புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2015

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி


நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் தேர்தல் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைகளில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையில், பல்கலைக்கழக மாணவ சமுகத்தின் ஒட்டு மொத்த ஆதரவு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கே என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த 13ம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் ஒன்றியம் என அடையாளப்படுத்தப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. குறித்த அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தாங்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த அறிக்கை ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில் அவ்வாறான அனைத்து பீடங்களின் ஒன்றியம் என்ற ஒன்று இல்லை. குறித்த அறிக்கையின் பின்னால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிலர் உள்ளார்கள் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த அறிக்கையின் பின்னால் உண்மையில் தேர்தல் காலங்களில் கடைசி தருவாயில் ஏதாவது ஒரு போலியை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வேட்பாளர் தானும் மூக்கை நுழைக்க வேண்டும் என மூக்கை நுழைத்ததால் மாணவர்கள் சுய உணர்வின் பாற்பட்டு தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது பற்றுதி கொண்டு வெளியிட்ட அறிக்கை பின்னர் கூட்டமைப்பிற்கு எதிராக சில தரப்புக்களால் திசை திருப்பி விடப்பட்ட சம்பவம் நடந்தேறியது.
ஆனாலும் குறித்த அறிக்கையினை சுய உணர்வினாலேயே வெளியிட்டனர் என்பது பின்னர் அறியக்கிடக்கின்றது. இந்நிலையில் மேற்படி அறிக்கை வெளியானதன் பின்னர் நேற்றய தினம் 14ம் திகதி மீண்டும் ஒரு அறிக்கை வெளியாகியிருந்தது. அந்த அறிக்கையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போக்கிலித்தனமாக செயற்பட்டு அந்த அறிக்கையினை வெளியிட்டதாக கூறப்பட்டிருந்தது. உன்மையில் அந்த அறிக்கை பல்கலைக்கழக மாணவர்களினால் வெளியிடப்பட்டிருக்கவில்லை. அந்த அறிக்கை திட்டமிட்டு சில தரப்புக்களால் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கடித தலைப்பின் பிரதி எடுக்கப்பட்டு அதில் செருகப்பட்டு உருவாக்கப்பட்ட அறிக்கையே அந்த அறிக்கையாகும்.
இந்நிலையில் 2ம் தடவையாக வந்த அறிக்கை வெளியானதன் பின்னர் அந்த அறிக்கை தொடர்பான செய்திகள் பல ஊடகங்களில் வெளியிடப்பட்டு கூட்டமைப்பிற்கு எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்னதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு சந்திப்பை ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் சிலர் அடுத்த கட்டமாக தங்கள் பதவி உயர்வுகளுக்காக அரசாங்கத்தின் எடுபிடிகளாக உள்ள ஈ.பி.டி.பியினர் சொல்லைக்கேட்டு மாணவர்கள் உண்மையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை தடுத்த விட்டனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை அடையாளப்படுத்தி வெளியிட்ட அறிக்கை தொடர்பான உண்மை நிலையினை தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது மாணவர்கள் கொண்டுள்ள பற்றுதியினை தமிழ் சமுகத்திற்கு வெளிப்படுத்துவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் 14ம் திகதி மாணவர்களுடைய பெயரில் வெளியான போலியான அறிக்கை உண்மையாகிப்போனது. இந்நிலையில் இன்றைய தினம் 15ம் திகதி மாணவர்கள் மீண்டும் ஒரு அறிக்கையினை வெளியிட்டு உண்மையை கூறிய போதும் தேர்தல் விடயங்களை வெளியிடுவதற்கான கால எல்லை முடிந்தமையினால் உண்மைகளை தமிழ் சமுகத்திற்குச் சொல்ல முடியாத துர்ப்பாக்கியமான நிலைக்குள் மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் களமிறங்கியிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் மக்களிடம் ஒரு நிறைவான உணர்வு நிலைப்பாடு காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் மறுபக்கம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஊழியர் சங்கம் ஆகியன மாறுபட்ட இரு நிலைப்பாடுகளை எடுத்திருக்கும் நிலையில் உருவாகியிருக்கும் குழப்ப நிலையினை தணிப்பதற்கும் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக எங்களுடைய தெளிவான நிலைப்பாட்டை அல்லது ஆதரவை வெளிப்படுத்தவே நாம் 13ம் திகதி தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவினை தெரிவித்தோம். தற்போதுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் காலம் நிறைவடைந்த போதும் அவர்கள் பதவிகளை கையளிக்காத நிலையில் ஒரு அங்கீகாரத்திற்காக நாம் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களை இணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கான ஆதரவை தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் கூட்டமைப்பிற்குள் உள்ள ஒரு வேட்பாளர் தன்னையும் அதற்குள் நுழைக்க நினைத்த தனிப்பட்ட நலன்சார்ந்த தேடலினால் கூட்டமைப்பின் மீது நாம் கொண்டிருந்த பற்றுதியும் அதன் பாற்பட்ட நாம் வெளியிட்ட ஆதரவு அறிக்கையும் பின்னர் பொய்யாக்கப்பட்டு பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.
ஆனாலும் நாம் விடுத்த அறிக்கையே உண்மையானது. 14ம் திகதி வெளியான அறிக்கை சோடிக்கப்பட்ட அறிக்கையே. எது எவ்வாறு இருந்தாலும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடைய ஒட்டுமொத்த ஒத்துழைப்பும் ஆதரவும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே அதனையே நாம் தொடர்ந்தும் செய்வோம் என கூறினார்.

ad

ad