புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2015

விஜயகாந்துடன் சுப்பிரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு; பின்னணி காரணம் என்ன?

 தேமுதிக தலைவர் விஜயகாந்தை, அவரின் கட்சி அலுவலகத்தில், பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.
இன்று காலை சென்னை வந்த சுப்பிரமணியன் சுவாமி,  தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை,
கோயம்பேட்டிலுள்ள தேமுதிக  தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.

அப்போது பொன்னாடை போர்த்தி சுப்பிரமணியன் சுவாமியை வரவேற்ற விஜயகாந்த், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
பின்னர் இந்தச் சந்திப்புக் குறித்து  செய்தியாளர்களிடம்  பேசிய சுப்பிரமணியன் சுவாமி, " தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீதும் என் மீதும் பல்வேறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்து உள்ளது. இதை எதிர்த்து நாங்கள் இருவரும் தனித்தனியே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். வருகிற 7 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை எப்படி எதிர்கொள்வது. அதில் உள்ள கிரிமினல் வழக்குகளை நீக்குவது குறித்து பேசினோம்.

தமிழக அரசு எங்கள் மீது தொடர்ந்த வழக்குகளை கூட்டாக சேர்த்து எதிர் கொள்ளலாமா? என்பது குறித்தும் இருவரும் ஆலோசித்தோம்.

காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக முதல்வர்–பிரதமர் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சோனியா காந்தியை அதுபோல பேசி இருந்தால் இவர் ஏற்றுக் கொள்வாரா? மோடி எனது 40 ஆண்டு கால நண்பர் அவரை பற்றி அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

வருகிற சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக மற்றும் திமுகவை ஏற்க மாட்டார்கள். திமுகவுக்கு போட்டியாக அதிமுக ஆட்சியிலும் ஊழல்கள்  அமோகமாக நடந்து வருகின்றன . எனவே, தமிழகத்தில் மூன்றாவது சக்தியைத் தான் மக்கள் ஏற்பார்கள். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மாற்று அணி உருவாகும். ஜெயலலிதா மேல் முறையிட்டு வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பு தான் வரும். 

பாஜக மற்றும் தேமுதிக இடையே கூட்டணி அமைக்க முயற்சி செய்து இந்த சந்திப்பு நடந்ததா என்ற கேட்கப்படுகிறது. கூட்டணிகள் குறித்து பேசுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது" என்று தெரிவித்தார்.
அவதூறு வழக்கு தொடர்பாக விஜயகாந்தை சந்தித்துப் பேசியதாக சுப்பிரமணியன் சுவாமி கூறினாலும், இந்த இருவரின் திடீர் சந்திப்பு  தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சந்திப்பின் பின்னணி
வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக்கொண்டு வலிமையான கூட்டணி அமைக்க திமுக திட்டமிடுகிறது. மறுபுறம் பா.ஜனதாவும் விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்குள் தக்க வைக்க வேண்டும் என கருதுகிறது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியோ,  ஆட்சியில் தங்களுக்கு பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி உள்ளது. 
இந்நிலையில் தேமுதிக தரப்பில், தேர்தலில் போட்டியிட அதிக 'சீட்'களை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் யாருடன் கூட்டணி என்பதை முன்னரே தெரிவிக்காமல், வழக்கம்போல் முந்தைய தேர்தல்களில் கையாண்ட யுக்தியே இப்போதும் பின்பற்றப்படுகிறது. இது திமுக மற்றும் பா.ஜனதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் கையை பிசைந்து கொண்டு உள்ளன.
இந்த சூழ்நிலையில்தான் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்று ஆங்கில ஏடு ஒன்றுக்கு அளித்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டிகேஎஸ் இளங்கோவனின் கருத்து கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து அல்ல என்று திமுக தலைமை தரப்பில் மறுப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இதனால் விஜயகாந்தின் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான கதவை, திமுக தொடர்ந்து திறந்தே வைத்துள்ளதாகவே கருதப்படுகிறது. அதே சமயம் கூட்டணி கட்சிகளை ஆழம் பார்க்க திமுக நடத்திய நாடகம் இது என்ற விமர்சனங்களும் கிளம்பி உள்ளது.
இந்நிலையில்தான்  விஜயகாந்த், திமுக விரிக்கும் வலைக்குள் விழுந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலும், அவரை தங்களது கூட்டணிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே  சுப்பிரமணியன் சுவாமி போன்ற ஊடகங்களால் கவனிக்கப்படும் ஒரு மேலிட தலைவரை அனுப்பி, விஜயகாந்தை சந்திக்க வைத்திருக்கலாம் பா.ஜனதா என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் சுப்பிரமணியன் சுவாமியே வலிய வந்து விஜயகாந்தை சந்திப்பதன் மூலம், அவரை தமிழக அரசியலில் தற்போதைக்கு திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு பெரிய தலைவராக முன்னிறுத்தும் ஒரு யுக்தியாகவும் பா.ஜனதா இதனை மேற்கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஏனெனில் விஜயகாந்தை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி,  "தமிழக மக்கள் அதிமுக மற்றும் திமுகவை ஏற்க மாட்டார்கள். திமுகவுக்கு போட்டியாக அதிமுக ஆட்சியிலும் ஊழல்கள்  அமோகமாக நடந்து வருகின்றன . எனவே, தமிழகத்தில் மூன்றாவது சக்தியைத்தான் மக்கள் ஏற்பார்கள்" என்று கூறியதையும் முடிச்சுப்போட்டு பார்த்தால் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த திடீர் சந்திப்பின் பின்னணியை புரிந்துகொள்ளலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ad

ad