புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2015

பொதுமன்னிப்பில் விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் மீண்டும் உண்ணாவிரதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் நாளை  முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரில் எம்மிடம் தெரிவித்ததையடுத்தே கடந்த மாதம் 12ஆம் திகதி ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை 17 ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தோம். 

எனினும், நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது விடுதலை தொடர்பான கோரிக்கைகள்  நிராகரிக்கப்பட்டுள்ளதோடு  ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியும் குறித்த காலவரையில் நிறைவேற்றப்படாமையால் எமது விடுதலையை வலியுறுத்தும் வகையில் இடைநிறுத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை முதல் தொடரப் போகின்றோம்'' என்று நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள், தமது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊடாக இந்தத் தகவலைத் தெரியப்படுத்தியுள்ளனர். 

தமிழ் அரசியல் கைதிகளின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் பயங்கரவாதச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு அச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை பல்வேறு தடவைகளில் கோரியிருந்தபோதும் அக்கோரிக்கைகள் அந்தந்தக் காலத்தில் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டனவே தவிர எமது உறவுகளுக்கான தீர்வுகள் எவையும் வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்தும் அரசாங்கமொன்று தமிழ் மக்களின் வாக்குப் பலத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. 

அதன் பின்னர் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் மீண்டும் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஆட்சிப்பீடமேறியது. இப்புதிய மாற்றமானது நீண்டகாலமாக எம்மை விட்டுப் பிரிந்திருக்கும் எம் உறவுகளை மீண்டும் எம்முடன் இணைந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தும் எனப் பாரிய நம்பிக்கை கொண்டிருந்தோம். எனினும், புதிய அரசாங்கம் பதவியேற்று இற்றைக்கு ஆறு மாதங்கள் உருண்டோடியிருக்கும் நிலையில் எமது உறவுகளின் விடுதலை தொடர்பாக எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எவையுமே முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. 

இந்நிலையிலேயே, அவர்கள் கடந்த மாதம் 12ஆம் திகதி உறவுகளுடன் வாழ்வதற்கு வழிவிட்டு பொதுமன்னிப்பளித்து விடுதலையளியுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து உயிர்துறக்கும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர். எனினும், ஐந்து தினங்கள் கடந்த நிலையில் பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னதாக இவ்விடயத்திற்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனுடனான தொலைபேசிக் கலந்துரையாடலில் வாக்குறுதி அளித்திருந்தார்.

எனினும், நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்தபோது தமிழ் அரசியல் கைதிகள் பகுதி பகுதியாக பிணையில் விடுதலையாவார்கள் என்றே கூறப்பட்டிருக்கின்றது. குறிப்பாக எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை 32 பேரும், 20ஆம் திகதிக்கு முன்னதாக 30 பேரும் பிணையில் விடுவிக்கப்படவுள்ளனர்.

 48 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியே இறுதித் தீர்மானம் எடுக்கவேண்டும். ஏனையோரின் விடுதலைதொடர்பில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துடன் அமைச்சரவை குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது அவர்களின் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஜனநாயக ரீதியாக நல்லாட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தண்டனைக் காலத்தை விடவும் அதிகமாக சிறைக்கூடங்களில் வாடும் எமது உறவுகளை எம்முடன் இணையுங்கள் என்றே கோருகின்றோம். 

எமது பிள்ளைகள், குடும்பத்தினர் அவர்கள் இல்லாமையால் வறுமையின் கோரத்திற்குள் துவண்டுகொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் என்ன செய்வதென்ற நிலைமையே உருவாகின்றது. எவ்வாறு வாழ்க்கையை கொண்டு செல்வதென்ற கேள்வியே எழுகின்றது. ஆகவே, எமது உறவுகளின் விடுதலை சட்ட நுணுக்கங்கள் உள்ளிட்ட வேறுபல காரணங்களைக் காட்டி விடுதலையை தாமதப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த காலத்தில் ஜே.வி.பியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அவர்களைக் கைதுசெய்து சிறைகளில் அடைத்தார்கள். பின்னர் அவர்களை விடுதலை செய்யும்போது சிறு குற்றமிழைத்தவர்கள், பெருங்குற்றமிழைத்தவர்கள் நடுத்தரக்குற்றமிழைத்தவர்கள் என வகைப்படுத்தாது ஒட்டுமொத்தமாக பொதுமன்னிப்பளித்தே விடுதலை செய்தார்கள். 

உலகின் எந்தவொரு நாட்டிலும் போதைப்பொருள் கடத்துவது மரணதண்டனை விதிக்கப்படக்கூடியளவுக்கு பாரிய குற்றமாக காணப்படுகின்றது. அவ்வாறிருக்கையில் இந்தியா கொந்தளிக்கின்றது என்பதற்காக போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மரணதண்டனை வழங்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னிப்பளித்திருக்கின்றார். 

மேலும், போரில் நேரடியாக தொடர்புபட்ட 12ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து முன்னாள் போரளிகள் என்ற புதிய பெயருடன் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டில் நிகழ்ந்துள்ள நிலையில் வெறுமனே சந்கேத்தின் பேரிலும், சிறு குற்றச்சாட்டுக்களுடனும் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு ஏன் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யமுடியாது? நல்லாட்சி தொடர்பாக பேசும் அரசு எமது உறவுகள் அனைவரையும் தடுத்துவைப்பதை தொடராது உடன் விடுதலையளிக்கவேண்டும் என்பதை அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், சர்வமதக் குழுக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு வலியுறுத்தல்களை செய்யவேண்டும். சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள எமது உறவுகளுக்கு ஆதரவாக இன, மத, மொழி, அரசியல் பேதங்களை மறந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றனர். 

ad

ad