புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2015

ஊடகவியலாளர்களை சந்தித்த ஐ.நா. செயற்குழுவானது பல திடுக்கிடும் தகவல்கள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா. காணாமல் போனோர் குறித்த செயற்குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து
, பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். விஜயத்தின் இறுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த ஐ.நா. செயற்குழுவானது பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தது.
குறிப்பாக திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இரகசிய தடுப்பு முகாம் ஒன்று இருப்பதை நாங்கள் அவதானித்தோம். நாம் அவதானம் செலுத்திய பகுதியில் 12 அறைகள் எந்தவிதமான ஏற்றுக்கொள்ளப்பட்ட வசதிகளுமின்றி காணப்பட்டன. 2010ம் ஆண்டுவரை இதில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கிறோம்.
இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளின் முடிவுகள் தொடர்பில் நாம் அதிக கரிசனை செலுத்தியிருக்கிறோம் என்று ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் குறித்த செயற்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
2008ம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்ட 11 பேர் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இந்த இரகசிய முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பார்களா என்பது தொடர்பிலும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் எனவும் காணாமல் போனோர் தொடர்பான ஐ.நா.வின் செயற்குழுவின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டம், சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு உட்பட்டு உருவாக்கப்படவில்லை. எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தக்குழு வலியுறுத்தியது.
அத்துடன் காணாமல் போனோர் குறித்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மூலமான விசாரணைகள் சர்வதேச பங்களிப்புடன் இடம் பெறவேண்டும் எனவும் குறித்த செயற்குழுவின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் தொடர்பான செயற்குழு பிரதிநிதிகளான பேனார்ட் டுகைமி, டயி உம் பைக், ஏரியல் டுலுட்ஸ்கி ஆகியோர் தமது விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே மேற்கண்ட விடயங்களை வெளியிட்டுள்ளனர்.
இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் குறித்த செயற்குழுவானது அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனோரின் உறவினர்கள், பாதிக்கப்பட்டோர் என பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கும் மாத்தளைக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தது.
அத்துடன் பொலிஸ்மா அதிபர், புலனாய்வுப் பிரிவினர், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் குறித்த செயற்குழு சந்தித்து பேச்சு நடத்தியிருந்தது.
அத்துடன் பூஸா முகாமுக்கும், திருகோணமலை கடற்படை முகாமுக்கும் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு கட்டடங்களுக்கும் குறித்த ஐ.நா. குழு விஜயம் செய்ததுடன் அங்குள்ள நிலைமைகளையும் பார்வையிட்டிருந்தது. இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் குறித்த செயற்குழு தமது பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளது.
குறிப்பாக திருகோணமலையில் கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள இரகசிய தடுப்பு முகாம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயற்குழு வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், கடந்த காலங்களில் ஏதாவது பாரிய சித்திரவதைகளும் அசம்பாவிதங்களும் இடம் பெற்றிருக்குமா என்ற பீதியையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இவ்வாறு இரகசிய தடுப்பு முகாம்கள் இருப்பதாகவும் அங்கு அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த காலங்களில் பாராளுமன்றத்திலும், மக்கள் பிரதிநிதிகள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையிலேயே தற்போது இலங்கை வந்த ஐக்கிய நாடுகள் செயற்குழுவும் இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்து நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக இந்த திருகோணமலை இரகசிய முகாம் குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
இந்த இரகசிய முகாமில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனரா? அவ்வாறாயின் எத்தனை பேர் ? எவ்வளவு காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பன தொடர்பான விசாரணைகள் உடனடியாக நடத்தப்படவேண்டும். அது மட்டுமின்றி இங்கும் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனராயின் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாகவும் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவேண்டும்.
கடந்த காலங்களில் கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிகமானோர் கடத்தப்பட்டிருந்தனர். அவ்வாறு கடத்தப்பட்டவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் என்ன நடந்தது என்று இதுவரை அறிய முடியாத நிலைமைகளே காணப்படுகின்றன.
விசேடமாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அவர்களது உறவினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து இதுவரை உரிய பதில் வழங்கப்படவில்லை.
காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காமல் இருக்கின்ற நிலையில் இவ்வாறு இரகசிய முகாம்கள் கண்டு பிடிக்கப்படுகின்றமை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதாகவே அமைந்து விடும்.
எனவே இது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விரிவான விளக்கங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவேண்டியது அவசியம்.
அதுமட்டுமின்றி நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் இருக்கின்ற காணாமல்போனோர் பிரச்சினைக்கு அரசாங்கம் முறையான தீர்வைக் காண்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.. காணாமல் போனோரின் உறவினர்கள் சொல்லொணாத் துன்பங்களையும் வேதனைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
காணாமல் போனோரின் பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள் என பல்வேறு தரப்பினரும் பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். காணாமல்போன தமது உறவினர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா என்பது கூட தெரியாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
எனவே அரசாங்கம் இந்த விடயம் குறித்து விரைவாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையில் காணாமல் போனோர் குறித்து ஆராய அலுவலகம் ஒன்று அமைக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலுவலகத்தின் ஊடாக காணாமல் போனோர் தொடர்பில் உண்மையான முறையில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
காணாமல் போன தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பரிதவித்துக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடைகொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த விடயத்தில் பொறுப்புக்கூறல் என்பது மிகவும் அவசியம் என்பதை மறந்து விடக்கூடாது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றுவதன் ஊடாகவே அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை முன்னெடுக்க முடியும். அவ்வாறு அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு பாரிய வடுக்களுடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே ஐக்கிய நாடுகள் காணாமல்போனோர் குறித்த செயற்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டு அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளையும் அடிப்படையாகக் கொண்டு காணாமல்போனோரின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

ad

ad