புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2015

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் நன்மை கருதி தீபாவளிக்கு முன்னர் இந்த 3500 ரூபா கொடுப்பனவை வழங்கும் முயற்சியில் அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி ஈடுபட்டது.

எனினும் தோட்டக் கம்பனிகளின் நிலைப்பாட்டிற்கு அமைய தேயிலை சபை ஊடாக இந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அமைச்சரவை பத்திரத்தின்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்க சுமார் 685 மில்லியன் ரூபா தேவை என கணிப்பிடப்பட்டது. அதன்படி அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஸ்ணன் உள்ளிட்ட குழுவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து குறித்த பணத்தை திறைசேரி ஊடாக பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை பிரதமர் ஏற்றுக் கொண்டு திறைசேரியில் இருந்து பணத்தை வழங்க இணக்கம் தெரிவித்தார். எனினும் திறைசேரியில் இருந்து இலங்கை தேயிலை சபையூடாக இந்த பணத்தை கைமாற்ற பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேலதிக அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து இன்று அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.  

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு திறைசேரியில் இருந்து 3500 ரூபா கொடுப்பனவு வழங்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவென்பது முக்கிய அம்சமாகும்.

இன்று கிடைக்கப்பெற்ற அமைச்சரவை அனுமதியின் பின்னர் இலங்கை தேயிலை சபையின் தலைவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பெடுத்த அமைச்சர் பழனி திகாம்பரம், தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.

அதன்படி பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் இலங்கை தேயிலை சபை இடையே உடன்படிக்கை ஒன்று செய்து கொள்ளப்பட்டதன் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 3500 ரூபா கொடுப்பனவு விரைவில் வழங்கப்படவுள்ளது.

ad

ad