புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2015

தமிழினத்தின் உலக முகவரி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்! இயக்குநர் கௌதமன்


தமிழினத்தின் உலக முகவரி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என தமிழக இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவரின் 61 வது பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், தலைவர் பற்றி மேலும் பல தகவல்களை வெளியிட்டிருந்தார். அவை முழுமையாக இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
உலகத்தின் மூத்த இனம் தமிழினம். மூத்த மொழி தமிழ்மொழி. சில நூறு ஆண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட பலநூறு மொழிகள் இருக்க, ஐம்பதினாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த பேரினத்திற்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செறிவான இலக்கண நூலான தொல்காப்பியம் கோலோச்சிக் கொண்டிருந்தது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆற்றைத் தடுத்து அணையை கட்டி விவசாயம் செய்து உலகத்து உயிர்களை வாழ்விக்க விவசாய புரட்சியையே தொடங்கி வைத்தவன் கல்லணையை கட்டிய நம் கரிகால் பெருவளத்தான். இப்படி எத்தனை எத்தனை சிறப்புகள்.
தமிழ் மொழியில் உள்ள அத்தனை எழுத்துக்களும் எனக்கு பிடிந்திருந்தாலும்… ஏனோ ஆயுத எழுத்து(ஃ) மட்டும் என் உயிருக்கு நெருக்கமான எழுத்தாக எப்பொழுதும் எனக்கு தோன்றுகிறது.
உயிர்கள் வாழ உணவு சமைக்கும் அடுப்பு குறியீடாக மட்டுமல்ல.. இனத்தை அழிக்க, மண்ணை அபகரிக்க எதிரிகள் வந்தால் அவர்களை இல்லாதொழிக்க அயுதம் செய்யும் பட்டறையாகவும் அந்த குறியீடு எனக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
அது மட்டுமல்ல, (ஃ) இந்த மூன்று புள்ளிகளும் எம் இனத்தை காத்த மூன்று பெரு மன்னர்களின் முகமாகவும் படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணை ஆண்ட கரிகாலனும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை தலைநகராகக்கொண்டு இந்தியாவின் பெரும்பகுதியையும்,
இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளை ஆண்ட இராஜராஜ சோழனும் அவரிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நம் தமிழீழ மண்ணை ஆண்ட என் தாய்க்கும், தாய்மொழிக்கும் சமமான எனது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனும் என இம்மூவரும் அந்த ஆயுத எழுத்தின் குறியீடாக தெரிவதுதான் அந்த எழுத்து என் உயிருக்கு நெருக்கமான எழுத்தாக என் மனம் கொண்டாடுகிறது.
இந்த உலகத்தில் உள்ள எந்த இலக்கியத்தில் தேடிப்பார்த்தாலும், எந்த வரலாற்றினை ஆராய்ந்து பார்த்தாலும் எம் தலைவன் மேதகு பிரபாகரனைப் போன்று பெரும் வீரனை, ஒரு பேரரசனை, அறத்தோடும், ஒழுக்கத்தோடும் கூடிய பெருமன்னனை இந்த உலகம் இதுவரை தரிசனம் செய்திருக்காது.
கல்வி மறுக்கப்பட்டு, வேலை நிராகரிக்கப்பட்டு, உரிமைகள் அபகரிக்கப்பட்டு கொத்துகொத்தாக எம் உறவுகளை சிங்கள அதிகார வர்க்கம் அழித்துக் கொண்டிருக்க எம் தலைவனக்கு அப்பொழுது வயது எட்டு. தன் அத்தை தீபுண்களோடு வந்து நின்ற கோலத்தையும், சுடும் தாரினில் ஒரு பிஞ்சு குழந்தையினை முக்கி எடுத்த காட்சியினையும் கண்டு தன் தந்தையிடம் “ஏனப்பா இப்படியெல்லாம் நடக்கிறது” என்று கேட்க,
அதற்கு அய்யா வேலுப்பிள்ளை அவர்கள் “நாமெல்லாம் தமிழர்களப்பா” என்று இயலாமையோடு சொல்ல “அவர்கள் அடிக்கும்போது நாம ஏம்பா திரும்ப அடிக்கல?” என்று கேட்டவர் நம் தலைவர்.
“மனோகரனுக்கு அரசு வேலை கிடைத்து விட்டது, பெண்பிள்ளைகளுக்கும் அரசில் வேலை செய்பவர்களுக்கு திருமணம் செய்தாகிவிட்டது. துரைக்கும் (பிரபாகரனுக்கும்) ஒரு அரசு வேலை கிடைத்துவிட்டால் நிம்மதியாகிவிடுவேன்” என்று அம்மா பார்வதியிடம் தந்தை வேலுப்பிள்ளை சொல்லிக்கொண்டிருக்க..
பக்கத்து அறையில் படுத்திருந்து பகவத்சிங்கை படித்துக் கொண்டிருந்த பதினாறு வயது பிரபாகரன் தன் தாயிடம் “அப்பா சொன்னது போல அரசாங்கத்தில் வேலை செய்வதல்லம்மா என் வேலை… தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் என் மக்களுக்கு தனியான ஒரு அரசாங்கம் உருவாக்குவதுதான் என் வேலை” என்றாராம் நம் காவியத்தலைவன் மேதகு பிரபாகரன்.
1982 ஆம் ஆண்டு வாக்கில் மேட்டூரில் உள்ள புலீயூர் காட்டில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் சொல்ல நான் கேட்ட ஒரு நிகழ்வு மெய்சிலிர்க்க வைத்தது. தலைவர் தனது குழுவோடு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த நேரம், எதிரிகளை எப்படியெல்லாம் வியூகம் அமைத்து எதிர்கொள்வது என அலோசனை செய்து கொண்டிருக்க ஒரு ரசாயண பொறியாளரை அவர் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள்.
எதிரி கூடாரத்திற்கு முன்பு ரசாயணம் கலந்த ஒரு வெடி பொருளை வைத்து விட்டு வந்து அதனை வெடிக்க செய்தால் பல நூறு எதிரிகளை ஒரே நேரத்தில் கொன்றொழிக்க முடியும் என சொல்ல…சட்டென்று அதனை மறுத்து “அது அறமாகாது, எதிரியை நேருக்கு நேர் நின்று வெல்ல வேண்டுமே தவிர… இப்படி கீழ்தரமாக செயல்படக்கூடாது, நாம் தமிழர்கள் அல்லவா” என்றாராம்.
இதுகூட பரவாயில்லை 1982 ல் தான்… காலங்கள் கடந்து எதிரிகளை வீழ்த்தி…எமக்கென்று ஒரு அரசாங்கத்தை உருவாக்கி…ஒரே ஒரு பிச்சைக்காரர்கூட இல்லாத… இந்தியாவின் அகிம்சை தந்தை மகாத்மா காந்தி கனவு கண்ட, தன்னந்தனியாக இரவில் ஒரு இளம்பெண் தனியாக நடந்து சென்று முழுமையாக திரும்பினால் அதுதான் உண்மையான சுதந்திரநாடு என கூறிய அந்த அற்புத தேசத்தை எம் தலைவன் உருவாக்கிய நிலையில்,
பல வல்லரசுகளும், ஏறத்தாழ முப்பத்தி நான்கு நாடுகளும் சேர்ந்து சிதைத்த… உலகம் தடை செய்யப்பட்ட ரசாயண குண்டுகளை வீசி எம் மக்களையும், எம் மண்ணுக்காக போராடிய போராளிகளையும் கொத்துக்கொத்தாக கொன்றனர் 2009ல்.
உயிருக்கு நிகரான தளபதிகளும், போராளிகளும் கருகி கிடக்கும் இடத்தில் சொல்ல முடியாத துயரத்தில் நின்று கொண்டிருக்கும் எம் தலைவரிடம் “அண்ணா லட்சக்கணக்கில் நம் உறவுகளை கொல்கிறார்கள். எதிரிகளின் ஒரு சில குடும்பங்களை சிதறடித்தாலே போதும்… பத்தே நிமிடத்தில் யுத்தம் நிற்கும்” என்க.
சட்டென்று திரும்பி “நமக்கு எதிரி அதிகார வர்க்கமே தவிர அவர்களது குடும்பம் இல்லை…அவர்கள் பெண்கள் வேறு நம் பெண்கள் வேறு அல்ல…அவர்கள் குழந்தைகள் வேறு நம் குழந்தைகள் வேறு வேறு அல்ல.
எந்த சூழ்நிலையிலும் அறம் தவறக்கூடாது, ஒரு நாள் அறம் வெல்லும்” என உறுதியாக கூறினாராம்.
1982 எங்கே… 2009 எங்கே..? கிட்டத்தட்ட இருபத்தேழு ஆண்டுகளுக்கு மேல் களத்தில் நின்ற நிலையில் ஒரு மாவீரன் வீரத்தோடும், அறத்தோடும் இந்த உலகம் கண்டிராத ஈரத்தோடும் இருந்தாரென்றால்…இந்த உலகத்தில் அது என் அண்ணன் மேதகு பிரபாகரன் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
1989 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய அமைதிப்படையால் எம் தலைவருக்கு ஆபத்து நடந்துவிட்டது என எதிரிகளால் பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு உலகம் முழுக்க வாழும் தமிழ் உறவுகள் சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கி கிடந்த நேரம். ஒரே ஒரு குரல்மட்டும் தாய்த்தமிழ் மண்ணில் உறுதியாக ஒலித்தது.
ஒரு முருகன் கோவிலின் அடிவாரத்தில் அய்யா தமிழ்த்திரு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் இது.
“இறைவன் எப்பொழுதாவது ஒரு அவதார பிறப்பை உருவாக்கி இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பூமிக்கு அனுப்பவதுண்டு. அப்படிப்பட்ட அவதாரம் என்ன காரணத்துக்காக இந்த பூமிக்கு வந்ததோ அதன் நோக்கம் நிறைவேறாமல் அந்த பிறப்பை இறைவன் மீண்டும் எடுத்துக் கொள்வதில்லை, அப்படிப்பட்ட ஒரு அவதாரம்தான் தம்பி பிரபாகரன்.
தம்பி பிரபாகரன் என் அப்பன் முருகனுக்கு சமமானவன். அவனுக்கு மரணமில்லை” என்றார். அதே போல் தலைவர் 1990க்கு பிறகு மீண்டும் நம்முன் தோன்றினார்.
2015 ஆம் ஆண்டான இன்றும் நம் தலைவரின் பிறப்புக்கான நோக்கம் நிறைவேறவில்லை. அய்யா திருமுருக கிருபானந்தவாரியார் சொன்னது போன்று அந்த அவதாரம் நம்மண் விடுதலையடையாமால், நம் மக்களின் முகத்தில் நிரந்தரமான மகிழ்ச்சியை பார்க்காமல் அவரால் இந்த உலகத்தை விட்டு சென்றிருக்க முடியாது என்று நம்புகின்ற கோடானகோடி அவரின் தம்பிகளில் நானும் ஒருவன்.
நம்புகிறேன். உறுதியாக நம்புகிறேன். இந்த பூமிபந்தில் எதோ ஒரு இடத்தில், நடக்கும் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன்.
காத்துக்கொண்டிருக்கிறேன் அண்ணா…ஒரு குழந்தையைப்போல காத்துக்கொண்டிருக்கிறேன். நெடு நாள் பிரிந்த தனது தாயின் வரவுக்காக ஒரு குழந்தையைப்போல காத்திருக்கிறேன் அண்ணா.. என்றாவது ஒரு நாள் ஓடிவந்து உங்களை கட்டியனைத்து கண்ணத்தில் முத்தமிட காத்திருக்கிறேன் அண்ணா..
கவலைப்படாதீர்கள் அண்ணா… நீங்கள் வரும்வரை காலத்தைப்போக்காமல் உண்மையோடும், உறுதியோடும் போராட நாம் இழந்த மண்ணை வென்றெடுக்க ஒரு பெரும் இளைஞர் கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறதண்ணா… வாழ்த்த வயது தேவையில்லை… பேரன்பும், பெரும் பாசம் மட்டுமே போதும் என்கிற படியால் என் தாய்க்கும் தாய்மொழிக்கும் சமமான எனது தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நூறாண்டு வாழ்க வாழ்க என மனமார வாழ்த்துகிறேன். பெருமையடைகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad