புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2015

வழக்குகளில் இருந்து தப்பிக்க மகிந்தவின் கடைசி அஸ்திரம்


நாடகத்தின் திரை விலகி மீண்டும் அடுத்த காட்சி தொடங்கியிருக்கிறது. இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கமீண்டும் பிரதமரான நிலையில் தேசிய அரசை ஏற்க மறுத்துள்ளது ராஜபக்ஷ ஆதரவாளர்கள் கோஷ்டி. 
வழக்குகளில் இருந்து தப்பிக்க கடைசியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு குறிவைத்திருக்கிறார் அவர்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் கடந்த ஜனவரி 8ம் திகதி நடந்தது. அப்போது இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்த மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் குதித்தார். ரணில் விக்கிரமசிங்கவின்  ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கியதுடன் தமிழர்களின் ஆதரவையும் பெற்றதால் அவரே வென்றார். தேர்தல் ஒப்பந்தத்தின்படி பிரதமராகப் பொறுப்பேற்றார் ரணில். இதன்பின்னர் சுதந்திரக் கட்சியின் தலைவராக சிறிசேன பதவியேற்றது தனிக்கதை. அதாவது எதிரெதிரான இரண்டு பெரிய கட்சிகள் ஆட்சியில் பங்கேற்றிருந்தன.

கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த. அந்தக் கட்சி பெரும்பான்மை பெற்றால் அவர் மீண்டும் பிரதமர் ஆவார் என்ற யூகங்களும் நிலவி வந்தன.

ஆனால் இலங்கை சுதந்திரக் கட்சிக்கு 95 இடங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 இடங்களும் கிடைத்தன. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களைப் பெற்று மூன்றாமிடம் பெற்றது, இலங்கை பாராளுமன்ற விதிகளின்படி மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் பெரும்பான்மை பெற 113 பேரின் ஆதரவு வேண்டும்.

இதனால் மைத்திரி தலைமையில் இலங்கை சுதந்திரக் கட்சி அவசரமாகக் கூடியது. ரணிலுக்கு ஆதரவளிப்பது என்று அதில் முடிவெடுக்கப்பட்டது. இதனால் ரணிலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை எதிர்பார்க்கும் தேவையில்லாமல் போனது. தற்போது இரு பெரிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசு அமைக்கவுள்ளன.

இதன்படி பிரதமர் நாற்காலியில் 4வது முறையாக ஜம்மென்று அமர்ந்திருக்கிறார் ரணில். ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட புரட்சிக்கு மீண்டும் ஆதரவு பிறந்திருக்கிறது. வெற்றியாளர் தோல்வியாளர் என்றா பேதம் இல்லாமல் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் சம அந்தஸ்துடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதவியேற்றதும் சொல்லியிருக்கிறார். பதவியேற்பதற்காக விழா அரங்கிற்குள் ரணில் நுழைந்தபோது முன் வரிசையில் அமர்ந்திருந்த தலைவர்கள் எழுந்து நின்று வரவேற்றனர். ரணில் கடந்து செல்கையில் அவருக்கு மகிந்த கைகுலுக்க முயன்றார். அதை ரணில் கவனிக்காமல் சென்றார். அது தற்செயலாக நடந்ததா என்பது தெரியவில்லை.

ஆனால் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள மகிந்த தன்னையும் குடும்பத்தினரையும் காப்பாற்றிக்கொள்வதற்காக அரசியலில் ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் பெற பகீரதப்பிரயத்தனம் செய்து வருகிறார்.

பிரதமர் ஆசையும் தகர்ந்ததால் அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க முயன்றுள்ளார்.

இதற்காக சுதந்திர கட்சியில் உள்ள தனது ஆதரவு எம்.பி.க்களை தேசிய அரசுக்கு எதிராக தூண்டி விட்டிருக்கிறார்.

இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்களில் ஒரு கோஷ்டியினர் மேற்கு மாகாண முதல்வரும் தற்போது எம்.பி.யாக தேர்வாகியுள்ளவருமான பிரச்சன்ன ரணதுங்க வீட்டில் கடந்த வாரம் கூடி விவாதித்தனர். அவர்களில் பலர் ராஜபக்ஷ ஆதரவாளர்கள். ஆட்சியில் ரணிலுகு பவர் அதிகமாகி விடக்கூடாது, சுதந்திரக் கட்சியின் பலம் அதிகமாக இருக்கவேண்டுமென அவர்கள் பேசியிருக்கிறார்கள்.

இதற்கிடையிலே தேசிய அரசின் அமைச்சர்களை தேர்வு செய்வது பற்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் ரணிலும் விவாதித்தனர். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரியிடம் ரணில் விவாதித்து அமைச்சர்கள் பட்டியலை தயாரித்திருக்கிறார். அமைச்சரவை ஒரு வாரத்தில் பதவியேற்கும் என மைத்திரி தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மகிந்தவுக்கு தரவே கூடாது என்றும் சுதந்திரக் கட்சியில் இளைஞர் ஒருவருக்கு அளிக்க வேண்டும் என்றும் சந்திரிக்கா கூறியிருக்கிறார். சந்திரிக்கா ஆரம்பத்திலிருந்தே மகிந்தவுக்கு எம்.பி. சீட் தரக் கூடாது, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடாது என்றெல்லாம் பேசி தடுத்தவர். இதனால் மகிந்த ஆதரவாளர்கள் கொதித்து போய் இவர் யார் எல்லாவற்றையும் முடிவு செய்தவதற்கு என கேட்டுள்ளனர்.

இந்நிலையில் சுதந்திர கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள், ஜனாதிபதியை சந்தித்து தாங்கள் எதிர்க்கட்சியாகவே செயற்பட விரும்புகின்றோம் எனக் கூறியிருக்கிறார்கள். அதை ஜனாதிபதி மைத்திரியும் ஏற்றுள்ளதாக அந்த எம்.பிக்களில் ஒருவரான மகிந்த மரவீர தெரிவித்திருக்கிறார். அதன்படி சுதந்திர கட்சியின் ஒரு பிரிவினர் எதிர்க்கட்சியாக அமரப் போகிறார்கள்.

சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியிலும் பங்கேற்றுக்கொண்டு எதிர்க்கட்சியாகவும் செயற்படுவது முரணான ஒன்று என்பது சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

ஜனநாயகம் தழைத்தோங்க, 16 எம்.பிக்கள் பலத்துடன் மூன்றாவது நிலையில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத்தான் முக்கிய எதிர்க்கட்சி அந்தஸ்து தரவேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் கூறுகயில் நாங்கள் 16 எம்.பி.க்களுடன் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கின்றோம். முக்கிய இரு கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்பதால் நாங்கள்தான் முக்கிய எதிர்க்கட்சியாக செயற்படுவோம். இதை ஜனாதிபதி அங்கீகரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

முந்தைய ஆட்சியாளர்களைப் போல சிங்களவர்களை திருப்திப்படுத்தும் வேலைகளீல் அரசு இறங்கிவிடக்கூடாது என்ற நடுநிலையாளர்களின் குரல்களும் இலங்கையில் ஒலிக்க தொடங்கியிருக்கின்றன.

இதற்கிடையே தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யும் பணிகளில் மைத்திரி அக்கறை காட்டி வருகிறார். கடந்த சனியன்று சம்பூர் கிராமத்தில் தமிழர்கள் மீள்குடியமர்த்தும் பணிகளை அவரும் சந்திரிக்காவும் சேர்ந்து துவக்கி வைத்தனர். 25பேருக்கு நில ஆவணங்களை அவர்கள் வழங்கினர்.

எனினும் அந்தக் கிராமத்தில் மின்சாரம் குடிநீர் வசதிகள் போதிய அளவில் இல்லை என்று தமிழர்கள் கூறியுள்ளனர். இதை ஏற்று தமிழர் பகுதிகளில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவதாக ஜனாதுபதி மைத்திரி உறுதியளித்திருபது நல்லதொரு ஆரம்பமே.

இருப்பினும்  மஹிந்த ராஜபக்‌ஷவும் குடும்பத்தினரும் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்கு ஏது வழி என சிந்தித்தவாறே காய்களை நகர்த்தி வருகின்றனர்.

உதய்
குமுதம்

ad

ad