புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2015

சித்தரவதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழச் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு சீமான் கோரிக்க


சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பி ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்திருக்கும் கொடுமை இன்றளவும் தொடர்கிறது.
பெயர் தான் சிறப்பு முகாம் சிறைச்சாலைகளுக்கு உள்ளேயே நடத்தப்படும் இம்முகாம்கள் சிறைச்சாலைகளை விட கொடுமையான சித்தரவதை முகாம்களாக தான் செயல்பட்டு வருகிறது. திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 9 பேர் தங்களை விடுவிக்கக்கோரி கடந்த அக்டோபர் 1 ம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுரேஷ்குமார் ஞானசௌந்தரம் என்பவர் கடந்து 3 வருடங்களாக சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் அகதியாக பதிவு செய்து தங்கியிருந்த இவரை எவ்வித நியாயமான காரணமுமின்றி கடந்த மூன்று வருடங்களுக்கு முன் காவல்துறை கைது செய்து சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளது. இடுப்பின் கீழ் இயங்காது படுத்த படுக்கையாக இருப்பவர் சுரேஷ்குமார். தனித்து இயங்கமுடியா நிலையில் இவரது அன்றாட தேவைகளுக்கும் இன்னொருவரின் உதவி தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து தனக்கு உதவிக்காக ஒருவரை நியமிக்கும் படி அரசிடம் கேட்டும் பலமுறை மனுக்கள் அளித்தும் அரசு சம்மதிக்கவில்லை. நீதிமன்றத்தை அணுகி உதவிக்கு முறையிட்டு அனுமதி பெற்றபின்னரும் அரசு அனுமதிக்கவில்லை. முகாமில் அடைக்கப்பட்டுள்ள சக ஈழ உறவுகள் தான் இவருக்குரிய அன்றாட தேவைகளுக்கான உதவிகளை செய்து வந்தனர்.
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ்குமாருக்கு உதவி வந்த சக ஈழ உறவுளான நா.பகீதரன், பா.சிவனேஸ்வரன், த.மகேஸ்வரன், க. மகேஸ்வரன், க.கிருஷ்ணமூர்த்தி, க.ராஜேந்திரன், ச.சுபாஷ், க.உதயதாஸ், செ.யுகப்பிரியன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 01.10.2015 முதல் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். அதனால் தற்போது சுரேஷ்குமாருக்கு, உதவ யாரும் இல்லாமல் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தற்காலிகமாகவேனும் ஒருவரை தன் உதவிக்கு நியமிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பொழுது அவருக்கு, பதில் எதுவும் வழங்கவில்லை என்பதுடன் எவரையும் உதவிக்கும் விடவுமில்லை. இதனால் மனவிரக்தியடைந்து தான் வாழ்வதை விட இறந்து விடலாம் என்று தனது கைகளை அறுத்து தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் மீது காவல்துறை கொலை மிரட்டல், தற்கொலை முயற்சி போன்ற வழக்குகள் பதிவு செய்து கைது செய்திருப்பது கொடுமையிலும் கொடுமை. அநீதியான இக்கைது நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல வருடங்களாக குடும்பங்களை விட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தங்களை விடுதலை செய்து, தமிழ்நாட்டில் இதர முகாம்களில் வசித்துவரும் தங்கள் உறவினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர். தங்கள் மீது பதியப்பட்டுள்ள குற்ற வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்று நீதிமன்றங்களால் விடுவித்த பின்னரும் தங்களை விடுதலை செய்யாமல் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டித்து பல முறை உண்ணாவிரதப் போராட்டம் உள்ளீட்ட பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை செவி சாய்த்து கேட்க விரும்பாமல் அரசு அவர்களை பல ஆண்டுகளாக எவ்வித சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாமல் நியாயமான காரணங்கள் இன்றி தடுத்து வைத்துள்ளது. தங்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தவறு செய்திருந்தால் சிறையில் அடையுங்கள், இல்லையெனில் எங்களை எங்கள் குடும்பங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்பதே அவர்களின் நியாயமான கோரிக்கையாகும்.
சிறப்பு முகாம்களில் வதைபடும் நம் ஈழ உறவுகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கண்துடைப்பாக அரசும் அங்குள்ள அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் விடுதலை செய்வதாக போலி வாக்குறுதிகள் அளிக்கின்றனர். ஆனால் உண்ணாவிரதம் கைவிடப்பட்ட பின்னர் அவர்களை விடுவிக்க மறுத்து சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கின்றனர். இப்படி வழக்கு, விசாரணையின்றி அவர்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் தடுத்து அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும் என்பதை எடுத்துக்கூறி சிறப்புமுகாம்களை மூட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும் பல தமிழ் அமைப்புகளும் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளன. ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஈழத்தில் போர் முடிந்த பிறகு அங்கே மக்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போலவே, இங்கு சிறப்பு முகாம் என்ற பெயரில் இவ்விதமான வதை முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இது தாயக தமிழகத்திற்கும்,, இங்கு வாழும் 8 கோடி தமிழர்களுக்கும் பெருத்த தலைக்குனிவு ஆகும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், இலங்கையில் துயருற்றுவரும் ஈழத் தமிழர் விடுதலைக்காக தொடர்ச்சியாக சட்ட மன்ற தீர்மானங்கள் மூலம் குரல் கொடுத்து வரும் நிலையில்,அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட தமிழகத்தில்தான் ஈழத் தமிழர்கள் இப்படியான சிறப்பு முகாம் என்ற பெயரிலான வதைமுகாம்களில் அநீதியாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு நாம் தமிழர் கட்சி தெரியப்படுத்துகிறது. சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நம் ஈழ உறவுகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழகஅரசு செவி சாய்த்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களின் நெடுந்துயர் போக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி கோருகிறது..
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.
நாம் தமிழர் கட்சி.

ad

ad