புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2015

மிதக்கிறது சென்னை (வீடியோ)

மிழகமே தொடர் மழைக்கு தத்தளித்து கொண்டு இருக்கிறது எனலாம். தலைநகர் சென்னையும் மழைக்கு தப்பவில்லை. அனைத்துப்பகுதிகளிலும் பாரபட்சமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். பலர் முடங்கி கிடக்கிறார்கள்.


இடம்- வியாசர்பாடி
 சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதாக மக்கள் மாநகராட்சியின் அவசர தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு வருகின்றனர். ஆனால் பலரது அழைப்புகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை. இதனால் சாலை மறியலிலும் மக்கள் ஆங்காங்கே காலை முதல் ஈடுபட்டனர். வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரில் வீட்டுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்ட பிறகே மறியல் கைவிடப்பட்டிருக்கிறது.
இடம்- கெல்லீஸ்

பெரம்பூர் ஜமாலியா பகுதியில் இடுப்பளவுக்கு மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இவ்வழியாக செல்லும் மக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்பட்டனர். மழை நீரை கடந்த இருசக்கர வாகனங்கள் பழுதடைந்தன. ஓட்டேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கீழ்தளத்தில் உள்ள வீடுகள் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டன. இதனால்  அந்த வீடுகளில் வசித்தவர்கள் முதல் மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்து நாசமாகி விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வியாசர்பாடி, வேப்பேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர் வடக்கு ரயில் நிலையம், கோயம்பேடு, சேத்துப்பட்டு, கிண்டி, சைதாப்பேட்டை, அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை மண்டல கட்டுப்பாட்டில் உள்ள வியாசர்பாடி ஏ.பி.சி கல்யாணபுரம், லட்சுமிபுரம், சத்யமூர்த்தி நகர், சாமந்தி பூ காலனி, முல்லைநகர், லேபர் காலனி, நேரு நகர், உதயசூரியன் நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

வியாசர்பாடி ரயில்வே பாலத்துக்கு கீழே கழுத்தளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதை கடக்க முடியாமல் மக்கள் நீந்தி செல்கின்றனர். இருச்சக்கர வாகனங்களை மீன்பாடி வண்டிகளில் ஏற்றி அந்தப்பகுதியை கடக்கின்றனர். குழந்தைகளும், பெண்களும் அந்தப்பகுதியை கடக்க முடியாமல் தவித்தனர். போக்குவரத்தும் அந்தப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையிலும், அண்ணாசாலையிலும், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இவ்வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மழை வெள்ளத்துக்கு அரித்துச் செல்லப்பட்ட சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களில் வாகனங்கள் சிக்கின. சென்னையில் பெரும்பாலான சாலைகள் செல்லரித்து காணப்படுகின்றன. குண்டும், குழியுமான இத்தகைய சாலைகள் போக்குவரத்துக்கு லாய்க்கற்ற நிலையில் உள்ளன.

சென்னையில் இயக்கப்படும் அரசு பஸ்களில் குடைப்பிடித்துச் செல்லும் அவல நிலை உள்ளது. ஓட்டை உடைசல் டப்பா பஸ்கள் உள்ளுக்குள் முழுவதும் ஒழுகின்றன. இதனால் பயணிகள் நனைந்தபடியே பயணித்தனர். இதுகுறித்து கண்டக்டர்களிடம் சில பயணிகள் புகார் சொல்ல, அவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் டிக்கெட் கொடுக்கும் கடமையில் கண்ணாக இருந்தனர்.
சென்னையில் இயக்கப்பட்ட புறநகர் ரயில்கள் அனைத்தும் மழையின் காரணமாக சிக்னல் பிரச்னையில் சிக்கி நடுவழியில் நிறுத்தப்பட்டன. குறிப்பாக சென்னையிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, வேலூர் வரை செல்லும் மின்சார ரயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல புறநகர்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்கள் சுமார் 5 மணி நேரம் தாமதமாக சென்னை சென்ட்ரலுக்கு வந்தன. நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்களில் இருந்து இறங்கிய பயணிகள் பலர் தண்டவாளம் வழியாக நடந்தே சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்தனர். மின்சார ரயில்கள் மட்டுமல்லாமல் சென்ட்ரலுக்கு வரும் மங்களூர், திருவனந்தபுரம் மெயில், மதுரை, ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ்கள் பெரம்பூர் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் வடமாநிலங்களிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் சென்னைக்கு வந்த பயணிகள் குடும்பத்துடன் நடுவழியில் நான்கு மணி நேரத்துக்கு மேல் காத்துகிடந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த பயணிகளில் சிலர் பஸ் அல்லது கார், ஆட்டோ மூலம் வீடுகளுக்கு சென்றனர்.

தொடர் மழை காரணமாக சென்னை நகரத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சரியான நேரத்துக்கு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனால் பலர் விடுமுறை எடுத்து வீடுகளிலேயே முடங்கி விட்டனர்.
சென்னையையொட்டி உள்ள புறநகர் பகுதிகளாக திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் வயல்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. விளை நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இதனால் வீட்டிலிருந்து நீந்திதான் சாலைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஏரிகளை சரிவர தூர்வாராததால் பல கன அடி நீர் கடலில் கலந்து வீரயமானது. ஆகமொத்ததில் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் பெயரளவுக்கு செயல்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னையில் மழை நீர் வடிகால் மற்றும் தண்ணீர் செல்லும் கால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படாததே முக்கிய காரணம். எல்லா பகுதிகளிலும் சாலை அமைக்கவே மாநகராட்சி அதிக அக்கறை செலுத்தியது. இதனால் மழை நீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதை நிலை நீடித்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. கழிவு நீர் செல்லக்கூடிய கால்வாய்களில் மழை நீர் புகுந்ததால் பலப்பகுதிகளில் தூர்நாற்றம் வீசுகிறது. கழிவு நீர் கால்வாய் உடைந்து ஊருக்குள் புகுந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை. வாக்கி டாக்கியில் வெள்ள பாதிப்பு நிலவரங்களை அதிகாரிகளிடம் சொன்னால் உடனடியாக செல்போனில் பேசுமாறு தெரிவிக்கிறார்கள். பாதிப்புகளை கூட வெளிப்படையாக சொல்ல முடியவில்லை" என்றனர்.

மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கும், கமிஷனர் விக்ரம் கபூரை செல்போனில் தொடர்பு கொண்டால் அவர்கள் பதிலளிக்கவில்லை. மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், "காலை முதலே மேயரும், கமிஷனர் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். ராட்சத மோட்டார் மூலம் சுரங்கபாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். ஜே.சி.பி இயந்திரம் மூலமாகவும் மழை நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மீட்பு பணிகளை செய்ய அதிகாரிகள், ஊழியர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்" என்றனர்.

கண்கெட்டப்பிறகு சூரியநமஸ்காரம் என்ற நிலையில் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு உள்ளது.

டெங்கு பாதிப்பு அதிகரிக்கும்

நன்னீரில் உற்பத்தியாகும் டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களின் தாக்கம் இனி அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறையினர் சொல்கிறார்கள். ஏனெனில் சென்னை முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதால் அங்கு டெங்கு கொசுக்கள் அதிகம் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. இதனால் டெங்குவின் பாதிப்பு இருமடங்கு அதிகரிக்கும். முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


செய்தி, படங்கள், வீடியோ- 
எஸ்.மகேஷ்

ad

ad