புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

நரபலி புகாரில் 8 பேரின் எலும்புக்கூடுகள் சிக்கின : தோண்டும் பணி நிறைவு



கிரானைட் குவாரி  நரபலி புகாரில் நான்காவது நாளான இன்று நடைபெற்ற தோண்டும் பணியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு சிக்கியது.  இதுவரை 8 பேரில் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து தோண்டு பணி நிறைவு பெற்றது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவரிடம் கிரானைட் குவாரியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக சேவற்கொடியோன் என்பவர் புகார் தெரிவித்தார். அதன்பேரில் மேலூரை அடுத்த கீழவளவு சின்னமலம்பட்டி மணிமுத்தாறு ஓடையில் கடந்த வாரம் தோண்டிப் பார்த்ததில் ஒரு குழந்தை, 2 பெண்கள், ஒரு ஆண் என 4 பேரின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி அழகுராஜன் கீழவளவு போலீசில் புகார் தெரிவித்தார்.

இந்தப்புகாரின் அடிப்படையில்,  பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர். பழனிச்சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, ஜேசிபி டிரைவர் பரமசிவம் ஆகிய 4 பேர் மீது தடயங்கள் அழித்தல், சந்தேக மரணம் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையொட்டி அவர்கள் கீழவளவு போலீசில் ஆஜராகி போலீசாரின் விசாரணைக்கு பதில் அளித்தனர்.

இதையடுத்து, ஏற்கனவே தோண்டப்பட்ட இடத்தில் மேலும் 10 அடி தோண்டி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடிதம் அனுப்பினார். இதன்பேரில் கீழவளவு அருகே சின்னமலம்பட்டி மணிமுத்தாறு ஓடையில் கடந்த 18-ந்தேதி மீண்டும் தோண்டும் பணி நடந்தது. அப்போது 2 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.  ஆக, மொத்தம் 6 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்தது. 

 நேற்று 3-வது நாளாக அங்கு தோண்டும் பணி நடந்தது. தொடர்ந்து தோண்டியதில் அதே இடத்தில் இருந்து மனித எலும்புக் கூடு சிக்கியது. இதையும் சேர்த்து 7 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.  நேற்று மாலை 5.30 மணிவரை தோண்டும் பணி நடந்தது. இதன்பின் மீண்டும் இன்று 21.9.2015 தோண்டும் பணி தொடர்ந்தது.

இன்று 4- வது நாளாக நடைபெற்ற தோண்டும் பணியில் மேலும் ஒரு எலும்புக்கூடு கிடைத்தது.   ஆக, மொத்தம் இதுவரை 8 பேரின் எலும்புக்கூடுகள் கிடைத்தன.  8 பேரின் எலும்புக்கூடுகள் கிடைத்ததை அடுத்து தோண்டும் பணி நிறைவு பெற்றது.

இந்த எலும்பு கூடுகள் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களா? அல்லது அந்த பகுதியைச் சேர்ந்த இயற்கை மரணம் அடைந்தவர்களின் எலும்புகளா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ad

ad