங்கத்தில் தெரியாமலேயே நடைபெற்றன.
மகிந்தவை மாற்ற வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருந்தார்கள், அது குறித்து நாம் மக்களை வழிகாட்டுவதற்கு முன்னரே அவர்கள் அந்தத் தீர்மானத்தில் இருந்தார்கள்,நமது வழிகாட்டல் வந்த பொழுது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள்.
மக்களின் நாடித் துடிப்பை புரியாதவர்கள், தேர்தலை பகிஸ்கரிக்கச் சொன்னார்கள், அனால் தமிழ் மக்கள் அப்படிச் சொன்னவர்களைத்தான் பகிஸ்கரித்தார்கள். வரலாறு காணாத வகையில் வாக்களிப்பில் கலந்துகொண்டு மகிந்தவின் தலைவிதியையே மாற்றினார்கள்.
மைத்திரி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மட்டுமே மக்கள் மைத்ரிக்கு வாக்களிக்கவில்லை, அதற்கு பல காரணங்கள் இருந்தன. மைத்திரிக்கு தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் கொள்கைக்கான வாக்குகள் அல்ல, கொள்கைக்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே ஆகும்.
மைத்திரிக்கு தமிழ் மக்கள் அளித்த வாக்குகளை சர்வதேசம் உற்று நோக்கியுள்ளது, அது கொள்கைக்காக, தமிழர் விடுதலைக்காக அளிக்கப் பட்ட வாக்குகள் அல்ல.
மைத்திரியை முன்னிறுத்திய ஐக்கிய தேசியக் கட்சியும், தற்பொழுது மைத்திரி தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஒற்றையாட்சியை முன்வைத்தே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவான தேர்தல் விஞ்ஞாபனத்துடன் சமஷ்டி முறையை முன்வைத்துள்ளது. நீங்கள் மைத்திரிக்கு அளித்த வாக்குகளை விட, அதிகமான வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அளிக்கத் வேண்டும். தமிழர்கள் மைத்திரியின் கொள்கையான ஒற்றியாட்சியை தான் அங்கீகரிக்கின்றார்கள் என்று கூறப்படக்கூடாது.
தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கு எதிரானவர்கள் என்பதை தெளிவாக எடுத்துக் காட்ட, மைத்திரிக்கு வழங்கப்பட்டதை விட அதிகமான வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்குவது கட்டாயம் ஆகும்.
சிலர் சொல்வது போன்று நாம் இதுவரை ஒன்றும் செய்யாமல் வந்து, ஒன்றும் செய்யவில்லை,இனித்தான் செய்வோம், என்று மன்னிப்புக் கேட்டு, வாக்குத் தாருங்கள் என்று கெஞ்சிக் கேட்கவில்லை.
கடந்த ஐந்து வருடத்தில் நாம் செய்தவற்றை முன்வைத்து, அவற்றை தொடர்வதற்கும், வரவிருக்கின்ற மாறுபட்ட சூழலில் மேலும் உறுதியான வகையில் உரிமைகளை வென்றெடுப்பதற்குமே உங்கள் முன் வந்து வாக்குக் கேட்கின்றோம் என்றும் அவர் தனது கரவெட்டி உரையில் தொடர்ந்து குறிப்பிட்டார்.
சுமந்திரன் அவர்களுடன் ஏனைய யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான சிறீதரன்,  அருந்தவபாலன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ad

ad