புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2015

எப்படி நம்புவார்கள் தமிழர்கள்?


ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு முன் இறையாண்மை கிறையாண்மையெல்லாம் வெறும் புண்ணாக்கு - என்று நாம் நினைப்பது உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் தான், சர்வதேசம் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாது' - என்று அறிவுஜீவி நண்பர்கள் சிலர் பேசுகிறபோது எழுகிற கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறேன்.
இல்லாவிட்டால், 'எடுத்ததற்கெல்லாம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்' என்று அதற்கும் சேர்த்து ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிடுவார்கள்.
சட்டம் குறித்தும் சமூகம் குறித்தும் மனிதம் குறித்தும் விரிவான தெளிவான பார்வையுள்ள ஒரு அறிவார்ந்த மனுஷியே 'அதெல்லாம் புண்ணாக்கு தான்' என்பதை உணர்த்திய பிறகுதான், நிமிர்ந்து உட்கார முடிகிறது, என்னால்!
அந்த மனுஷி, நவநீதம் பிள்ளை.
பிள்ளை மட்டும் இல்லையென்றால், இலங்கை அரசு செய்தது இனப்படுகொலை என்கிற உண்மை, நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கும்.
பிள்ளை இல்லையேல், ஜெனிவா மனித உரிமைகள் பேரவை நிகழ்வுகள் வெறும் சடங்காகத்தான் இருந்திருக்கும்.
'கடைசி சில தினங்களில் 40ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை, இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக எப்படிக் கருத முடியும்' என்று கேட்டதோடு நில்லாமல்,
இருபதாவது மைலில் நடைப்பிணம் மாதிரி கிடந்து நகர மறுத்த இந்தியாவின் தலையில் ஓங்கிக் குட்டியிருக்கிறாரே, இந்தத் துணிவுக்குப் பெயர்தான் - பிள்ளை.
'தன் மக்களைக் காக்க ஒரு நாடு தவறினால், அண்டை நாடு தலையிட்டு அவர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும். இதற்கான தெளிவான சர்வதேசச் சட்டங்கள் இருக்கின்றன. அந்த மனிதாபிமானக் கடமையைச் செய்ய இந்தியா தவறிவிட்டது...
ஒரு இனப்படுகொலை நடப்பதைத் தடுக்கத் தவறுவதும் குற்றம் தான்......' என்று இந்தியாவின் முகத்துக்கு நேரே சுட்டுவிரலை நீட்டிக் குற்றஞ்சாட்டுகிறார் பிள்ளை. கல்லுளி மங்கன் மாதிரி நிற்கிறது, சொரணைகெட்ட எம் தேசம்.
இலங்கையின் எதிர்ப்பையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, வன்னி மண்ணுக்கு நேரில் சென்று எம் சகோதரிகளைச் சந்தித்து, அவர்களின் உள்ளக் குமுறலை நேரில் கேட்டறிந்தவர் பிள்ளை.
தமிழ்ச் சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது முன்னதாகவே திட்டமிடப்பட்டது என்பதையும், ஓர் இனத்தை அழிக்கும் நோக்கத்துடனேயே அந்த இழிசெயலில் இலங்கை இராணுவம் திட்டமிட்டு இறங்கியது என்பதையும் வேதனையோடு பிள்ளை விவரிக்கிறாரென்றால், அது - அவர் நேரில் கேட்ட அவலக் கதைகளின் எதிரொலி.
நவநீதம் பிள்ளையின் நம்பகத்தன்மையைச் சிதைப்பதற்காக, 'அவர் நவ்விப் பிள்ளை இல்லை, புலிப்பிள்ளை' என்று ஒட்டுமொத்த சிங்களத் தலைவர்களும் ஓங்கிக் குரல்கொடுத்தார்கள்.
அவரோ, 'நான், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பின்பாட்டுப் பாடுகிற கிளிப்பிள்ளை இல்லை' என்பதை நிரூபித்த பிறகே இலங்கையிலிருந்து புறப்பட்டார்.
இன்றைக்கு, செயித் அல் ராத் ஹுசெய்ன் நேர்மை தவறாமல் நிற்கிறாரென்றால் அதற்கான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தவர் நவநீதம் பிள்ளைதான்! 
நவநீதம் பிள்ளையும் கல்லம் மேக்ரேவும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு, ஆறேழு ஆண்டுகளைக் கடத்திவிட்டால், 'இனப்படுகொலை' என்கிற வார்த்தையே மறந்துபோய்விடும் என்று நினைத்தது இலங்கை.
'இந்தக் கொடும் குற்றங்களுக்கு யாராலும் எந்த அரசாலும் மன்னிப்பு கொடுக்க முடியாது' என்கிற பிள்ளையின் வார்த்தைகள் துருப்பிடிக்காமல் இருப்பதைப் பார்த்து இப்போது நடுங்குகிறது.
அதன் தூக்கத்தைத் தொலைக்கிற மேலதிக அச்சுறுத்தல், ஆவணப் பட வடிவில் மேக்ரேவிடமிருந்து வந்தபடி இருக்கிறது.
இதுவரை உலகில் நடந்த எந்த இனப்படுகொலைக்கும் இந்த அளவுக்கு வலுவான ஆதாரங்கள் இருந்ததில்லை. அதனால்தான், மகிந்தன் நடுங்குகிறான், கோத்தபாய நடுங்குகிறான், பசில் நடுங்குகிறான். அந்த மிருகங்களை அச்சுறுத்தியே வண்டியை ஓட்டுவது என்கிற கொள்கை தான் ரணிலின் பிரதான கொள்கையாக இருக்கிறது இன்று!
மகிந்த ராஜபக்சேவை மின்சார நாற்காலியிலிருந்தும், சர்வதேச விசாரணையிலிருந்தும் நாங்கள் தான் காப்பாற்றியிருக்கிறோம்.... படையினருக்கு நாம் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டோம் - என்கிறார் ரணில்.
நடக்கப் போவது முழுக்க முழுக்க உள்நாட்டு விசாரணை, சர்வதேச விசாரணை என்கிற மிரட்டலுக்கெல்லாம் இனிமேல் இடமே இல்லை, எங்களது ராஜதந்திரத்தால் ஜெனிவாவில் வெற்றி கண்டுள்ளோம் - என்கிறார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனா.
ஏகாதிபத்தியங்களின் மரண வலையிலிருந்து நாட்டை மீட்ட மைத்திரியே வருக வருக - என்று வரவேற்கின்றன,
கொழும்பு திரும்பிய மைத்திரியை வரவேற்க வழிநெடுக வைக்கப்பட்டிருந்த பதாகைகள்.
சர்வதேச விசாரணை - என்கிற வார்த்தையே அமெரிக்காவின் தீர்மானத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.... மனித உரிமை மீறல் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளைப் பயன்படுத்த இலங்கை அரசியல் சட்டம் அனுமதிக்கப் போவதில்லை....
வெளிநாட்டு நீதிபதிகளைப் பயன்படுத்தியே ஆக வேண்டுமென்று வலியுறுத்துவது சீன ஆதரவாளரான ராஜபக்சவை அரசியல்ரீதியாக பலப்படுத்திவிடும் என்பதால் அமெரிக்காவும் இந்தியாவும் அப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கப் போவதில்லை' என்று இந்தியாவிலிருந்து ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறது - மீசையுடனேயே உலாவரும் ராஜீவ்காந்தியின் உளவுக் கிளி.
தீர்மானத்தில் இருக்கும் குறைபாடுகள் நீக்கப்படாவிட்டால், அது ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் பாதிக்கும் - என்று முதல் முதலில் எச்சரிக்கை மணி அடித்தவர்,
வட மாகாண சபை முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன். 'இலங்கையை விசாரிக்க சர்வதேச (குற்றவியல்) தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்' என்கிற கருத்தைத் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொன்னவரும் அவர்தான்!
"வெளிநாட்டு நீதிபதிகளிலிருந்து வழக்கறிஞர்கள் வரை அத்தனை பேரின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டுகிற ஒரு தீர்மானத்தை 'ராஜதந்திர வெற்றி' என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
போரில் இலங்கைக்கு வெற்றி தேடித்தந்த அத்தனைப் பேரும், நாட்டைக் காக்கிற புனிதமான கடமையில் ஈடுபட்டவர்கள்... அந்த போர்க் கதாநாயகர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை...." என்று அவசர அவசரமாக அறிக்கை விடுகிறது மகிந்த மிருகம்.
'அமெரிக்கத் தீர்மானம் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் வழங்குவதாக இல்லை... அது இலங்கை அரசுக்கு சாதகமாகவும், தமிழர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது....
இலங்கை அரசிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருதி நிறைவேற்றப்பட்டுள்ள இந்த வலுவற்ற தீர்மானம், இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் தராது' என்கிற உண்மையை உலகறியச் சொல்கிறார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.
'இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை உற்றுக் கவனிப்பதுடன், சர்வதேச சமூகம் அதில் தொடர்ந்து ஈடுபாடு காட்ட வேண்டும். அதைப் பொறுத்தே அடுத்தடுத்த நிகழ்வுகள் இருக்கும்' என்கிறான், கலம் மேக்ரே.
கொழும்பிலிருந்து வெளிவருகிற ஆங்கிலப் பத்திரிகைச் செய்திகளின் பின்னூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் சிங்கள வாசகர்கள் கூட, 'குற்றவாளி தன்னைத்தானே எப்படி விசாரித்துக் கொள்ள முடியும்' என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
1958-லேயே தமிழினப் படுகொலை தொடங்கிவிட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஒரு வாசகர், 'இதற்குப் பிறகும் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டால், அவர்கள் எப்படி நம்மை நம்புவார்கள்' என்று கவலையோடு கேட்கிறார். (1958ல் பிரபாகரனுக்கு நான்கு வயது!)
ஜெனிவாவில் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி இப்படியொரு விவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதுகுறித்து கவலையே படாத ஒரு மனிதரும் நம்மிடையே இருக்கிறார். அவர், இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்.
'அகிம்சை வழியைப் பின்பற்றிய செல்வநாயகம் வழிகாட்டியிருந்தும் கூட தமிழ் மக்கள் ஏன் வன்முறையைப் பின்பற்றினார்கள் என்பது கேள்விக்குறி...
வன்முறையை இனி ஒருபோதும் ஆதரிக்க முடியாது' என்பது திருவாளர் சம்பந்தத்தின் திடீர்க் கேள்வி மற்றும் திடீர் அறிவிப்பு.
ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இதைத்தான் பேச வேண்டும் என்று காத்திருந்தவரைப் போல், சம்பந்தா சம்பந்தமில்லாமல் இப்போது இதைப் பேசியிருக்கிறார் அவர்.
'மனித நேயத்தையும் அகிம்சை நெறியையும் போதித்த புத்த பெருமானின் பௌத்தத்தைப் பின்பற்றுகிற சிங்கள மக்கள், சிங்கள பௌத்த இனவெறியையும் தமிழருக்கு எதிரான அடக்குமுறையையும் எதனால் கட்டிக்கொண்டு அழுகிறார்கள்' - என்கிற வினா, சுமார் அறுபது ஆண்டுகளாக விடை தேடித் திரிகிற வினா.
தமிழர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பியிருக்கிற இந்தக் கேள்வியை எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனும் எழுப்ப வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், அவர் விடுதலைப் போராட்ட வீரரல்ல.... அரசியல்வாதி!
அந்தக் கேள்வியை சம்பந்தனுக்கு யாரும் நினைவு படுத்தவும் வேண்டாம்...
சம்பந்தப்பட்டவர்களிடம் சம்பந்தன் அதைக் கேட்கவும் வேண்டாம்...
அது அவருக்கும் தர்மசங்கடம்.....
பதிலளிக்க வேண்டிய சிங்களத் தலைவர்களுக்கும் தர்மசங்கடம்...
பல ஆண்டுகள் கழித்து எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் இப்போதுதான் ஒரு தமிழர் உட்கார்ந்திருக்கிறார். எந்த விதத்திலும் யாரும் அதற்கு இடைஞ்சலாக இருந்துவிடக் கூடாது.
அதற்காக, புத்தனோடு தொடர்புடைய கேள்வியைத் தவிர்க்கிற மாதிரி, ஈழத்து காந்தி தந்தை செல்வாவோடு தொடர்புடைய கேள்வியை நாம் தவிர்த்துவிட முடியாது.
அகிம்சாமூர்த்தி புத்தனின் வழியைப் பின்பற்றும் சிங்கள மக்களின் மனசாட்சியை சாத்விகப் போராட்டங்களால் தட்டியெழுப்பும் முயற்சிகளில் தோல்வியடைந்த பிறகே, 'தமிழ் ஈழம்' என்கிற தனி நாட்டுக் கோரிக்கையை எழுப்பினார் செல்வா.
உடல் நடுக்க நோயான பார்க்கின்சனால் பாதிக்கப்பட்ட தந்தை செல்வா, அந்த நிலையிலும், நிலை தடுமாறாமல் நின்றார். 1975ல் இடைத்தேர்தல் வெற்றி, 76ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம், 77ல் பொதுத்தேர்தல் வெற்றி - ஆகியவற்றின் மூலம் 'தமிழ் ஈழம் தான் தமிழருக்கான தீர்வு என்பதை உறுதி செய்தார்.
இலங்கை சுதந்திரதினத்தைப் புறக்கணித்து, தமிழரின் தன்மானத்தைத் தூக்கிப் பிடித்தவர் செல்வா. அந்தத் தலைவனின் கொள்கையை வந்த விலைக்கு விற்றுவிடத் தயாராக இருந்தவர்களிடையே,
உயிரைக் கொடுத்தாவது செல்வாவின் லட்சியத்தை அடைய வேண்டும் என்கிற ஓர்மத்துடன் நின்றவர்கள் பிரபாகரனும் அவனது தோழர்களும் மட்டும்தான்!
'தந்தை செல்வா வழிகாட்டியும் கூட' என்று இப்போது சொல்கிற சம்பந்தன், செல்வா காட்டிய எந்தப் பாதையில் போகிறார்? தனித் தமிழ் ஈழம்தான் தமிழருக்கான தீர்வு - என்கிற செல்வாவின் குரலை எதிரொலிக்கிறாரா? சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறாரா?
செல்வா காட்டிய வழியில் செல்லாமல், 'ஒருங்கிணைந்த இலங்கைக்குள்தான் தீர்வு' என்று சூளுரைக்கிறாரே திருவாளர் சம்பந்தன்..... ஏன்? தந்தை செல்வாவின் தமிழீழ லட்சியத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்கிறாரே.... ஏன்?
செல்வநாயகம் என்கிற அப்பழுக்கற்ற தலைவனுக்கு இப்படியொரு பச்சைத் துரோகத்தைச் செய்துவிட்டு, போராடிப் பெற வேண்டிய உரிமைகள் அனைத்தையும் பிச்சையெடுத்துப் பெற்று விடமுடியும் என்று போதிக்கத் துடிக்கிற மனிதர்களுக்கு,
 'அகிம்சை வழியைப் பின்பற்றிய செல்வநாயகம் வழிகாட்டியிருந்தும் கூட தமிழ் மக்கள் ஏன் வன்முறையைப் பின்பற்றினார்கள்' என்று கேள்வி எழுப்ப என்ன தகுதி இருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில் அவர்களுக்குத் தெரியவே தெரியாதாமா?
பார்கின்சன் நோயால் சிரமப்பட்ட நிலையிலும் உறுதி குலையாமல் விடுதலைக்காகப் போராடிய தந்தை செல்வாவின் பெயரை, அடிமை மனோபாவத்திலிருந்து விடுபட முடியாத மன நோயாளிகள் மருந்துக்குக் கூட வெட்கமின்றி உச்சரிப்பது என்ன நியாயம்?
தங்கள் சொந்தத் தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போர் வீரர்களுக்கு 'பயங்கரவாதிகள்' என்கிற முள்முடியைச் சூட்டவும், பாலியல் வன்முறை முதலான கேவலமான போர்க்குற்றங்களிலும் இனப்படுகொலையிலும் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகளுக்கு 'போர்க் கதாநாயகர்கள்' என்று பரிவட்டம் கட்டவும் நாண்டுகொண்டு நிற்கிறது, இலங்கை. அதற்காகத்தான் 'எங்களை நாங்களே விசாரித்துக் கொள்வோம்' என்கிறது.
இலங்கையின் இந்த திமிர்வாதத்தையும், சர்வதேச சமூகத்தை அவமதிக்கும் போக்கையும் தட்டிக் கேட்பதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் முதல் கடமையாக இருந்திருக்க வேண்டும்.
'நிரபராதிகள் என்று உங்களுக்கு நீங்களே முடி சூட்டிக் கொள்ளப் போகிறீர்களா' என்று கேட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் அவர். அதைச் செய்யாமல், குப்புறத் தள்ளிவிட்டுக் குழியும் பறிக்கிற குதிரை மாதிரி அவர் நடந்து கொள்வது தான் குமுற வைக்கிறது என்னை!
'தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் என்றாலும், நவநீதம் பிள்ளை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்.... அவர் எப்படி நடுநிலையோடு செயல்பட முடியும்' என்று அன்றைக்கு ஊளையிட்ட சிங்களச் சிங்கங்கள்தான், இன்றைக்கு - 'எங்களை நாங்களே தான் விசாரித்துக் கொள்வோம்' என்று கூசாமல் பேசுகின்றன.
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகத் திகழ்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆகப் பெரிய தலைவர், அன்றைக்கு பிள்ளை மீது புழுதி வாரி இறைத்தபோது கண்டிக்கவுமில்லை...
இன்றைக்கு 'நாங்களே தான் விசாரிப்போம்' என்று கூத்தடிப்பதைப் பார்த்துக் குமுறவும் இல்லை. அந்தக் குமுறலை எப்படி நான் வெளிப்படுத்தாமல் இருக்க முடியும்?
புகழேந்தி தங்கராஜ்

ad

ad