புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2015

வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு


வித்தியா படுகொலை சந்தேக நபர்களின் வழக்கு சிவில் குற்ற வழக்கிற்கு மாற்றப்பட்டு அவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்றம். 
 
வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மேற்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று யாழ். ஊர்காவற்துறை நீதவான் எம்.லெனின்குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
 
மேலும், மன்றில் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தாக்கல் செய்த மனுவிலே, சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சிவகுமார், நிசாந்தன், சந்திரகாசன், ஜெயக்குமார், தவக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்படி அவர்களின் தலைமையின் கீழுமே மேற்படி சம்பவம் நடைபெற்றதெனவும், ஏனைய நால்வரும் இவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர் எனவும் தெரிவித்திருந்தனர்.
 
அதேவேளை மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பதுபேரும் பொலிஸார் தம்மிடம் சிங்களத்திலேயே கதைத்து தங்களை வற்புறுத்தியே வாக்குமூலமும் கையெழுத்தும் பெற்றதாக தெரிவித்தனர்.
 
இடைமறித்த நீதிமன்ற பொலிஸார் மேற்படி ஒன்பது சந்தேகநபர்களுக்கும் சிங்களம் ஓரளவு நன்றாகவே தெரியும் எனவும், இவர்களிடம் ஒழுங்கான முறையிலேயே வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
 
ஆறாவது சந்தேகநபர் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்,
 
 டீ.என்.ஏ பரிசோதனையை மீண்டும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
 
அதேநேரம் மற்றுமொரு சந்தேகநபரான சிவதேவன் நிசாந்தன் என்பவர் வித்தியாவின் கண்ணாடி தனது வீட்டிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுவது முழுப்பொய் எனவும், தன்னைப் பொலிஸார் அழைத்துச் சென்று ஒரு கடையில் வைத்தே அந்த கண்ணாடியை வாங்கி வந்து தனக்கு முன்னாலேயே தனது வீட்டில் வைத்து விட்டு எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
 
இதனையடுத்து நீதிபதி எஸ்.லெனின்குமார் அந்தக் கண்ணாடியை எதிர்வரும் 26ஆம் திகதி அன்று நீதிமன்றில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
 
சந்தேக நபர்கள் அனைவரும் பிணை பெறுவதற்கு முயன்ற போது நீதிபதி எஸ்.லெனின்குமார், இந்த மாவட்ட நீதிமன்றில் பிணை வழங்க முடியாதெனவும், இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நீங்கள் அங்கு பிணை பெறுவதற்கு முயற்சி செய்யலாமெனவும் தெரிவித்தார்.
 
அதேவேளை சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் தமக்காக எந்த ஒரு சட்டத்தரணியும் ஆஜராவதற்கு தயங்குவதோடு, பயப்படுகின்றார்கள் என மன்றில் ஒருமித்த குரலில் தெரிவித்தனர். 
 
இதனைச் செவிமடுத்த நீதவான், உங்களுக்காக சட்டத்தரணிகளை ஆஜராகும் விடயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாதென்றும் ஆயினும் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு யாராவது அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தலை மேற்கொண்டால் அது குறித்து தான் நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் தெரிவித்தார்.
 
மேலும் அடுத்து இந்த வழக்கு இம்மாதம் 26ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad