புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2015

கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் இலங்கைக்கு ஏன் பொருத்தமற்றது?


இலங்கையில் நீர் வளங்கள் நிறைய உண்டு. உண்மையில் எமது குடிநீர்த் தேவை, வீட்டுப்பாவனைத் தேவை, விவசாய மற்றும் கைத்தொழில் பாவனையின் தேவை போன்றவற்றிற்கும் மேலதிகமான அளவில் நீர் உண்டு. 
எமக்கு போதுமான அளவு மழை வீழ்ச்சி உண்டு. எம்மிடம் வற்றாத நதிகள், நீரோடைகள், வாவிகள், குளங்கள் மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பாக நீர் வில்லைகள் உண்டு. தவறான நீர் நிர்வாகத்தால் மிக அதிக அளவிலான நன்னீர் வீணே கடலில் செல்ல விடப்படுகிறது.
இதனால் தான் "சொர்க்கத்திலிருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும் மனிதனால் பயன்படுத்தப்படாமல் கடலுக்கு செல்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது." என மன்னன் பராக்கிரமபாகு பிரகடனம் செய்தான்.
நீர் நிலைகளை எண்ணை, கிறீஸ், இரசாயன உரம் போன்றவற்றால் மாசடையா வண்ணம் பாதுகாத்து ஏனைய உலக நாடுகளில் செய்வது போன்று மீள் விநியோகம் செய்தால்
மிகவும் கட்டுப்படியான விலையின் தேவையான அளவு தரமான நீரை ஒவ்வொருவருக்கும் வழங்க முடியும்.
இலங்கையில் போதுமான அளவு நன்னீர் வளம் மட்டுமல்ல அதனைக் கையாளத் தேவையான நிபுணத்துவம் உடைய குடிசார் பொறியியலாளர்கள், இயந்திர பொறியியலாளர்கள், மின் பொறியியலாளர்கள், புவியியலாளர்கள் போன்றோரும் உள்ளனர்.
இவர்களூடாக இயற்கையாய் அமைந்த நீர் வளத்தை ஒழுங்குபடுத்தி ஒவ்வொரு இலங்கையர்களதும் நீர்த் தேவைகளை திருப்தி செய்ய முடியும். எமது நாட்டின் நீர்ப்பாசன நாகரிகம் உலகம் புகழ் வாய்ந்தது.
துரதிஷ்டவசமாக எமது அரசியல் வாதிகள் இதுபற்றி அறியாமை உடையவர்களாகவும் அத்துடன் அறிய மறுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் தான் கடல் நீரை  சுத்திகரித்து குடி நீராக்கும் அமெரிக்க கம்பெனிகளின் வர்த்தக அழுத்தத்திற்கு உள்ளாகி அவர்களால் வழங்கப்படும் தரகுப்பண எதிர்பார்ப்புடன் செயல்படுகிறார்கள்.
அதாவது எஸ்கிமோவர்களுக்கு குளிர்சாதனப் பெட்டி விற்க வந்துள்ளார்கள்.
1. கடல் நீரை குடிநீராக்கும் செயற்பாடு செலவு கூடியது. இங்கு இரு வகையான வழிமுறைகள் கடல் நீர் உப்பை நீக்க பயன்படுத்தப்படுகிறன. ஒன்று சவ்வூடு பரவல்
முறை, மற்றையது வடித்தல் முறை.
இரு முறைகளிற்கும் மூலதனச் செலவும் இயங்க வைக்கும் செலவும் மிக அதிகம். ஒருமித்தபடி பார்க்கப் போனால் இம் முறைகள் 5 மடங்கு மேலதிகமான செலவை வேண்டி நிற்பவை.
இந்த ஒரு காரணத்தினால் தான் உலகின் செல்வந்த நாடான அமெரிக்கா கூட இத் தொழில் நுட்பத்தை நிராகரித்துள்ளது. ஏன் இந்த தந்திரத்தில் ஈடுபடுகிறீர்கள்? என்று எமது அரசியல்வாதிகளைப்பார்த்து நாம் கேட்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் இதற்கான செலவை செலுத்தத் தயாரானால் நாம் ஏன் செலவைப்பற்றி கவலைப்பட வேண்டும்? என ஒரு அரசியல்வாதி கேட்டார். சிறு பிள்ளைத்
தனமாக, பொறுப்பற்ற விதத்தில் கேள்வி கேட்கும் இத்தகையோர் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவெனில் இத்திட்டத்திற்கு செய்யப்படும் செலவு நேரடியாகவோ,
மறைமுகமாகவோ மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டவை மட்டுமேயாகும்.
இதற்கும் மேலாக மக்களுக்கு தேவையான பூர்த்தி செய்யப்படாத பல தேவைகள் இருக்கும் போது ஏன் இத்தகைய வளங்களை வீண் விரயஞ் செய்ய வேண்டும்?
கடல் நீரிலிருந்து உப்பு நீக்கம் செய்யும் செயற்பாடு அதிக சக்தியில் தங்கி நிற்கிறது. இந்த சக்தி தேவைக்கு அதிக அளவில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் தங்கி நிற்க வேண்டும்.
இது நீண்ட காலத்திற்கு நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய செயற்பாடு அல்ல. உப்பு நீரை நன்னீராக்க தேவையான சக்தியை பெற பெற்றோலிய எரிபொருளை பிரத்தியேகமாக பாவிக்க வேண்டும்.
ஏற்கனவே நாங்கள் சூழலை மாசடையச் செய்து மேலும் ஓசோன் மண்டலத்தை வெறுமையாக்கி பச்சை வீட்டு விளைவால் வளிமண்டலம் வெப்பமடைந்து கடல் நீர் மட்டம் உயர்ந்து மனிதன் வாழும் கரையோர வாழிடங்களை நீண்ட காலமாக இழந்து வருகிறோம்.
கடல் நீரிலிருந்து உப்பு நீக்கம் செய்யப்படும் முறையானது நீடித்து நிலைத்து நின்று எமது நீர்த் தேவையை பாதுகாக்கும் ஒரு முறையல்ல. செலவு கூடியதும், குறுகிய கால
நலன் சார்ந்ததுமான இத் திட்டத்தால் நீண்ட கால பேரிடரை உருவாக்கவுள்ளோம்.
இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்பத்திலும், சக்தியிலும் என்றைக்குமே தங்கியிருக்கும் நிலையை அடைவோம். குடிக்கும் நீருக்கு கூட மற்றவர்களின் தயவை நாடியிருக்கும் நிலையை அடைவோம்.
2. நீடித்து நிலைத்து நிற்றல் - இது தண்ணீர்த் தேவைக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு விடயத்திற்கும் அதாவது, வேலை, வாழ்வாதாரம், அபிவிருத்தி, பகிர்ந்தளிக்கப்பட்ட
அதிகாரம், பொருளாதாரம், கலாசாரம், கல்வி போன்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும் இத்தகைய விடயங்களில் குறுகிய கால நேரத்தை மட்டும் பார்க்கக் கூடாது.
நீண்ட கால நோக்கும், கொள்கையும் தேவை. நாம் எப்போதும் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய தீர்வை ஒரு கொள்கையாக, ஒரு தேவையாக கருத வேண்டும். கடல் நீரை நன்னீராக்கும் செயல் நிச்சயமாக நீடித்து நிலைத்து நிற்கக் கூடியதல்ல.
3. மாகாணங்களை ஆட்சி செய்யும் போது (இலங்கையை ஆட்சி செய்யும் போது கூட) சூழலியல் விடயங்களில் அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.
இது நீர் விநியோகம், மின் பிறப்பாக்கம், அபிவிருத்தி திண்மக் கழிவுகள் அகற்றல், கழிவு நீர் அகற்றல், விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து முதலிய எல்லாத் துறைகளிலும் பிரயோகிக்கப்பட வேண்டும்.
இதிலுள்ள ஒவ்வொரு துறைகளையும் பிழையாக நிர்வகித்தால் மிகப் பாரிய அளவில் சூழலியல் பாதிப்பு ஏற்பட்டுவிடும். நான் இங்கு அரசைக் கூறவில்லை. ஆனால் அரசுக்கு இத் தவறுகளை திருத்தும் அதிகாரம் உண்டு.
அத்துடன் மதி நுட்பமாக தமது அதிகாரத்தை விருத்தியடையச் செய்து நிலைமைகளை மாற்ற வேண்டும். இது வரைக்கும், எனது கருத்துப்படி அரசு இத் தவறுகளை மாற்றவில்லை.
அத்துடன் மிக மோசமான கொள்கைத் தீர்மானங்களை எடுத்துள்ளது. இதற்கு எடுத்துக் காட்டாக இரணைமடுத் திட்டம், சுன்னாகம் எண்ணெய் மாசு விடயம், மற்றும் மீன்பிடி
வளங்களை பாதுகாத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
4. நிறைந்த மழை வீழ்ச்சியாலும், வற்றாத ஆறுகளாலும், நீரோடைகளாலும் வடக்கில் நிலத்தடி நீர் வில்லைகளாலும் தேவைக்கு பொருத்தமான நல்ல நீரை, நல்ல சூழலை
எந்தவித செலவும் இன்றி இயற்கை, இலங்கைக்கு அள்ளிக் கொடுத்துள்ள போது ஏன் நாம் செலவு கூடிய சுற்றாடலை பாதிக்கும், தங்கி நிற்கும், நீடித்து நிலைத்து நிற்காத,
வெளிநாட்டு முதலீட்டுடன் கூடிய தொழில் நுட்பத்திற்கு செல்ல வேண்டும்?
இயற்கை எமக்கு அளித்த கொடையை நிராகரித்து ஏன் செலவு கூடியதும், பராமரிக்க கடினமானதுமான செயற்கையான தீர்வுகளை முன்னெடுத்து வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கும், அவர்களுடைய உள்ளூர் ஊக்குவிப்பாளர்களிற்கும் பணத்தை வாரி இறைக்க வேண்டும்?
நீருக்கு அதிக விலையை செலுத்துவதைத் தவிர வேறென்ன பயனை எமது மக்கள் பெற்றுவிடப் போகிறார்கள்? இதில் எந்த தர்க்கமும் ஒழுங்கும் இருப்பதாக தெரியவில்லை.
எமக்கு உப்பு நீக்கும் தொழில் நுட்பத்தை விற்பதற்காக மற்றுமொரு பொய்யை அல்லது கட்டுக் கதையை ஆர்பரிப்புடன் பிரசாரம் செய்கிறார்கள். அதாவது நாம் தற்போது கொண்டு செல்லும் நீரிலும் பார்க்க உப்பு நீக்கம் செய்யப்பட்ட நீர் தூய்மையானது என்பதே அதுவாகும்.
உண்மையில் நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல. இது மோட்டார் வண்டி மின்கலத்திற்குத்தான்(பழைய வகை) உகந்தது. புதிய வகை மின்கலங்கள் பராமரிப்பற்று சேவையாற்றுபவை.
"விஸ்கி" க்கு பதிலாக தூய மதுசாரத்தை யாரும் குடிக்க மாட்டார்கள். தூய உப்பு (சோடியம் குளோரைட்) உடலுக்கு நல்லதல்ல. அதனால்தான் உப்புடன் அயடினையும் சேர்க்கிறோம்.
தூய்மை, கன்னித் தன்மை போன்ற பழைய கருதுகோள்கள் 21ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தாதவை. குடிநீரில் நுண் கிருமிகள், பீடை கொல்லிகள், நைத்திரேற்றுக்கள், தொங்கும் அசுத்தங்கள், நாற்றம், நிறம் என்பவை இல்லாது இருக்க வேண்டும்.
ஆனால் தூய்மையாக இருக்கக் கூடாது. சில உப்புக்கள் விரும்பப்படுகின்றன. பற்கள் சிதைவடைவதை தடுக்க சில நாடுகள் நீரில் புளோரினை சேர்க்கின்றன.
நாங்கள் முகங்கொடுக்கும் பல பிரச்சினைகள் தொடர்பாக எந்த வித தீர்மானங்களும் எடுக்காதவர்களாகவே எமது அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களது தீர்மானங்களில் விஞ்ஞானத்திலும் பார்க்க அறியாமையே ஆட்சி செலுத்துகிறது.
மோசடிகளால் தங்களை வளப்படுத்திக் கொண்டு அதிகாரத்தில் இருக்கிறார்கள். பொறுப்பற்ற வகையில் செலவு செய்தல், வறுமையுடன் கூடிய பொருளாதார சார்பு நிலையை
பேணல், கடன்களை உருவாக்குதல் போன்ற அபாயங்களுக்கு எதிராக எமது மக்களை காக்க தொடர்சியாக அறைகூவல் விடுவிக்க வேண்டும்.
மழைவீழ்ச்சி, ஆறுகள், நீரோடைகள், நிலத்தடி நீர் போன்ற இயற்கை நீர் வளங்கள் அற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு தூய நீர் வழங்க அமெரிக்க கம்பெனிகளால் உருவாக்கப்பட்டதே இந்த உப்பு நீக்கும் தொழில்நுட்பம்.
அமெரிக்க, ஐரோப்பிய கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தும் நாடுகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. பெருந்தொகையான இலாபத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெறும் இக் கம்பெனிகள், தற்போது எங்களை மயக்கி, தந்திரமாக எங்களுக்கு பொருத்தமற்ற இத் தொழில்நுட்பத்தை வாங்கும்படி செய்து பெரும் இலாபத்தை சம்பாதிக்க முயல்வதோடு எமது மக்களை வறுமையில் தள்ளி என்றுமே குடிநீருக்காக அவர்களில் தங்கி நிற்பவர்களாக மாற்ற முயல்கிறார்கள்.
நாம் முட்டாள்களாக இருந்தால் மட்டுமே எப்போதுமே உயிர் வாழ்தலில் அவர்களில் தங்கியிருக்கும் இப் பொறியில் சிக்குவோம். எமது மடமையை பயன்படுத்தி தங்களது  வங்கிகள் நிரப்பப்படுவதை எண்ணி அவர்கள் தனிப்பட்ட ரீதியில் நகைத்துக் கொள்வார்கள்.
சவுதி அரேபியாவிலும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலுமுள்ள உரிமம் பெற்ற அமெரிக்க கம்பெனிகள் தாம் கட்டுப்படுத்தும் எண்ணைக் கிணறுகளிலிருந்து பெருந்தொகையான இலாபத்தை பெற்று வருகின்றன.
அது மட்டுமல்லாது மத்திய கிழக்கிலும், குறிப்பாக சவுதி அரேபியாவிலும் உள்ள எல்லா வகையான கட்டிடத் தொழில்கள், இராணுவ ஆயுத விநியோகங்கள், விவசாய நுண் நீர்ப்பாசனம், எனப் பல்வேறு துறைகளையும் இக் கம்பெனிகள் கட்டுப்படுத்துகின்றன.
அமெரிக்கா உண்மையிலேயே ஒரு பொலிஸ்காரனைப் போல சவுதி அரேபியாவிலுள்ள உப்பு நீக்கும் தொழில்நுட்பத்தை ஆட்சி செய்கிறது. சவுதி அரேபியா இப்போது அமெரிக்காவின் ஒரு பொம்மை அரசு. எமக்கு வரப்போகும் பல தீமைகளுக்கு மைல் கல்லாக அமையப்போவது இந்த உப்பு நீக்கும் செயற்பாடே.
நாம் எமது பிரதிநிதிகளை தெரிவு செய்தது, எமது மக்களிற்கு மட்டும் சேவை செய்யவே ஒழிய அமெரிக்க கம்பெனிகள், ஐக்கிய அமெரிக்க குடியரசிடம் இருந்து எந்த வகையான சுய இலாபங்களை பெறுவதற்கல்ல என்பதை நாம் ஒரு போதும் மறந்துவிடக்கூடாது.
பொறியியலாளர் சூரியசேகரம்
தமிழில் இ.கிருஸ்ணகுமார்

ad

ad