புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2015

போர்க்குற்றங்களை ஒப்புக்கொள்ள தயாராகிறதா இராணுவம்? 


போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ள நிலையில், போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை விடுவிப்பதற்கான முயற்சிகளில் இலங்கை இராணுவம் ஈடுபட்டிருக்கிறது.
கடந்தவாரம், கொழும்பில் நடந்த பாதுகாப்புக் கருத்தரங்கு கூட, போர்க்குற்றச்சாட்டில் இருந்து இராணுவத்தை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கையே என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டார் இராணுவத் தளபதி.
போர் முடிவுக்கு வந்த பின்னர்,  2010ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவம் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்தி வருகிறது.
ஆரம்பத்தில், இது இலங்கை இராணுவத்தின் போர் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்காகவே ஒழுங்கு செய்யப்பட்டது.
அதற்கு ஒரு பக்கத்தில் எதிர்ப்பும் கிளம்பியது. குறிப்பாக, மனித உரிமைகள் மீறப்பட்ட ஒரு போரின் அனுபவங்களையே இலங்கை இராணுவம், மற்றைய நாடுகளுக்குக் கற்றுக்கொடுப்பதாக எதிர்ப்புக் கிளம்பியது.
இதனால், மனித உரிமைகளை காரணம் காட்டி, பல நாடுகள் இதனைப் புறக்கணித்தன. அமெரிக்கா கூட இந்தக் கருத்தரங்கிற்கு தனது தூதுவரை அனுப்புவதை தவிர்த்து வந்திருக்கிறது.
இம்முறை நிலைமைகள் மாறினாலும் கூட, அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்புக்கு, இராணுவத் தளபதியால், அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் இதில் பங்கேற்கவில்லை.
அமெரிக்காவின் அணுகுமுறைகள் மாறியிருப்பதால், இம்முறை தமது அழைப்பை அமெரிக்கத் தூதுவர் ஏற்றுக்கொள்வார் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.
அதுபோலவே, இராணுவம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை இந்த மாநாட்டின் மூலம் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
போர்க்குற்றச்சாட்டுகளை மறைத்து, தனது பக்க நியாயங்களை எடுத்துக் கூறவே இலங்கை இராணுவம் இந்த பாதுகாப்புக் கருத்தரங்கைப் பயன்படுத்தி வந்தது.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த மாநாட்டை நடத்தியும் கூட இலங்கை இராணுவத்தினால் தனது இலக்கை அடைய முடியவில்லை.
அவ்வாறு அடைய முடிந்திருந்தால், இராணுவத் தளபதி, மேற்கண்டவாறு கூறியிருக்க முடியாது.
அதேவேளை, இம்முறையும் கூட அமெரிக்கத் தூதுவர் போன்றோரை இந்த மாநாட்டில் பங்கேற்கவைக்க முடியாது போனது இலங்கை இராணுவத்துக்கு ஏமாற்றம் அளிக்கின்ற ஒரு விடயமாகவே இருக்கும்.
இலங்கை இராணுவம் மீது ஆரம்பத்தில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது, அதனை அரசாங்கமும், இராணுவமும் முழுமையாக நிராகரிக்கின்ற நிலை ஒன்றே காணப்பட்டது.
தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையில் 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு இராணுவ விசாரணைக் குழுவும் கூட, போர்க்குற்றங்கள் நடந்ததா என்று விசாரணை நடத்தியது.
அதன் அறிக்கையில், இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவேயில்லை என்று கூறப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறியது.
அந்த அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுமாறு சர்வதேச சமூகம் கோரிய போதிலும், அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. பின்னர் சர்வதேச நெருக்கடிகள் தீவிரம் பெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,
போர்க்குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்காமல், ஒரு சில சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று கூறும் நிலைக்கு அரசாங்கம் வந்திருந்தது. தற்போதைய அரசாங்கம், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்ளக விசாரணையை நடத்த தயார் என்று கூறுகிறது.
ஐ.நா. அறிக்கை வெளிவர முன்னரே அது பற்றிய வாக்குறுதிகளை சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறது இந்த அரசாங்கம்.
தற்போதைய அரசாங்கத்துக்கு போர்க்குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கும் விடயத்தில் அவ்வளவாக சிக்கல்கள் இல்லை.
ஏனென்றால், போரை நடத்தியது கடந்த அரசாங்கம். எனவே, கடந்த அரசில் இருந்தவர்கள் தான் மாட்டிக் கொள்வார்கள்.
ஆனால், படையினரையும், கடந்த அரசாங்கத்தில் இருந்து போரை நடத்தியவர்களையும் சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்ல அனுமதித்தால், தற்போதைய அரசாங்கத்தை சிங்கள மக்கள் கவிழ்த்து விடுவார்கள் என்ற அச்சம் தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கிறது.
இதனால், போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதில் கடந்த அரசாங்கத்தை விட கூடுதல் பொறுப்பு தனக்கே இருப்பதாக கருதுகிறது தற்போதைய அரசாங்கம்.
உள்நாட்டு விசாரணைக்கு இணங்கியதன் மூலம், சர்வதேச சமூகத்தை திசை திருப்பிய தற்போதைய அரசாங்கம், மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ போன்றோரைப் பாதுகாத்து விட்டதான விமர்சனங்கள் ஏற்கனவே தோன்றியுள்ளன.
இருந்தாலும், ஒட்டுமொத்த போரிலும், ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறத்தக்க நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லை.
இராணுவத்தின் நிலைப்பாடு அதற்கு மாறானதாக இருந்தாலும், அரசாங்கத்தின் உத்தரவை மதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009இல் மஹிந்த ராஜபக்ஷ செய்து கொண்ட உடன்பாட்டினால் தான், இந்த உள்நாட்டு விசாரணை செய்யப்பட வேண்டிய நிலை வந்திருப்பது போலவே ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல கூறியிருக்கிறார்.
இது போர்க்குற்ற விசாரணைக்கான பொறுப்பையும் முன்னைய அரசாங்கத்தின் மீதே சுமத்துகின்ற முயற்சி என்றே கூறலாம்.
அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து முன்னைய அரசாங்கம் விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கியிருந்தால், சர்வதேச தலையீடு ஏற்பட்டிருக்காது என்று முன்னைய அரசாங்கத்துடன் இருந்த மஹிந்த சமரசிங்க போன்றவர்கள் இப்போது கூறுவதையும் கேட்க முடிகிறது.
இந்தக் கட்டத்தில் இராணுவத் தலைமையகம், கடந்த மாத இறுதியில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற வீடியோ தொடர்பாக 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விசாரணை இன்னமும் தொடர்வதாகவும் கூறப்பட்டிருந்தது.
லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைக் குழுவே இதுபற்றி விசாரிப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த விசாரணைக் குழு முதற்கட்ட அறிக்கையைக் கொடுத்து விட்டு நழுவிவிட்டது. அதற்குப் பின்னர் விசாரணைகள் நடக்கவில்லை.
அப்படி விசாரணை நடந்திருந்தால், யார் தலைமையில் நடக்கிறது என்பதை இராணுவம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
ஏனென்றால், இந்த விசாரணைக்குழுவின் முதல் கட்ட அறிக்கை கையளிக்கப்பட்ட பின்னர், முன்னைய அரசாங்கத்தினால் லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு ரஷ்யாவில் இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டது. அங்கிருந்து வந்து, தான் அவர் இராணுவத் தளபதி பதவியை ஏற்றுக்கொண்டார்.
எனவே, 2013இல் இருந்து விசாரணை நடக்கிறது என்றால், லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்குப் பதிலாக அதை யார் தலைமையேற்று நடத்துகிறார் என்று இராணுவத் தலைமையகம் அறிவித்திருக்க வேண்டும்.
இப்போது திடீரென அந்த விசாரணை நடக்கிறது என்று இராணுவத் தலைமையகம் அறிவித்திருப்பது புதிய சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
சனல் 4 வீடியோவின் உண்மைத்தன்மை, அதில் உள்ள படையினரை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளே நடப்பதாக இராணுவத் தலைமையகம் கூறியிருக்கிறது. முன்னர் இந்த வீடியோ திரிபுபடுத்தப்பட்டது, போலியாகத் தயாரிக்கப்பட்டது, புலிகளின் நடிப்பு என்றெல்லாம் இராணுவம் கூறியது.
ஆனால், இப்போது, திடீரென இந்த விசாரணை தொடர்வதாக இராணுவம் கூறியிருப்பதால், அந்த வீடியோ உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இராணுவமும் அரசாங்கமும் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அவ்வாறு செய்வதன் மூலம், தாம் முன்னெடுக்கவுள்ள உள்நாட்டு விசாரணைகளின் மீது, தமிழ் மக்கள் மத்தியிலும், சர்வதேச அளவிலும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த அரசாங்கம் முனையலாம்.
அதேவேளை, சனல் 4 வீடியோவில் உள்ள படையினரை அடையாளம் கண்டு, அவர்களிடம் விசாரணை நடத்தவும் கூட அரசாங்கம் உத்தரவிடலாம்.
ஏனென்றால், அது மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணை என்பதால், அதன் அறிக்கை மற்றும் அதன் மீதான நடவடிக்கைக்குத் தாம் காரணமல்ல என்று தற்போதைய அரசாங்கம் இலகுவாகவே நழுவிக் கொள்ள முடியும்.
எல்லாவற்றுக்கும் மஹிந்த ராஜபக் ஷவே காரணம் என்று கூறிவிட முடியும். ஆனால், இதுபோன்று எல்லா போர்க்குற்றச்சாட்டுகள், ஆதாரங்களின் மீதும் நேர்மையாக விசாரணை நடத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்பது சந்தேகம்.
புதிய விசாரணைகளுக்கு உத்தரவிடும் போது, அது படையினரையும், தம்மையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும். எவ்வாறாயினும்,
 இன்னும் சில வாரங்களுக்குள் போர்க்குற்றச்சாட்டுகள் என்பது கற்பனையல்ல என்ற உண்மை சர்வதேச சமூகத்தினால் மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்தினாலும் ஒப்புக்கொள்ளும் நிலை ஒன்று ஏற்படும் போலவே தெரிகிறது.
அது இந்த ஆறு ஆண்டுகளாக நியாயத்தை தேடும் மக்களுக்கு கிடைக்கும் முதல் வெற்றியாக இருக்கும். ஆனால், போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் பயணம் அவ்வளவு இலகுவானதாக இருக்கும் என்று கருத முடியாது.
ஹரிகரன்

ad

ad