புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2015

ராதாரவியை 'சாதா' ரவியாக்கிய நான்கு விஷயங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தரப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் அணியினரின்
தோல்விக்கு  4 காரணங்கள் முக்கியமாக சொல்லப்படுகின்றன.

நாடக நடிகர்களை குறி வைத்த ரித்தீஷ்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை, நடிகர் ராதாரவி அசைக்க முடியாத நபராகத்தான் இருந்தார். திரையுலகில் அவரது அதட்டலும் உருட்டலும்  அனைவருக்கும் தெரிந்த விஷயம். கடந்த 30 ஆண்டுகளாக திரைப்பட சங்கத்தில் பல்வேறு பதவிகளில் இருந்து வருபவர். குறிப்பாக நாடக நடிகர்கள் மத்தியில் ராதாரவிக்கு அசைக்க முடியாத செல்வாக்கு உண்டு. இந்த நடிகர் சங்கத் தேர்தலில் இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியிலும், சரத் தரப்பு முக்கிய பதவிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்குவதற்கு ஒரே காரணம்,  நாடக நடிகர்கள் மத்தியில் ராதாரவிக்கு உள்ள  தனிப்பட்ட செல்வாக்குதான். 
நாடக நடிகர்கள் மத்தியில் ராதாரவிக்கு உள்ள செல்வாக்கு விஷால் தரப்புக்குத் தெரியும். இந்த இடத்தில்தான் விஷால் தரப்பு  நடிகர் ரித்தீஷை களமிறக்கியது. அதாவது தபால் ஓட்டுகள் போடும் நாடக நடிகர்களின் வாக்குகளை குறிவைத்து ரித்தீஷ் செயல்பட ஆரம்பித்து, வைட்டமின் 'ப'-வை இறைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், ரித்தீஷின் இந்த முயற்சி நாடக நடிகர்களிடம் பலிக்கவில்லை.  எனினும், சொற்பமான நாடக நடிகர்கள் விஷால் பக்கம் சாய்ந்தனர். ராதாரவியின் மீது கொண்ட பற்று காரணமாக நாடக நடிகர்களின் ஓட்டு பெரும்பாலும் சரத் தரப்புக்கே கிடைத்துள்ளது. அதனால்தான், தபால் ஓட்டுகள் எண்ணும் வரை சரத் அணியினர் முன்னிலையில் இருந்தனர். 

தனிப்பட்டத் தாக்குதல்!

வேறு எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில்தான் இரு தரப்பினரும் தனிப்பட்ட முறையில் தாக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு முன்னதாக நடந்த பிரசாரத்தின்போது, எதிரணியில் உள்ள நடிகர்களை, ராதாரவி சற்று அதிகமாகவே அர்ச்சனை செய்தார்.  ஒவ்வொருவரையும் ஒருமையில் அழைத்து திட்டியது, நடுநிலையில் இருந்த நடிகர் நடிகைகளை எதிரணி பக்கம் சாய வைத்து விட்டதாம். 

நடிகர் பார்த்திபன் நேற்று அளித்த பேட்டியில், கூவத்தைவிட மோசமாக நடிகர் சங்கத் தேர்தல் பிரசாரம் இருந்தாக தெரிவித்ததும் இதன் எதிரொலியாகத்தான். சரத்,ராதிகா, ராதாரவி போன்றவர்கள் தேர்தல் பிரசாரத்தின்போது, பக்குவமான அணுகுமுறையையும் கண்ணியமான பேச்சையும் கடைப்பிடித்திருந்தால், நடுநிலை வகிக்கும் நடிகர் நடிகைகளின் ஓட்டுக்கள் சரத் பக்கம் விழுந்திருக்கக்கூடும். 

ஒதுங்கிய அதிமுக...

அதிமுக தலைமை எடுத்த முடிவும், சரத்குமார் அணியினருக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.இந்த தேர்தலில், சரத் தரப்பில் அ.தி.மு.கவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் அதிகம் பேர்  போட்டியிட இருந்தனர். தலைமை உத்தரவையடுத்து அவர்கள் ஒதுங்கிக்கொள்ள, சரத் தரப்புக்கு அது சற்று பின்னடைவாக அமைந்துவிட்டது. அதே வேளையில் விஷால் தரப்பு ஆதரவு நடிகரான ரித்தீஷ், சென்னையில் வசிக்கும் நடிகர்களை தொடர்ந்து கேன்வாஸ் செய்துகொண்டுதான் இருந்தாராம். இதனை அதிமுக தலைமை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 

கடைசிகட்ட கேன்வாசிங்!


நேற்று வாக்கு மையத்துக்கு ஓட்டு போட வந்த நடிகர்- நடிகைகளிடம் கடைசி கட்டத்தில் விஷால் தரப்பு இளைஞர்கள் சூப்பராக கேன்வாஸ் செய்தனராம். அதேவேளையில் சரத் தரப்புக்கு வேலை செய்யக்கூட ஆள் இல்லையாம். கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் சரத் தரப்பு கோட்டை விட்டுள்ளது. இதனால், வாக்குப் பதிவு தொடங்கிய 4 மணி நேரத்துக்குள் விஷால் தரப்புக்கு வாக்குகள் கொத்து கொத்தாக விழத் தொடங்கியுள்ளன.  

இந்த வெற்றி விஷால் அணியினரின் அமோக வெற்றி என்று கருதப்பட்டாலும், சரத் தரப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருப்பதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது. எனவே, விஷால் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த 3 ஆண்டுகளில் மாற்றம் வந்துவிடும்.

ad

ad