புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2015

ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு கைதிகளுக்கு தீர்வளித்த வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்


சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும் கோரி அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் உத்தரவாதம் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம் என உறுதியாகத் தெரிவித்திருந்த நிலையிலேயே வடக்கு முதல்வர் மேற்படி அவசர கடிதத்தை நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து வடக்கு முதல்வர், ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கு முயற்சித்த போது ஜனாதிபதி செயலகத்தில் அவருக்குப் பதிலாக ஜனாதிபதியின் செயலாளரே மறுமுனையில் பதிலளித்தார்.
அப்பொழுது ஜனாதிபதியின் செயலாளர் வடக்கு முதல்வரிடம் தங்களின் கடிதம் கிடைக்கப்பெற்றது. தற்போது ஜனாதிபதி அவர்கள் பொலநறுவையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளமையினால் அவருடன் தொடர்புகொள்ள முடியாது எனவும், தங்களின் கடிதம் தொடர்பாக உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டு உண்ணாவிரதமிருக்ககும் கைதிகளில் 33 பேரின் நிலைமை மிகமோசமான நிலையை எட்டியுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், அவர்களின் விடுதலைக்கு தங்களின் எழுத்துமூலமான உத்தரவாதம் மிகமிக அவசியமாக உள்ளது என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனையடுத்து வடக்கு முதல்வரின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி அவர்கள், கைதிகளின் விடுதலை தொடர்பிலான உத்தரவாதம் அடங்கிய  விரிவான  கடிதமொன்றினை சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பி, அவர் மூலமாக சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வரும் கைதிகளுக்கு ஜனாதிபதியின் உத்தரவாத கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது.
அதன் பின்னரே ஜனாதிபதியின் உத்தரவாதக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு நவம்பர் மாதம் 7ம் திகதி வரை தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்தனர்.
அத்துடன் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக முழுமூச்சுடன் அரசின் உயர்மட்டங்கள் அனைவரையும்  நேரடியாக தொடர்புகொண்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ad

ad