புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2015

பிகாரில் நரேந்திர மோடியை வீழ்த்தியது ஆயுதங்கள் எவை?

பிரதமர் மோடி இப்போது இரண்டாவது  முறையாக தேர்தலில்  தோல்வியை சந்தித்திருக்கிறார். முதல் தோல்வி டெல்லி
கெஜ்ரிவாலிடம். இரண்டாவது தோல்வி பாட்னா நிஷிஷிடம். மத்தியில் ஆட்சிக்கு வந்த இரண்டு  வருடங்களில் பாரதிய ஜனதா கட்சியும் அமித் ஷாவும் மோடியும் வரலாறு காணாத தோல்வியை முதன் முதலாக பிகார் போன்ற பெரிய மாநிலத்தில்  சந்தித்திருக்கின்றனர். இந்த தோல்வி பாரதிய ஜனதா கட்சிக்கும் மிகப் பெரிய பின்னடைவு என்பதையும் மோடி புரிந்து கொள்ளாமல் இருக்க மாட்டார்.
அதனால்தான் இந்த தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற்று விட வேண்டுமென பாரதிய ஜனதா கட்சி பல முனைகளில் இருந்தும் போராடியது. ஐந்து கட்டங்களாக நடந்த தேர்தலுக்காக பிகாரை சுற்றி சுற்றி வந்து பாரதிய ஜனதா தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாத காலமாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, பிகாரை விட்டு நகரவில்லை. அங்கேயே முகாமிட்டிருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 50க்கும் மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார். பிரதமர் மோடியும் தனது மற்ற அலுவல்களை மறந்து விட்டு பிகாரில்தான் கிடையாக கிடந்தார். இந்த தேர்தலுக்காக மட்டும் 26 இடங்களில் மோடி பல்வேறு பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார்.

ஆனால் முடிவு என்னமோ? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை விட மிக மோசமாக பாரதிய ஜனதா கட்சிக்கு அமைந்து விட்டது ,உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து வந்த மன்மோகன் அரசை விட மோடி அரசை அவ்வளவு மோசம் என்று சொல்லி விட முடியாது. பின்னர் ஏன் இவ்வளவு பெரிய தோல்வி என்ற கேள்வி எழாமல் இல்லை. அதற்கான காரணங்களை தாராளமாக பட்டியலிடலாம்.

இப்போதெல்லாம் மக்களிடையே மோடியை பார்க்க வேண்டுமென்ற ஆசைதான் உள்ளது போலும். அவரது பேச்சை சும்மா பேசுவார் ஆனால் செய்யமாட்டார் என்ற எண்ணம் மக்களிடையே தலை தூக்கியுள்தாம். அவர் பேசுவார் நாம் கேட்டு விட்டு போவோம் என்ற எண்ணத்தில்தான் வாக்காளர்கள் அவரது பேச்சை கருதத் தொடங்கி விட்டனராம். சேலத்தில் நடிகை நயன்தாராவை காண குவிந்த கூட்டம் போலத்தான் பிகாரில் மோடியை காண கூட்டம் கூடியதாம். ஆனால் கூடிய கூட்டம் வாக்களிக்கத் தவறி விட்டது என்பது புதுத் தகவல்.
பிகார் மாநிலத்தை பொறுத்த வரை முதல்வர் நிதிஷ்குமாருக்கு மக்களிடையே மிகுந்த நன்மதிப்பு உண்டு. லாலுவின் ஆட்சியால், கிட்டத்தட்ட இந்தியாவின் ஆப்ரிக்கா என்ற நிலையில் இருந்த பிகாரை தனது நல்லாட்சியியால் ஓரளவுக்கு  தூக்கி நிறுத்தியவர் நிதிஷ்குமார். இவருக்கு பெரிய அளவில் ஜாதி பின்புலமும் கிடையாது. ஆனாலும் நிதிஷின் திறைமையை லாலுவே புரிந்து கொண்டுதான் நிதிஷ்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஒதுங்கி கொண்டார்.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் பெரிய கட்சிகள். நிலையான வாக்குவங்கியை கொண்டவை. பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள ராம்விலாஸ் பஸ்வானின் கட்சிக்கு பெரியளவில் செல்வாக்கு கிடையாது.  பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் நிதிசும், லாலுவும் உறுதியாக இருந்தனர். இதனால்தான் எதிரியாக இருந்தவர்கள் இணைந்தனர். காங்கிரசும் தங்களால் முடிந்தவரை மோடியை வீழ்த்த உதவியாக இருந்துள்ளது.பாரதிய ஜனதாவை தோற்கடித்தோம் என்பது மட்டுமே இப்போதைக்கு  காங்கிரஸ் கட்சிக்கு திருப்தியை அளிக்கும். மற்றபடி பிகார் தேர்தல் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றியாக கருத முடியாது.  

மன்மோகன் அரசின் மீது ஏற்பட்ட அளவற்ற  வெறுப்புதான் பாரதிய ஜனதா கட்சியை கடந்த பொது தேர்தலில் அமோக வெற்றி பெற வைத்தது. வறுமையை ஒழிப்போம் விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசால் துவரம் பருப்பு விலையை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. நாடு முழுவதும் துவரம் பருப்பு பதுக்கப்பட்டு கொண்டிருப்பது கூட மத்திய அரசுக்கு தெரியவில்லையென்றால்... இதனை என்னவென்று சொல்வது?  

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 48 அமெரிக்க டாலர்கள். அதுவே மன்மோகன் காலத்தில் பேரலுக்கு 62 டாலர்கள். ஆனால் பெட்ரோல், டீசல் விலையில் மன்மோகன் அரசுக்கும் மோடி அரசுக்கும் பெரிய ஏற்றத் தாழ்வு இல்லை. கார்பரேட் நிறுவனங்களின் காதலர், அம்பானிகளுக்கு துணை போகுபவர் என்ற பிம்பம் சாதாரண மக்களுக்கு மோடி மீது விழுநது விட்டது.  

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில்தான் இதுவரை இல்லாத அளவுக்கு, மாட்டிறைச்சி விவகாரம் விசுவரூபம் எடுத்தது. உத்தரபிரதேசத்தில் தாத்ரியில் இக்லாக் என்ற முதியவர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து நாடு முழுவதுமே மாட்டுக்கறி விவகாரம்  சர்ச்சைக்குரிய விவாதமாகவே இருந்தது. நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும் போது மாட்டிறைச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? என்ற எண்ணமும் சாதாரண மக்களுக்கு கூட வரத்தான் செய்கிறது. இந்த விவகாரம் இன்று வரை, இந்தியாவில் முடிவுக்கு வரவில்லை. ஆனால் இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பிரதமர் என்ற முறையில் மோடி என்ன செய்தார்? ஏழ்மை நிறைந்த பிகாரில் மாட்டிறைச்சி உண்பவர்கள் அதிகம். அங்கு போய் மாட்டிறைச்சி அரசியல் செய்தால் அது வெற்றி பெறுமா? 

கர்நாடகாவில் மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்ற பெண் எழுத்தாளருக்கு பலாத்கார மிரட்டல் விடுக்கப்படுகிறது.  மாட்டிறைச்சி சாப்பிடுவது எனது உரிமை என்ற கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலையை வெட்டி கால்பந்து விளையாடுவோம் என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர். இது போன்ற கருத்துகள் கண்டிப்பாக மக்களுக்கு எரிச்சலைத்தானேத் தரும். போதாகுறைக்கு சாச்சி பிராச்சி போன்றவர்கள் வட இந்தியாவில் கண்டபடி கருத்து தெரிவித்து கொண்டு அலைவதை மோடியால் கூட  கட்டுப்படுத்த முடியவில்லையே?  

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். மகராஷ்ட்ரா, கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் விவசாயிகள் தற்கொலையை தடுக்கவும் விவசாயிகளின் பிரச்னைகளை மோடி அரசு கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. வெளிநாட்டுக்கு சென்று மைக்ரோசாப்ட் ஓனரையும் ஃபேஸ்புக் நிறுவனரையும் சந்திப்பதால் என்ன பலன் பெரியதாக விளைந்து விட முடியும்? இந்தியாவில் வாக்களிப்பவர்களில் 70 சதவீதம் பேருக்கும் இவர்களை யார் என்று கூடத் தெரியாது? நாட்டின் முன்னேற்றம் விவசாயம் சார்ந்ததாக இருக்க வேண்டுமென்ற விஷயத்தையும் மோடி அரசு கையில் எடுக்கத் தவறி விட்டது. 

டெல்லி சட்டசபைத் தேர்தலிலேயே மோடியின் பிம்பத்தை, கெஜ்ரிவால் கிழித்து எறிந்து விட்டார். ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளிநாட்டு முதலீடு திரட்டுகிறேன் என்று வெளிநாட்டிலேயே பிரதமர் சுற்றிக் கொண்டிருந்தார். அப்போதே மோடி தன்னையும் தனது அரசையும் சுயபரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும். அதனை செய்யாமல் விட்டதற்காக கொடுத்த விலைதான் பிகார் தோல்வி!

ad

ad