புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2015

இலங்கை சிறைகளில் வாடும் தமிழர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு கலைஞர் கடிதம்



இலங்கை சிறைகளில் வாடும் தமிழர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு திமுக தலைவர் கலைஞர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,

நீண்ட காலமாக இலங்கைச்  சிறைகளில்  வாடி வதங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை விடுதலை செய்வது சம்பந்தமாக இலங்கை அரசு ஏற்கனவே  கொடுத்த வாக்குறுதியை  மீறி நடந்து கொண்டிருக்கிறது.   
2010ஆம் ஆண்டு  இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, சிறைகளில் இருக்கும்  அனைத்துத் தமிழர்களுக்கும்  பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக வழங்கினார்.   அந்த வாக்குறுதியின் காரணமாகவே, அவரால், நுவரேலியா,  ஜாப்னா, வன்னி, பட்டிகொலோவா, திகமாடுலா மற்றும்  திரிகோணமலை ஆகிய பகுதிகளில் உள்ள  தமிழர்களின் வாக்குகளில் 60 சதவிகிதத்தைப் பெற முடிந்தது.    தமிழர்களின் வாக்குகளில்  36 சதவிகித வாக்குகளை மட்டுமே  ராஜபக்ஷே  பெற்றார்.   எனினும், சிங்கள வாக்காளர்கள் பெருவாரியான வாக்குகளை ராஜபக்ஷேக்கு  அளித்ததின் காரணமாகவே   அவர் வெற்றி பெற்று அதிபர் ஆனார்.   

2015ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை  அதிபர்  தேர்தலின் போது, தமிழர்கள் மைத்ரிபால சிறிசேனாவுக்கு பெருவாரியாக வாக்களித்தனர்.   தேர்தல் பிரச்சாரத்தின்போது  சிறிசேனா அதிபராகப் பதவியேற்றதும் சிறைகளில் இருக்கும் தமிழர்கள் அனைவரையும்  பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.    அதிபர்  தேர்தலில்  சிறிசேனாவுக்கு  73 சதவிகித வாக்குகளையும்,  ராஜபக்ஷேக்கு  25 சதவிகித வாக்குகளையும்  தமிழர்கள்  அளித்தனர்.  
 
சிங்களர்கள் பெருவாரியாக வாழும் பகுதிகளில் ஏராளமான வாக்குகளைப் பெற்று ராஜபக்ஷே முன்னணியில் இருந்தார்.   இலங்கை அதிபர் தேர்தலில்  இறுதி முடிவை நிர்ணயிப்பது  சிங்கள வாக்குகள் தான்.  ராஜபக்ஷேவை விட  மைத்ரி பால சிறிசேனா,  4 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகள்,  அதிகம் பெற்று அதிபர் ஆனார்.  இலங்கையில் சிங்களர் அல்லாதார் வாக்குகளின் எண்ணிக்கை  ஒன்பது இலட்சமாகும்.   தமிழர்கள்  பெருவாரியாக  மைத்ரி பால சிறிசேனாவுக்கு  வாக்களிக்காமல் போயிருந்தால்,  ராஜபக்ஷே  எளிதில் வெற்றி பெற்றிருப்பார்.   

தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர்  சம்பந்தனிடம் தமிழர்களுக்கு  தாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றப் போவதாக சிறிசேனா சொன்னதை நம்பி,  தமிழர்கள்  மைத்ரி பால சிறிசேனாவுக்கு வாக்களித்ததின் காரணமாகவே   அதிபர் தேர்தலில்  அவரால் வெற்றி பெற முடிந்தது.  சிறிசேனா வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று,  இலங்கை சிறைகளில்  நீண்ட காலமாக வாடிக் கொண்டிருக்கும் தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பானதாகும்.   இதற்கு,  1971ஆம் ஆண்டு சிங்கள அரசியல் கைதிகளுக்கு  பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த நிகழ்வு  முன்னுதாரணமாக எடுத்துச் சொல்லப்பட்டது.   

2015 அக்டோபர் மாதத்தில் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் சம்பந்தனும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பேச்சுவார்த்தை நடத்திய போது, சிறைச்சாலைகளில் சாகும் வரை உண்ணா நோன்பு இருந்த தமிழர்களை,  நவம்பர் 7ஆம் தேதியன்று அனைவரையும் விடுதலை செய்வதாகவும், உண்ணா நோன்பினைக் கை விட வேண்டுமென்றும்   அதிபர் சிறிசேனா அவர்களிடம் கூறினார்.  ஆனால், அவ்வாறு சொன்னதற்கு மாறாக, அதிபர் சிறிசேனா  நவம்பர் 9ஆம் தேதியன்று, 31 தமிழர்களை மட்டும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தார். தமிழர்கள் அந்த விடுதலையை ஏற்றுக் கொள்ள வில்லை;  மீண்டும் சிறைக்கே திரும்பினர்.   200க்கும்  மேலான தமிழர்கள் இலங்கைச் சிறைகளில் தற்போது சாகும்வரை உண்ணா நோன்பு மேற்கொண்டி ருக்கின்றனர். 12-11-2015 அன்று  முதலமைச்சர் விக்னேஸ்வரன், அதிபர் சிறிசேனாவைச் சந்தித்து,  அவர் ஏற்கனவே  வழங்கிய  வாக்குறுதியையும்,  மீண்டும் அந்த வாக்குறுதியை  நினைவுபடுத்தியதையும் எடுத்துச் சொல்லி, அந்த வாக்குறுதியின்படி  தமிழர்களை  பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்திட வேண்டுமென்று வலியுறுத்தினார்.    அதிபர் சிறிசேனாவைச் சந்தித்ததற்குப் பிறகு முதலமைச்சர் விக்னேஸ்வரன்,   சிறையில் இருக்கும் தமிழர்களை சிங்களர்களின்  எதிர்ப்பின் காரணமாக விடுதலை செய்ய முடியவில்லை என்று அதிபர் விளக்கிய தாகத் தெரிவித்தார்.   

தமிழர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கி விட்டனர். நவம்பர் 13 அன்று  தமிழர்களின் தாயகமான  வடக்கு கிழக்கு மாகாணங்களில்  அனைத்து  அரசியல் கட்சிகளும் இணைந்து  முழு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றன.   தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை  சிங்களர்கள் காப்பாற்றததன் காரணமாக தமிழர்கள் வன்முறையற்ற போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.   

ஜனநாயக அமைப்பில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துப் போராட்ட முறை களையும் கடைப்பிடித்து தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக  பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.   ஆனால் மத்திய அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை.  மேலும்  சிங்களர்கள்  தங்களுடைய  வாக்குறுதிகளை மீறி  நடந்து கொள்ளும் போதெல்லாம்  மத்திய அரசு  அமைதியாக  வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறது.   

இந்திய அரசு, இப்போதாவது தலையிட்டு, தமிழர்களுக்கு வழங்கிய  உறுதிமொழிகளையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவதற்கான  அவசரத் தேவையினை இலங்கை அரசுக்கு உணர்த்திட  முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.    சேன நாயகா காலத்திலிருந்து  தற்போது சிறிசேனா காலம் வரை,  தமிழ் மக்களுடைய  ஆதரவினை சிங்களர்கள் தங்களுடைய சுய நலத்திற்கே பயன்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள்.   இலங்கையில் தமிழர்  கள் வாழும்  பகுதிகளில்  அரசியல் நிலை  மோசமாகி வருவதைக் கணக்கில் கொண்டு, கவலையோடும்,  உரிய  வேகத்தோடும்  இந்திய மத்திய அரசு  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.    தமிழர்களுக்கு  ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் முதல் கட்டமாக,  இலங்கைச் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் தமிழர்களை உடனடியாக பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும்.   இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளில்  இனியும்  இந்திய மத்திய அரசு  செயலற்று இருக்குமானால்,  வரலாறு  மறக்காது;  மன்னிக்காது என்பதை எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ad

ad