புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2015

தமிழருக்கான நிரந்தர தீர்வே எனது முதல் இலக்கு: எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எனது சேவை இரு கோணங்களில் தொடரும். பொதுக் கடமை என்ற ஒரு கோணத்திலும், முக்கிய கடமை என்ற
மற்றொரு கோணத்திலும் இந்தச் சேவை தொடரும். நாட்டுக்காகக் குரல் கொடுப்பது எனது பொதுக் கடமையாகும். தமிழ் மக்களுக்கு நியாயமான - நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது எனது முக்கிய கடமையாகும் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
"இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எனக்குக் கிடைப்பதற்கு காரணகர்த்தாக்களாக இருந்த எனது உயிரிலும் மேலான தமிழ் மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் முதலில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்குக் கிடைத்த இந்தப் பதவி மூலம் முழுநாட்டுக்கும் நான் சேவையாற்ற வேண்டும். எனது குரல் முழு நாட்டுக்கும் ஒலிக்கவேண்டும். அதேவேளை, என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தமிழ் மக்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எனது தலைமைப் பொறுப்பையும் நான் மறந்துவிடலாகாது. நிரந்தரத் தீர்வை எதிர்பார்த்திருக்கும் தமிழ் மக்களின் குரலாகவும் எனது குரல் நாடாளுமன்றில் ஓயாமல் ஒலிக்கவேண்டும். 
இந்நிலையில், நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான எனது சேவையை இரு கோணங்களில் தொடரவுள்ளேன். பொதுக் கடமை என்ற ஒரு கோணத்திலும், முக்கிய கடமை என்ற மற்றொரு கோணத்திலும் இந்தச் சேவையைத் தொடரவுள்ளேன். நாட்டுக்காகக் குரல் கொடுப்பது எனது பொதுக் கடமையாகும். 
அதாவது, அரசை எதிர்க்கவேண்டிய வேளையில் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்ப்பேன். அதேவேளை, அரசு எடுக்கும் தீர்மானங்கள் நாட்டின் மூவின மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமைந்தால் அதனை ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து ஆதரிப்பேன். இது எனது பொதுக் கடமையாகும். 
தமிழ் மக்களுக்கு நியாயமான - நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது எனது முக்கிய கடமையாகும். இந்தக் கடமையிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கமாட்டேன். வடக்கு, கிழக்கைப் பூர்வீக வாழ்விடமாகக்கொண்ட எமது தமிழ் மக்கள் கொடூர போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் நாம் வெறுமனவே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சர்வதேச கண்காணிப்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்படவேண்டும். இதற்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். 
இதேவேளை, நீண்டகாலமாகத் தொடரும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு - தமிழரின் பிரச்சினைக்கு கெளரவமான ,நியாயமான,உண்மையான,நிரந்தரமான அரசியல் தீர்வு விரைவில் கிடைக்கவேண்டும். இதனைப் பெற்றுக்கொடுக்க என்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுப்பேன். இனப்பிரச்சினைக்கு - தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் கிடைப்பது எமக்கு மட்டுமல்ல முழுநாட்டுக்கும் நல்லது. அப்போதுதான் நாட்டில் நல்லாட்சி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

ad

ad