புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2015

யார் இந்த சோபித தேரர்? சிறுபான்மையினமும் கண்ணீர் சிந்த காரணம் என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரலாம் என்று கூறி, தமிழ் மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற ஒரு பெரும்பான்மையின மத தலைவரின் மரண செய்தி, இன, மத, மொழி பேதமின்றி, அனைவரது மனங்களில் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பொதுபலசேனா போன்ற இனவாதம் பேசும், துறவிகளின் மத்தியில், இன நல்லுறவினை பற்றி பேசிய பௌத்த நெறி துறவியாக இவர் அனைவராலும் கையெடுத்து வணங்கப்பட்டார்.
சோல்பரி அரசியலமைப்பின் சிறுபான்மையின காப்பீட்டை போல, இலங்கை சிறுபான்மை மக்களின் காப்பீடாகவே இவர் இருந்தார் என்றே சொல்ல முடியும்.
இலங்கை வரலாற்றிலே பெரும்பான்மையினத்தினால் அடக்கியாளப்பட்ட சிறுபான்மையினத்தின், கடைசி எதிர்பார்ப்பு என எண்ணி பார்க்கும் அளவிற்கு, எல்லோருடைய மனங்களில் நீங்காத இடத்தில் வாழ்ந்தவர் இந்த சோபித தேரர்.
1942ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி ஹோமாகம பாதுக்க மாதுலுவாவே பிரதேசத்தில் மூன்று பிள்ளைகள் அடங்கிய குடும்பத்தில் இவர் பிறந்தார்.
தனது குடும்பத்தில் ஒரேயொரு ஆண்பிள்ளையான மாதுலுவாவே சோபித்த தேரர், 1955ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி கோட்டே ஸ்ரீநாகவிகாரையில் துறவறத்தில் இணைந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வித்யாலங்கார மற்றும் விதயோதய பிரிவெனாக்களில் உயர்கல்வி பெற்றுக்கொண்ட இவர், 1964 ம் ஆண்டு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கௌரவ பட்டப்படிப்பை பெற்றுக்கொண்டார்.
1955ம் ஆண்டு முதல் கோட்டே ஸ்ரீ நாகவிகாரையில் தனது துறவற வாழ்க்கையை தொடர்ந்த சோபித தேரர் மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்ப்பதற்கு பெருமுயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
நீண்டகாலமாக தேசிய ரீதியில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியாகவும் புத்தசாசனத்திற்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பல விடயங்களை கருத்திற்கொண்டு நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பை நிறுவி, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து நல்லாட்சியை வளர்க்க உருவாக்க வேண்டும் என்ற தொனியை உயரச் செய்து முன்னெடுத்த போராட்டத்தில் அவர் வெற்றி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பௌத்த துறவியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர், இலங்கையில் வாழும் அனைத்து இனத்தினையும் தாங்கி பிடித்த மத தலைவராக அனைவராலும் பார்க்கப்பட்டார்.
மாதுலுவாவே சோபித தேரர், இலங்கையின் அரசியல் மாற்றத்திற்காக பாரிய பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.
குறிப்பாக தற்போதைய நல்லாட்சியின் தோற்றத்திற்கு அதிகளவு பங்களிப்பு செய்த மத தலைவராக இவரை நாம் பார்க்கமுடியும்.
கடந்த அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கு துணிந்து குரல் கொடுத்து, இலங்கையினை ஒரு மத சார்பற்ற நாடாகவும், அனைத்து இன மக்களும் எவ்வித வேறுபாடுகளும் இன்றி, சிறப்பாக வாழ வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்தார்.
குறிப்பாக உண்மை பௌத்தத்தின் கொள்கைகளை பரப்புவதில் முன்னுதாரணமாக தொழிற்பட்டார்.
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கிட்டத்தட்ட பத்தாண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, சிவில் சமூக அமைப்புகளையும், பல்வேறு எதிரணிக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டுவதில் முக்கிய பங்காற்றியிருந்தார்.
இலங்கையில் சிறந்த ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு, ஆட்சிமாற்றம் ஒன்று அவசியம் என்று உணர்ந்து சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்து, நல்லாட்சியை விரும்பும் அனைவரையும் ஒன்றிணைத்து போராட்டங்களை நடாத்திவந்தார்.
அதுமட்டுமன்றி இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையின மக்களுக்கு சரி நிகரானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டவர் என்பதையும், இந்த தருணத்தில் நாங்கள் குறிப்பிடவேண்டும்.
அத்துடன் இந்த நாட்டில் பயங்கரவாதம் நிலவவில்லை, பொருளாதார பிரச்சினையே நிலவியது என்ற கருத்தினையும் துணிந்து, சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வந்தார்.
அனைவரும் இலங்கையினை பௌத்த நாடு என்று தெரிவித்து வந்த நிலையில், இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் ஒன்று உள்ளது, அவர்களும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என குரல் கொடுத்தவர் இவர் என்பதை தமிழ் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.
அதுமட்டுமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரலாம் என்று கூறி தமிழ் மக்களின் நன்மதிப்பினைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களின் தேவைகளுக்கு குரல் கொடுத்து வந்தார்.
குறிப்பாக நாட்டில் தற்போது பேசப்படும் மிக முக்கியமான பிரச்சினையான அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அதிகளவு குரல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், இலங்கையில், தமிழ் மக்களுக்கான எந்தவித தீர்வும் வழங்கப்படாத இந்த நிலையில், மாதுலுவாவே சோபித்த தேரர் போன்றவர்களின் இழப்பு தமிழ் மக்களுக்கு மிக வேதனைக்குறியதொன்றாகும்.
அவரது இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது உடல் மறைந்தாலும், சிறுபான்மையினத்திற்காக பாடுப்பட்டார் என்பதில், சிறுபான்மை உள்ளங்களிலும், உண்மை பௌத்த நெறிக் கொள்கைகளை பின்பற்றினார் என பெரும்பான்மை மக்களிடத்திலும் இவர் என்றும் நீங்கமாட்டார்.
திவ்யநாதன்
rrajini743@gmail.com

ad

ad