புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2015

கனடியப் பொதுத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களின் நிலை

கனடியப் பொதுத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களின் நிலை!
கனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்று முடிந்த தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் சார்பில்
‘ஸ்காபரோ-ரூஜ்பார்க்’ தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 16,302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
‘ஸ்காபரோ ரூஜ்பார்க்’ தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி 29,906 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தொகுதியில்  என்டிபிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட  ஈழத் தமிழரான சாந்திக்குமார் 5164 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இதனிடையே ‘ஸ்காபுரோ வடக்கு’ தொகுதியில் என்டிபிக் கட்சியின் சார்பில் ‘ஸ்காபுரோ ரூஜ்றிவர்’ தொகுதியில் போட்டியிட்டுக் கடந்த முறை வெற்றி பெற்ற ராதிகா சிற்சபைஈசன் இம்முறை படுதோல்வியடைந்துள்ளார். அவர் 10,376 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். லிபரல் கட்சி வேட்பாளர் சான் சென் 18,903 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். பழமைவாதக் கட்சி வேட்பாளர், ரவிந்தர் மால்கி 10,738 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
‘ஸ்காபுரோ தென்மேற்கு’ தொகுதியில் பழமைவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மற்றொரு ஈழத் தமிழரான ரொஷான் நல்லரத்தினம் 10,376 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார். இந்த தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளர் முன்னாள் ரொறொன்ரோ நகர பொலீஸ் அதிகாரி பில் பிளையர் 25,585 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
‘மார்க்கம் தோர்ண்கில்’ தொகுதியில் என்டிபிக் கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தி செல்லையா என்ற ஈழத்தமிழர், 4595 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். இங்கு லிபரல் கட்சி வேட்பாளர் ஜோன் மெக்கெலம் 23,843 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பிராம்ரன் மேற்கு தொகுதியில் பசுமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட, ஈழத் தமிழரான கார்த்திகா கோபிநாத்தும் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இங்கு லிபரல் கட்சி வேட்பாளர் கமல் கேரா 24,256 வாக்குகளைப் பெற்று  வெற்றி பெற்றுள்ள நிலையில், கார்த்திகா கோபிநாத் 684 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
338 பேரைக் கொண்ட நாடாளுமன்றத்தில், லிபரல் கட்சி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கக் கூடிய வகையில் 184 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. லிபரல் கட்சியின் தலைவர் யஸ்ரின் ரூடோ கனடிய வரலாற்றில் 42ஆவது பிரதமராகப் பதவியேற்க உள்ளார். ஏற்கனவே ஆட்சியில் இருந்த பழமைவாதக் கட்சி 99 தொகுதிகளைக் கைப்பற்றிப் பிரதான எதிர்க்கட்சியாக வந்துள்ளது. கடந்த ஆட்சியில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கிய என்டிபிக் கட்சி 44 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. புளொக் கியூபெக்குவா கட்சி 10 தொகுதிகளில் வென்றுள்ளது. பசுமைக் கட்சியில் அதன் தலைவியான எலிசபெத் மே மாத்திரமே வென்றுள்ளார்.

ad

ad