புதன், ஆகஸ்ட் 05, 2015

காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து மகன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி அவரது மகன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால்தான் சசிபெருமாள் உடலை பெற்றுக் கொள்வோம் என்று அவரது உறவினர்கள் கூறிவிட்டனர். ஆசாரிபள்ளத்தில் இருந்த சசிபெருமாள் உடல் தற்போது, சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சசிபெருமாளின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து அவரது மனைவி, மகன்கள், மகள் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சசிபெருமாள் மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி அவரது மகன் விவேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், எனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இதனால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் 13ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.