புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2015

சமஷ்டித் தீர்வு குறித்து அரசு - சம்பந்தன் பேச்சு


தேசியப் பிரச்சினைக்குச் சமஷ்டி முறைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசு தம்முடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எனினும் உத்தியோகபூர்வமாக இந்தப் பேச்சுக்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பல நாடுகளில் சமஷ்டி நிர்வாக முறையானது மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் பார்வையில் சமஷ்டி என்கின்ற பதமானது சில பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமஷ்டி என்பது நீங்கள் பயப்படுவது போல் ஒன்றுமல்ல. இது முற்றிலும் சட்டரீதியாக அரசியல் யாப்பில் வரையப்பட்டு மேற்கொள்ளப்படும் ஒரு முறையாகும்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக எமது பேச்சுக்களின் போது முன்னுரிமைப்படுத்துவோம்.இது தொடர்பாக அரசு என்னுடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளது. எனினும் உத்தியோகபூர்வமாக இந்தப் பேச்சுக்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.
இலங்கை மீதான ஐ.நா தீர்மானத்தை அரசானது நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் முற்றுமுழுதாக நிறை வேற்றவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்தத் தீர்மானம் நாட்டில் நடைமுறைப்படுத்தப் படும் போது, இது தொடர்பில் நாங்கள் மிகவும் சாதகமான பங்களிப்பை மேற்கொள்வோம்.
இந்தத் தீர்மானத்தை அரசு நிறைவேற்றுவதற்கு நாங்கள் எமது ஆதரவை வழங்குவோம். இது நாட்டின் அடிப்படை நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுத்தப்படும் என நாங்கள் நினைக்கிறோம். அத்துடன் நாட்டில் பாதிக்கப்பட்டு வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களினதும் சிறந்த நலன்களை உள்ளடக்கியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
இந்த மக்களுக்குப் புதியதொரு விடிவு என்பது தேவை. இந்தத் தீர்மானமானது முற்றுமுழுதாக இதயசுத்தியுடனும், அர்ப்பணிப்புடனும் நடைமுறைப்படுத்தப்படும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவைப் பெற்றுக் கொடுக்கும்.
கேள்வி: இவ்வாறான விவகாரங்களை ஆராய்வதற்காகவும், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் சில ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன. ஆனால் இவ்வாறான உள்ளகப் பொறிமுறைகள் தோல்வியையே அடைந்துள்ளன. ஆகவே, நீங்கள் எவ்வாறு இப்புதிய பொறிமுறையை ஏற்றுக்கொள்கிறீர்கள்?
பதில்: கடந்த காலங்களின் இவ்வாறான உள்ளக ஆணைக்குழுக்கள் தமது நடவடிக்கைகளைத் திருப்தியாகச் செயற்படுத்தவில்லை. இவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தம்மால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஒருபோதும் நிறைவேற்றவில்லை.
கடந்த காலங்களில் தாம் விட்ட தவறுகளைக் கற்றுக்கொண்டு தமது தவறுகளைத் திருத்துவதற்கான ஒரு வாய்ப்பாக தற்போதைய தீர்மானத்தை வேறுபட்ட வடிவத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு முன்வரும் என நம்பிக்கை மட்டுமே கொள்ள முடியும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும் அரசு இந்த விடயத்தில் மேலும் உணர்வுபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதே எனது கருத்தாகும்.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்கள், முற்றுமுழுதாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவளிக்காத ஐ.நா தீர்மானம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஐ.நா தீர்மானம் தொடர்பில் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனவா?
பதில்: பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தி கொள்ள முடியும். இது ஒரு விவகாரமல்ல. நாட்டினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் சிறந்த நலன்களை அடைந்து கொள்வதற்காக எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதே மிக முக்கியமான விடயமாகும்.
ஆகவே நாங்கள் இவற்றைக் கருத்திற் கொண்டே செயற்பட வேண்டும். நிறைய எதிர்பார்த்து தற்போது அதனால் அதிருப்தியடைந்துள்ள தனிப்பட்டவர்களின் கருத்துக்களை நாங்கள் கவனத்தில் எடுக்கத் தேவையில்லை. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஒருவர் அதிக கவனம் கொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை என்றார்.

ad

ad