புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2015

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு




தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று புதன்கிழமை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதில், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களையும், தமிழ்மொழியின் வளர்ச்சிக் காகவும், உரிமைக்காகவும் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்த தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்து வதிலும், அவர்களது பெருமைகளை வருங்கால சந்ததியினர் அறிந்து  பின்பற்றும் வகை யில்  நினைவுச்  சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்கள் எழுப்பி மரியாதை செய்வ திலும் எனது தலைமை யிலான அரசு  இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கு கிறது.  

அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், பொறியியல் அற்புதமான கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன், தென் தமிழகத்தின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் ஆகியோருக்கு மணி மண்டபங்களும்  தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டு என்னால்  திறந்து வைக்கப்பட்டன.  

மேலும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியா தைச் சுடரொளி ஜீவரத்தினம், மனு நீதிச் சோழன், சுவாமி சகஜானந்தா, ஹைதர் அலி - திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்க வும்,  தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர்  சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்ப வும் என்னால் ஆணையிடப் பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.  

நடிகர்களில் சிறப்பிடத்தைப் பெற்றவரும், 'இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தன் திறமையை வெளிப் படுத்தியதன் காரணமாக தந்தை பெரியாரால் 'சிவாஜி கணேசன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவரும், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவரும், 'நடிகர் திலகம்' என்று மக்களால் போற்றப்பட்டவரும்,  'கலைமாமணி', 'பத்ம ஸ்ரீ',  'பத்மபூஷன்', 'செவாலியே',  'தாதா சாகேப் பால்கே விருது' ஆகிய விருதுகளுக்கு சொந்தக்காரரும், 'வீர பாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்', போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்து, அவர்களின் பங்களிப்பினை திரைப்படங்கள் மூலம், பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றவருமான சிவாஜி கணேசனின் கலைச் சேவையை பாராட்டிடும் வகையிலும், அவரது நினைவைப் போற்றிடும் வகையிலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று,  நடிகர் சங்கம் சார்பாக நினைவகம் அமைக்கும் வகையில், சென்னை மாவட்டம், அடையாறு பகுதி சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே உள்ள பொதுப்பணித் துறைக்கு  சொந்தமான  65 சென்ட்  நிலத்தினை  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு  வழங்கிட 26.9.2002 அன்று நான் உத்தர விட்டேன். 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சிவாஜி கணேசனுக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கித் தரும்படி, கேட்டுக் கொண்ட தன் பேரில் நான் இந்த உத்தரவை வழங்கினேன்.  அதன் பேரில் மைலாப்பூர் வட்டாட்சியர் அவர்களால் இந்த இடம் தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைக் கப்பட்டது.  

அவ்வாறு ஒப்படைக்கப் பட்ட இடத்தின் ஊடே நீதியரசர்கள் குடியிருப்பு களுக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால், நீதியரசர்கள் குடியிருப்புக்குச் செல்ல தனியே சாலை அமைப்பதன் செலவான 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்திட வேண்டுமென அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.  

தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களால் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க இயலும் என தெரிவித்து அதனை 26.7.2004 அன்று வழங்கினர்.  எனவே, புதிய அணுகு சாலையை அமைப்பதற்கான மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எனது தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.  

சிவாஜி கணேசன் மணி மண்டபம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் ஒன்றை 13.2.2006 அன்று எனது தலைமையிலான அரசே அமைத்தது.  தென்னிந்திய நடிகர் சங்கம், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தாங்களே அமைத்து விடுவோம் என்று தெரிவித்த காரணத்தால் எனது தலைமையிலான அப்போதைய  அரசு மணி மண்டபம் கட்டுவதற்கான  நடவடிக்கையை எடுக்கவில்லை. சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும் என்று அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் நான் அப்போதே வழங்கியிருப்பேன். 

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக எனது அரசால் வழங்கப்பட்ட இடத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இதுவரை நினைவகம் அமைக்கப்படவில்லை. அந்த இடத் தில் தமிழக அரசே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

ad

ad