புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2015

இலங்கையில் அடைமழை! வெள்ளக்காடானது வடக்கு, கிழக்கு! ஒரு இலட்சம் பேர் பாதிப்பு


இலங்கையின் பல பகுதிகளிலும் பெய்துவரும் அடைமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு, கிழக்கில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வடக்கு மாகாணத்தில் 22 ஆயிரத்து 541 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 597 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 765 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 29 வீடுகள் முழுமையாகவும், 592வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்கத்தால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மேலாக பெருமழை
பெய்துவருகிறது.
எனினும், தாழமுக்கம் இன்று திங்கட்கிழமை மாலையுடன் குறையும் சாத்தியம் காணப்படுகிறது என்றும், இதனால் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையில்
மாற்றம் ஏற்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிதீன் தெரிவித்தார்.
காங்கேசன்துறை தொடக்கம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை வரையான பகுதிகளில், கடும் காற்றுடன் மழை பெய்வதால் கடல் மிகவும் கொந்தளிப்பாகக்
காணப்படுகின்றது. கடலுக்குச் செல்லவேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கப்பட்டிருந்ததால் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடாமல் உள்ளனர்.
வீதிகளில் மக்களின் நடமாட்டமும் குறைவாகவே காணப்படுகின்றது. நகரப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவரும் தொடர் மழையால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன், மலையகம், வடமத்திய மாகாணத்திலும் அடைமழை தொடர்வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிட்ட நாளாந்த நிலைமை அறிக்கையின்படி, யாழ். மாவட்டத்தில் 18 ஆயிரத்து 36 குடும்பங்களைச் சேர்ந்த 59 ஆயிரத்து 526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 336 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 361 குடும்பங்களைச் சேர்ந்த 976 பேர் 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 79வீடுகள் பகுதியளவுசேதமடைந்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 139 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 வீடுகள் முழுமையாகவும் 418 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 12 இடைத்தங்கல் முகாம்களில் 231 குடும்பங்களைச் சேர்ந்த 765 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 5 குடும்பங்களைச் சேர்ந்த 4 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் ஆயிரத்து 717 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகள் முழுமையாகவும் 5 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 270 குடும்பங்களைச் சேர்ந்த 815 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் ஆயிரத்து 786 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் ஆயிரத்து 777 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில்தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 103 குடும்பங்களைச் சேர்ந்த 393 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 487 பேர் 10 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இராஜாங்கனை உள்ளிட்ட 16 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா, தப்போவ, லுனுகம்வெஹர மற்றும் வெஹரகல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன
குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்து வாழும் மக்களை அவதானமாகச் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், அடை மழையால் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ad

ad