புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2015

கூட்டு அனுசரணையாளர்களின் வரைவை வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை தொடர்பில் கூட்டு அனுசரணையாளர்கள் முன்வைத்த வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

இந்த வரைவை வரவேற்று அக்கட்சி விடுத்த அறிக்கையின் விவரம் முழுமையாக வருமாறு:
கூட்டு அனுசரணையாளர்கள் முன்வைத்துள்ள இலங்கை மீதான தீர்மானம் தொடர்பான வரைவு ஆவணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.
குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற சர்வதேச குற்றச்செயல்கள் பற்றி விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணை அதிகாரிகள் உட்பட்ட ஒரு விசாரணைக் கட்டமைப்பு ஒன்றை இங்கு ஸ்தாபிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.
இது இலங்கையின் நீதிக்கு கிடைத்த மகத்தானதொரு வெற்றியாகும். இது போன்றதொரு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும், சர்வதேச செயற்பாட்டாளர்களுக்கும் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்க தமிழ்த் தேசியக் தமிழ் கூட்டமைப்பு தன்னை அர்ப்பணிக்க சித்தமாக உள்ளது.
இலங்கை மீதான தீர்மான வரைவு ஆவணம் தொடர்பாக அரசாங்கம் காட்டியுள்ள இணக்கப்பாட்டையும், மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டாக இதற்காக அனுசரணை வழங்க அரசாங்கம் தயாராக இருந்ததையும் நாம் பாராட்டுகின்றோம். இவ்வகையானதொரு நீதிமன்றமானது, விளைவுகளை பற்றிக் கவலைப்படாமல் அக்கிரமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த யுகத்திற்கு ஒரு முடிவை கட்ட முடியும். இன்று மேற்கொள்ளப்பட்ட மேற்படி தீர்மானமானது இணக்கப்பாடு தொடர்பான பல சிரமங்களுக்குப் பின் பெறப்பட்டதொரு அடைவாகும்.

இத்தீர்மானத்தில் உள்ள சில சொற் பிரயோகங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது நம்பிக்கை வைத்துள்ள மற்றும் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் திருப்தி அடையக் கூடிய விதத்தில்அமைக்கப்படவில்லை என்ற விடயத்தையும் நாம் நன்கு அறிவோம்.
இருப்பினும், இவ்வரைவு ஆவணமானது, மீளிணக்கத்திற்கான நீண்டதொரு பயணத்திற்கு ஆக்கபூர்வமான ஆரம்பத்தை தந்துள்ளது என்பதே எமது கருத்து. கூட்டு அனுசரனையாளர்கள், ஏனைய அரசாங்க, அரச சார்பற்ற அமைப்புக்கள் உட்பட, தாம் நம்பும் கோட்பாடுகளுக்கு விசுவாசமாக நடந்து கொண்ட அனைத்து பங்காளர்களுக்கும் கூட்டமைப்பு தனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
அத்துடன், அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை செயற்பாட்டில் மதித்து, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்று, கடும் உழைப்புடன் செயற்பட வேண்டிய காலம் இப்போது ஆரம்பமாகும் என நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இத்தகைய முயற்சிகளில் பூரண ஒத்துழைப்பை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது

ad

ad