புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2015

தமிழ் நாட்டில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்?

தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தல்கள் இடம் பெறப்போகின்றன. எம்.ஜி. இராமச்சந்திரனின் காலத்துக்குப் பின்னர் தி.மு.கவும், அ.தி. மு.கவும் மாறி
மாறி ஆட்சி அமைத்துக் கொள்வதுதான் வழக்கமாக இருந்துள்ளது. 

அ.தி.மு.கவின் ஸ்தாபகத் தலைவரான எம்.ஜி. இராமச் சந்திரன் உயிரோடு இருக்கும் வரை அவரை எவராலும் அசைக்க முடியவில்லை. அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியால் கூட எம்.ஜி.இராமச்சந்திரனை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்ற முடியவில்லை. எம்.ஜி.ஆர். தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருக்க சொற்ப எண்ணிக்கையான சட்டமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியில்  அமர்ந்திருக்கவே கருணாநிதியால் முடிந்தது. 

கருணாநிதியால் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி. ஆர். அரசியலில் கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவர் சினிமா நடிகராக இருந்த போதே சாதாரண மக்களின் பேராதரவு அவருக்கு இருந்தது. கட்சி அமைத்ததன் பின்னர் அவருக்கான ஆதரவு பன்மடங்கு பெருகியது.  மேலும் அவர் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்றதன் பின்னர் ஏழை, எளிய மக்களின் துயர் துடைப்பதற்கான பல திட்டங்களைச் செயற்படுத்தினார்.

பாடசாலைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கும் அவரது திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அரசியலில் ஓர் அசைக்க முடியாத சக்தியாகவே அவர் மாறியிருந்தார்.அவரது மறைவுக்குப் பின்னர் அவரது இடத்தை ஜெயலலிதா நிரப்பிக் கொண்டார் கருணாநிதிக்கு எதிரான வியூகங்களை வகுப்பதில் அவரும் தேர்ந்தவராகக் காணப்பட்டார். 

மக்களிடையே எம்.ஜி. ஆருக்கு இருந்த செல்வாக்கும் அவருக்குக் கைகொடுத்தது. அதேவேளை அ.தி. மு.க. கட்சியைக் கட்டுக்கோப்புடன் வழிநடத்திச் செல்லும் திறமையும் அவரிடம் காணப்பட்டதால் அவரால் சிறந்ததொரு தலைவராக உருவெடுக்க முடிந்தது. இதன் காரணமாகவே தமிழ் நாட்டின் அசைக்க முடியாததொரு தலைவராக அவரால் உருவாக முடிந்தது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற ஆசனங்களில் 37 ஐக்  கைப்பற்றி  உலக அரங்கில் கடும் வியப்பை ஏற்படுத்தியது.  

இதனால் இந்திய அளவில்  ஜெயலலிதா மதிக்கப்பட்டார். அண்மையில் தமிழ் நாட்டுக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சம்பிரதாயங்கள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு ஜெயலலிதாவின் இல்லத்துக்குச் சென்றதும் அங்கு  விருந்துண்டதும் முக்கியமான  செய்திகளாகி விட்டன. இதைத் தேர்தல் கூட்டணிக்கான ஓர் ஆரம்பமெனச் சிலர் வர்ணித்தனர்.ஆனால் தமிழ் நாட்டில் மக்களின் செல்வாக்கைப் பெறாத மோடி தலைமையிலான பி.ஜே. பிக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுப்பாரா என்பது சந்தேகமே.

இந்த நிலையில் கருணாநிதி தலைமையிலான  தி.மு.க. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வுக்கு சவால் விடக்கூடிய  நிலையில் உள்ளதா என்பதை ஆராய்ந்து  பார்க்கலாம். தற்போதைய நிலையில் தி.மு.கவின் கட்டுக்கோப்பு சரிவடைந்து காணப்படுகின்றது. கருணாநிதியின் உள்வீட்டுப் பூசல்களே கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி நிற்கின்றது. அவரது  அரசியல் வாரிசுகளான அழகிரியும், ஸ்ராலினும் எதிரும், புதிருமாக நின்றுகொண்டு கட்சி ஆதரவாளர்களைக் குழப்பி வருகின்றனர். 

கருணாநிதிக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்பு ஸ்ராலின் வசம் செல்வதை அழகிரி அறவே  விரும்பவில்லை. கருணாநிதிக்கு அழகிரியை விட ஸ்ராலின் மீது அதிக நம்பிக்கை உள்ளபோதிலும் அதை வெளியே காட்டிக் கொள்ள முடியவில்லை. அழகிரி மீதான பயமே இதற்குக் காரணம். மேலும் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கருணாநிதியின் மகளான கனிமொழியும், மனைவி தயாளு அம்மாளும் விசாரிக்கப்பட்டு வருகின்றமை கருணாநிதிக்குத் தலை வலியை ஏற்படுத்தி நிற்கின்றது. 

தள்ளாத வயதில் தள்ளாடிக் கொண்டிருக்கும் கருணாநிதி தனக்கு அடுத்த வாரிசை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால் இதுவொரு இலகுவான விடயமாக இருக்கப் போவதில்லை. இதுவும் கட்சியின் பின்னடைவுக்கு ஒரு பிரதானமான காரணமாகும். மேலும் தமிழ் நாட்டின் ஏனைய சிறு கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு. மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன தமக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுக்கின்ற கட்சிகளுடனேயே கூட்டணியை அமைத்துக் கொள்ள விரும்பும் என்பதில் ஐயமில்லை. தி.மு.க.வில் தொடர்ந்தும் தொய்வான நிலையயான்று காணப்படின் இந்தக் கட்சிகள் தி.மு.க. பக்கம் தலைவைத்துப் படுப்பதற்கும் விருப்பம் தெரிவிக்கமாட்டா.

காங்கிரஸ் கட்சியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தமிழ் நாட்டில் அந்தக் கட்சி தொடர்ந்தும் பின்னடவையே சந்தித்து வருகின்றது. அதன் செல்வாக்கு மக்கள் மத்தியில் அடிமட்ட நிலைக்கு சென்று விட்டது. தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சியை அமைப்போம், காம ராஜர் ஆட்சியைக் காண்போம் என்ற வெற்றுக் கோசத்தைத் தவிர அந்தக் கட்சியிடம் ஒன்றுமே இல்லை.

தற்போதுள்ள நிலையில்  அ.தி.மு.க. ஓரளவு தலைநிமிர்ந்து நிற்கின்றது. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு மீண்டும் தண்டனை வழங்கப்படுமாயின் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு விடும். அ.தி.மு.கவைப் பொறுத்த வரையில் ஜெயலலிதாவுக்கு மாற்றீடான தலைவர் ஒருவர் இல்லை. பன்னீர்ச் செல்வம் தற்காலிக முதலமைச்சர் பொறுப்பில் இருந்த போதிலும் அவரொரு மக்களின் ஆதரவைப்பெற்ற தலைவரல்ல. மேலும் செயற்றிறனும், நேரத்துக்கு ஏற்றவாறு வியூகங்களை வகுத்துக் கொள்ளும் ஆற்றலும் ஜெயலலிதா போன்று அவரிடம் காணப்படவில்லை.

ஆகவே  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே அ.தி.மு.கவின் எதிர்காலம் தங்கியுள்ளது. ஜெயலலிதா உள்ளே இருந்தால் தேர்தல் வெற்றி சந்தேகமே. அவர் வெளியே இருந்தால் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது ஜெயலலிதாதான். 

ad

ad