புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2015

சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!

நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு அடங்கியுள்ள நிலையில், தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் திடீரென ராஜினாமா
செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா நடிகர்-நடிகைகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இயங்கி வருவதை போன்று தொலைக்காட்சி நடிகர்களுக்காக தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் 1,300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்பட மொத்தம் 23 பதவிகள் இருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்து முடிந்த தேர்தலில் தலைவராக நளினி, பொதுச்செயலாளராக பூவிலங்கு மோகன், பொருளாளராக வி.டி.தினகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் 2017-ம் ஆண்டு வரை இருக்கிறது. இருப்பினும் சங்க நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து தலைவர் பதவியில் இருந்து நளினியும் விலகினார்.

சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, திடீர் ராஜினாமா போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண கடந்த 21-ம் தேதி, சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ராஜினாமா செய்த நிர்வாகிகளின் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலை டிசம்பர் 13-ம் தேதி நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுகள், சங்கத்தை பாதிக்காமல் இருக்க போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து இருமடங்காக முன்பணம் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நளினி கூறுகையில், "சின்னத்திரை நடிகர் சங்கத்தை இளையதலைமுறையினர் தாங்கிப்பிடிக்கும் நேரம் வந்துவிட்டது. குடும்பம், நடிப்பு போன்ற காரணங்களால் தலைவர் பதவியை தொடர முடியவில்லை. நானாகவே பதவியை ராஜினாமா செய்தேன். இதில் வற்புறுத்தலுக்கும், சூழ்நிலைக்கும் இடமில்லை’’ என்றார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பு முடிந்த நிலையில், தற்போது சின்னத்திரை நடிகர்களின் தேர்தல், திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad