வெள்ளி, அக்டோபர் 30, 2015

வவுனியாவில் சர்வதேச இணையத்தள தினம்


சர்வதேச இணையத்தள தினம் ஒக்டோபர் 29 ஆம் திகதி உலக நாடுகள் பலவற்றிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வவுனியாவிலும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச இணையத்தள தினம் கொண்டாடப்பட்டது.
இன்று உலக மக்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்துள்ள இணையத்தளமானது பல வேலைகளை இலகுபடுத்தியுள்ளது.
பேஸ்புக், ருவிற்றர், கூகிள் என பல சமூக வலைத் தளங்களின் வருகை இணையத்தள பாவனையை அதிகரிக்கச் செய்துள்ளது. அந்த வகையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா அவர்களின் காலப்பகுதியில் 1994 ஆம் ஆண்டு இலங்கை இணையத்தளத்தினுள் முதன்முதலாக பிரவேசித்தது.
அதன் பின் இன்று அந்த துறையில் வளர்ச்சியடைந்தும் வருகிறது. இந்நிலையில் சர்வதேச இணையத்தள தினம் ஆண்டு தோறும் ஒக்டோபர் 29 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. வவுனியாவிலும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் வெங்கடேஸ்வரா நெட்வேர்க் பிறைவேட் லிமிடெட் அனுசரணையில் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா, குட்செட் வீதி, வெங்கடேஸ்வரா நெட்வேக் பிறைவேட் லிமிடெட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இணையத்தளமானது தமிழ் மொழி, கல்வி, கலைத்துறை, அரசியல், ஊடகம், பொருளாதாரம், சமூகம், மருத்துவம், பெண்ணியல் ஆகிய துறைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பாகவும் துறை சார்ந்தவர்களால் ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், தமிழ் மாமன்ற உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினர், கலைத்துறையினர், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.