புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2015

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் : ரஜினி, கமலுக்கு நடிகை ரோஜா கோரிக்கை



நடிகை ரோஜா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை:
‘’ இந்தியாவின் ஹாலிவுட் என்று புகழ் பெற்ற சென்னை நகரத்தில், தென்னிந்திய மொழிகளின் படங்கள் தயாரிக்கப்பட்ட பொற்காலத்தில் தொடங்கப்பட்டது நமது தென்னிந்திய நடிகர் சங்கம். 

 தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்  M. G. R  தமிழக மக்களின் அன்பையும், பாசத்தையும் பெற்று தமிழக முதல்வராக ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இன்றும் இறந்தும் இறவாத அழியா புகழ் பெற்ற அமரராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  அவரைத் தொடர்ந்து,  உறுப்பினர்  N. T. ராமாராவ் அவர்களும் ஆந்திர மாநில முதல்வராக ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். பிறகு, நமது ஜெ.ஜெயலலிதாமுதல்வராக ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார். இது போன்ற உலக அரசியல் சாதனைகள் கொண்டது மட்டுமின்றி, நமது சங்கம் உலக புகழ் பெற்ற சாதனையளர்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். N. S. கிருஷ்ணன், M. R. ராதா,T. S. பாலையா, V. K. ராமசாமி, கண்ணம்மா, பானுமதி, திருமதி. சாவித்திரி, அஞ்சலிதேவி  போன்ற அழியாப்புகழ் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட பாராம்பரியப் பெருமை கொண்டது.
 
காலத்தில் திரைப்படத்தொழில் அந்தந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டதனால், ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு நடிகர்கள் சங்கம், கர்நாடக மாநிலத்தில் கன்னட நடிகர்கள் சங்கம், கேரளத்தில் மலையாள நடிகர்கள் சங்கம் என்று தனித்தனி சங்கள் அமைக்கப்பட்டு விட்டன. ஆயினும், பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழர்களாகவே இருந்தபோதும் தமிழ் நாட்டில் மட்டும் நடிகர்கள் சங்கம்  மொழி பேதமின்றி ஒரே குடும்பமாக, பழமையின் பாதுகாவலனாக தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. 

நடிகர்கள் மக்களிடம் செல்வாக்கும், பெரும் மதிப்பும் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் ஒரு நல்லதை செய்தாலும் நூறு நல்லதாகவும். ஒரு சிறிய தவறு செய்தாலும்கூட அது பெரும் தவறாக நமது மக்களிடம் சென்றடைந்து விடுகிறது. தமிழர்கள் நடிகர்கள் மீது கொண்ட பேரன்பினால் அவர்கள் தொடர்பான அனைத்து செய்திகளும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக தமிழ்நாட்டில் மாறிவிடுகின்றன. அதுபோலவே தற்போது நடிகர் சங்கத்தின் தேர்தல் பற்றிய செய்திகள் விதவிதமாக – பரபரப்பாக வந்த வண்ணம் உள்ளது. 
   
தற்போது நமது சங்க தேர்தல் களத்தில் போட்டியிடும் அணிகள் இரண்டாக, பிளவுபட்டு, பலவிதமான கருத்து வேறுபாடுகளுடன் பத்திரிகை செய்திகள் தினமும் வந்தவண்ணம் இருக்கின்ற இந்த நிலை நீடித்தால், மொத்தமாக எல்லா நடிகர்களுக்கும் இழுக்கு ஏற்படக்கூடிய நிலையே நிச்சயம் உருவாகும்.

ஒரு அணியில் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார் போன்ற  அனுபவம் பெற்றவர்கள், மறு அணியில், விஷால், நாசர், சூர்யா, கார்த்தி என்று பல புதியவர்கள் இருந்தாலும் அனைவரும் சங்கத்தின் நலனுக்காக உழைக்க விரும்பும் உறுப்பினர்கள் என்பதில் சிறிதேனும் ஐயம் இல்லை.

பல்லாண்டு காலம் சங்கத்திற்காக உழைத்த மூத்த உறுப்பினர்களை, புதியவர்கள் சிறுமைப்படுத்துவதோ அல்லது சங்கத்தின் வளர்ச்சிக்கு நமது சேவையும் இருக்கவேண்டும் என விரும்பும் இளைஞர்களை – புதியவர்களை நிர்வாகத்தில் உள்ளவர்கள் அலட்சியப்படுத்துவதோ, நிராகரிப்பதோ ஏற்புடையதல்ல. சங்கத்திற்காக நீண்ட காலம் உழைத்தவர்களை தேர்தல் கள ஆவேசத்தில் குறை சொல்லி சிறுமைப் படுத்துவதும் நல்லதல்ல. ஏனெனில் சங்கம் வங்கியில் வாங்கிய கடனுக்காக, கடனில் மூழ்கி,  சங்கமே வங்கியின் கைக்குள் போய்விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது, அந்த நிலையை மாற்றி கடனை அடைத்தவர்களில் விஜயகாந்த்,  சரத்குமார் அவர்கள் முதன்மையானவர்கள் என்பது யாவரும் மறுக்க முடியாத உண்மையாகும். அன்று அவர்கள் தலைமை ஏற்காமல் இருந்திருந்தால், இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென இந்த இடமே இல்லாமல்கூட போயிருக்கலாம்.

மலேசியா, சிங்கப்பூரில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க கலை விழாவில் சக கலைஞர்களின் பயண உடைமைகளை தூக்குவதிலிருந்து, அவர்கள் தங்கியிருக்கும் விடுதி அறைகளுக்கு சாப்பாடு எடுத்து வந்து வைக்கும் வேலைகள் வரை அனைத்து வேலைகளையும் எந்த கூச்சமோ, அவமான உணர்வோ இல்லாமல் செய்தவர் சரத்குமார் அவர்கள் என்பதை அந்த கலை விழாவில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. இதை விஷால், சூர்யா, கார்த்தி போன்ற அவர்கள் அணியில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் பணிவன்புடன் தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.
   
 அதுபோன்றே “கார்த்தி, சூர்யா, விஷால், நாசர் போன்ற நண்பர்களுடன் பேசும்போது அவர்கள் கருத்துகளில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. சரத்குமார் மீது நன்மதிப்பு கொண்டவர்களாகவே தெரிகிறார்கள்.  ராதாரவி அப்படி பேசினார், இப்படிப் பேசினார் என்ற சின்ன மன வருத்தங்களைத் தவிர அவர்களுக்கு ராதாரவி மீதும் எந்த தனிப்பட்ட விரோதமும் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் வருத்தமெல்லாம் தென்னிந்திய நடிகர் சங்க நிலம் தனியார் கைகளுக்குப் போய்விடக்கூடாது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இடம் நடிகர்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு தவறான நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. இதை  சரத்குமார் அவர்களிடம் நான் தெரிவித்த போது, ரோஜா,  “தென்னிந்திய நடிகர் சங்க கட்டட ஒப்பந்தத்தில் இது தவறாக இருக்கிறது, இதை நீக்கவேண்டும் என்று சிவக்குமார் அவர்களோ, சூர்யா, கார்த்தி, விஷால், பொன்வண்ணன், நாசர் அவர்களோ யாருமே இதுவரை என்னிடம் பேசியதில்லை. அது குறித்து கேட்டதில்லை. உண்மையில் இந்த ஒப்பந்தம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சாதகமானது. இருப்பினும் உண்மையிலேயே அவர்களின் கோரிக்கை அதுதான் என்றால் அந்த ஒப்பந்தத்தில் எந்த தவறு இருந்தாலும் அதை மாற்றிக் கொடுக்கிறேன்” என்று தெரிவித்தார். அப்போது எந்த பிரச்சினையும் இல்லை. அப்படி என்றால் ஏன் இந்த தகராறு…? பொதுவாகவே நடிகர்கள் உணர்வு பூர்வமானவர்கள். யாரோ ஒருசிலர் அவர்கள் உணர்வுகளைத் தூண்டிவிட்டு ஒன்று சேரவிடாமல் தடுத்து இந்த அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பது புரிகிறது. 

இதுபோன்ற சூழ்நிலை சங்கங்களில் உருவாவது ஒன்றும் புதிதல்ல.  சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் இதுபோன்ற பிரச்சினை உருவானபோது, மூத்த இயக்குநர்கள் இரு அணியாக பிரிந்து நின்ற போது, பாரதிராஜா, என் கணவர் ஆர். கே. செல்வமணி மற்றும்  P. வாசு,  K.S. ரவிக்குமார் போன்ற சில மூத்த திரைப்பட இயக்குநர்கள் முன்முயற்சி எடுத்து அந்த சிக்கலை மிக சுமுகமாக தீர்த்து வைத்து ஒற்றுமையை உருவாக்கினார்கள். இன்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்ற சங்கங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

நமது தென்னிந்திய நடிகர் சங்கம் இது போன்ற முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். நாம் அனைவரும் ஒரே குடும்பமாக, நண்பர்களாக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்கு திரைப்படத் துறையின் மூத்த கலைஞர்களான ரஜினிகாந்த் , கமலஹாஸன் முயற்சி எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன். 

ஹைதராபாதில் நான் குழந்தைகளை பள்ளிக்கு அழத்துச் செல்ல கிளம்பும் போது, “சரத் சார் போன் செய்திருந்தார். நடிகர் சங்க தேர்தலுக்கு வரவேண்டும் என்றார். நானும் தகுந்த நேரத்தில் சென்னைக்குக் கிளம்ப இருந்தேன். நான் குழந்தைகளை பள்ளியில் விட்டு வீடு திரும்பினேன். “கார்த்தி போன் செய்திருந்தார். எனக்கு ஒரே குழப்பமா இருந்தது. இவங்க இரண்டுபேரும் எதிரெதிரா இருக்கிறது கவலையா இருக்குது. என்ன முடிவு எடுக்கிறதுன்னும் தெரியல.  நான் ராதிகா அக்காவை என் சொந்த அக்காவாகவேதான் நினைக்கிறேன். அவங்கள அக்கா என்னும் உணர்வுடனே கூப்பிட்டு, அப்படியே பழகுவேன். அவங்களும் அப்படித்தான் எங்ககூட பழகறாங்க. அதேபோல கார்த்தியும் என்னை அக்கான்னே கூப்பிடுவார். அவரையும் நான் உடன் பிறந்த சகோதரராகவே நினைத்து பழகி வருகிறேன். 

இன்றைய இந்த சூழல் எனக்கு மிகப்பெரிய வருத்தத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. எனக்கு  மட்டுமல்ல பல கலைஞர்களும் இது போன்று வெளியில் சொல்ல முடியாத சங்கடத்துடன் இருக்கிறார்கள். நம் சக கலைஞர்களை நிர்பந்தத்திற்குள்ளாக்கும் இந்த சூழலை மாற்றி, நாம் அனைவரும் பிளவுபடாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைத்து நம் ஒற்றுமையை மேலும் பலபடுத்தும் விதமாக நாம் செயல்பட வேண்டும். இதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad