புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2015

தமிழினத்தின் மீது மீண்டுமொரு திட்டமிட்ட அழிவுக்கு இடம்கொடுக்க முடியாது: த.தே.கூ தலைவர்கள் கூட்டாக தெரிவிப்பு


தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் மீண்டுமொருமுறை நடைபெறாமல் இருக்கவேண்டும் எனில் உண்மை கண்டறியப்பட வேண்டும். பொறுப்புக்கூற
வேண்டியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். அதேவேளை, போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.
இவ்வாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் (இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட்) தலைவர்கள் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளனர்.
அவர்களின் கருத்துக்கள் முழுமையாக,
தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் மீண்டுமொருமுறை நடைபெறாமல் இருக்கவேண்டும் எனில் உண்மை கண்டறியப்பட வேண்டும். பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். அதேவேளை, போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.
நடந்தேறிய தமிழினத்திற்கு எதிரான கொடூரங்களுக்கு - பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தால்தான் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும். இதனை ஐக்கிய நாடுகள் சபையிடமும் இலங்கை அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்கவேண்டும்.
கூட்டமைப்பின் பலம் தமது வாக்குகளில் தான் தங்கியுள்ளது என்பதனை ஒவ்வொரு தமிழ் வாக்காளர்களும் மறந்து விடக்கூடாது. இந்நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர். மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் இனப்பிரச்சினையைத் தொடர விட்டதால் இந்நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 8ஆம் திகதி நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சர்வாதிகார ஆட்சி நடத்திய மகிந்த ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்டார். அதேவேளை, பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, தமிழ் பேசும் மக்களின் அமோக வாக்குகளினால் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
மைத்திரிபாலவின் ஆட்சியில் இதுவரை உண்மை கண்டறியப்படல், பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு விடயம் தவிர்ந்த ஏனைய விடயங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், தமது ஆட்சிக் காலத்திற்குள் நாட்டினுடைய அரசியல் தீர்வு விடயம் உட்பட முக்கியமான பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படவேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால உறுதியாக உள்ளார்.
அவரின் கீழ் கடந்த 7 மாதமாக இயங்கிக் கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லாதபடியால் தமிழர் நலன் சார்ந்த பல கருமங்கள் நிறைவேற்றப்படவில்லை. எனினும், தற்போதுள்ள அரசுதான் தேர்தலின் பின் மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
ஆனால், இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சியில் ஏறும் நிலை வரலாம். எனவே, இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றால்தான் நாடாளுமன்றில் பேரம் பேசும் சக்தியாக நாம் திகழமுடியும்.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் ஆட்சியாளர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச சமூகமும் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளும் சேர்ந்து திட்டங்களைத் தீட்டி தமிழர் நலன் சார்ந்த கருமங்களை நிறைவேற்ற முடியும்.
அதில் முக்கியமாக இலங்கையில் 60 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு 2016ஆம் ஆண்டில் வேண்டும் என அரசையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தி தீர்வு விடயத்தில் நாம் வெல்ல முடியும்.
எனவே, கடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக் கள் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும். தமிழ் வாக்காளர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 'வீடு' சின்னத்திற்கு தமது பொன்னான வாக்குகளை தவறாது அளிக்கவேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அதன் தலைவர்கள் கூட்டாக இணைந்து தமது நிலைப்பாட்டினை தமிழ் மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

ad

ad