புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2015

7வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்திடுக! வேல்முருகன்



திருச்சி, செய்யாறு ஆகிய சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகாலம் அடைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இன்று 7வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர் ஈழத் தமிழர்கள். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்து பொதுமுகாம்களில் உள்ள உறவினர்களுடன் சேர்ந்து வாழ தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
இலங்கையில் இறுதி யுத்தம் நிகழ்த்தப்பட்டு ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் சர்வதேச சமூகத்திடம் தமிழினம் நீதி கோரி போராடி வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழினத்துக்கு ஆறுதலும் நம்பிக்கையும் பாதுகாப்பையும் தரக் கூடிய வகையில், இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை; இலங்கை நிகழ்த்திய போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை; இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே முன்மொழிந்து அனைத்து கட்சியினர் ஆதரவுடன் நிறைவேற்றியதற்காக உலகத் தமிழினம் நன்றி தெரிவித்தது.
 
அதேபோல் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அண்மையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்க்க வேண்டும்; இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்த இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்ற மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் முன்மொழிந்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்கு உலகத் தமிழினமே இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறது.
 
அத்துடன், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவந்த இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இந்தியாவின் நடவடிக்கை 'ஆறாத மனப்புண்ணை ஏற்படுத்தியுள்ளதாக' வேதனை தெரிவித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் அனுப்பியதற்கும் உலகத் தமிழினம் நெஞ்சார்ந்த நன்றியை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.
 
இந்த நிலையில் தமிழகத்தின் திருச்சி, செய்யாறு சிறப்பு முகாம்களில் எந்த ஒரு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக சிறைகளில் வாடிவரும் ஈழத் தமிழ் உறவுகளை விடுதலை செய்து அவர்கள் தங்களது உறவுகளுடன் பொது முகாம்களில் வசிப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.
 
இந்த ஈழத் தமிழர்கள் அனைவருமே தங்கள் மீதான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெற்றவர்கள்... அப்படி ஜாமீன் பெற்றவர்களைத்தான் கைது செய்து சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். 
 
இவர்களில் சிங்கள ராணுவத் தாக்குதலால் உடல் உறுப்புகளை முற்றிலுமாக இழந்தவர்களும் இருக்கிறார்கள்.. ஒருவர் 2 கால்களையும் இழந்தவர்; இயற்கை உபாதைகளுக்கு கூட மற்றவர் உதவியை நாடி நிற்பவர்.
 
இந்த ஈழத் தமிழ் உறவுகள் தங்களை விடுதலை செய்யக் கோரி பல ஆண்டுகளாக பல கட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
 
தங்களை கருணைக் கொலைகூட செய்துவிடுங்கள் என்றும் அந்த ஈழத் தமிழ் உறவுகள் போராடுகிறார்கள்.. உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 
 
அண்மையில் கூட ஒரு அகதி தம்பதியினர் தங்களை சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயன்றிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு ஈழத் தமிழர் மணிக்கட்டு நரம்புகளை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கும் முயன்று ரத்த வெளத்தில் மீட்கப்பட்டார்.
 
இப்படி நமது தமிழ் மண்ணிலேயே நம் ஈழத் தமிழ் சொந்தங்கள் வதைமுகாம்களில் அடைபட்டு கிடப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
 
இந்த ஈழத் தமிழ் உறவுகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆகையால் தாயுள்ளத்துடன் இந்த உறவுகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

ad

ad