புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2015

கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: 2–வது இன்னிங்சில் இலங்கை 133 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இலங்கை அணி 2–வது இன்னிங்சில் 133 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இலங்கையின் சீர்குலைவு
இலங்கை– நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 292 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2–வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 3–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 237 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதையடுத்து 55 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு கருணாரத்னேவும், குசல் மென்டிசும் வலுவான அடித்தளம் அமைத்து தந்தனர். இந்த ஆண்டில் இலங்கையின் சிறந்த தொடக்கமாக முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் திரட்டினர். கருணாரத்னே 27 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதன் பிறகு இலங்கை இந்த அளவுக்கு நொடிந்து போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்தின் ‘ஷாட்பிட்ச்’ தாக்குதலில் நிலை குலைந்து போன இலங்கை அணி 36.3 ஓவர்களில் 133 ரன்களுக்கு சுருண்டது. அதாவது கடைசி 10 விக்கெட்டுகளை வெறும் 62 ரன்களுக்கு பறிகொடுத்து விட்டது. அதிகபட்சமாக குசல் மென்டிஸ் 46 ரன்களும், ஸ்ரீவர்த்தனே 26 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் டிசம் சவுதி 4 விக்கெட்டுகளும், நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளும், பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
சர்ச்சைக்குரிய அவுட்
முன்னதாக இலங்கை வீரர் ஜெயசுந்தராவுக்கு (0) வழங்கப்பட்ட அவுட் பலத்த சர்ச்சையை கிளப்பியது. வேகப்பந்து வீச்சாளர் பிரேஸ்வெல் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் வாட்லிங் கேட்ச் செய்ததாக நியூசிலாந்து வீரர்கள் அவுட் கேட்ட போது, கள நடுவர் பால் ரீபெல் மறுத்தார். பின்னர் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தனர்.
ரீப்ளேயில் ‘ஸ்னிக்கோ’ மீட்டர் தொழில்நுட்பத்தில் பந்து பேட் மற்றும் கையுறை எதிலும் உரசியதற்கான சத்தத்தை பிரதிபலிக்கவில்லை. ஆனால் ‘ஹாட்ஸ்பாட்’ தொழில்நுட்பத்தில் பந்து கையுறையை கடந்தபோது, சிறிய அடையாளத்தை காட்டியது. பொதுவாக இது போன்ற குழப்பமான சமயத்தில் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு சாதகமாக நடுவர் வழங்குவது உண்டு. ஆனால் 3–வது நடுவர் ரிச்சர்ட் கெட்டில்போரப் (இங்கிலாந்து) ஜெயசுந்தராவுக்கு அவுட் கொடுத்து விட்டார். பிறகு இன்னும் துல்லியமாக ஆராய்ந்த போது, பந்து கையுறையில் படவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது. நடுவரின் தவறான தீர்ப்பு இலங்கை தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
1984–ம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிராக இலங்கையின் மோசமான ஸ்கோர் இதுவாகும். மேலும் தொடக்க ஜோடி 50 ரன்களுக்கு மேல் எடுத்த பிறகு, கடைசி 10 விக்கெட்டுகளை 62 ரன்னுக்குள் ஓர் அணி தாரைவார்த்தது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது 6–வது நிகழ்வாகும்.
வெற்றியை நோக்கி நியூசிலாந்து
இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதம் (4 ரன்), மார்ட்டின் கப்தில் (1 ரன்) ஒற்றை இலக்கில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு நிலைத்து நின்றதால் நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது. ராஸ் டெய்லர் 35 ரன்களும், கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் 18 ரன்களும், சான்ட்னெர் 4 ரன்களும் எடுத்து கேட்ச் ஆனார்கள். மறுமுனையில் நங்கூரம் போல் நிலைகொண்டு நேர்த்தியாக ஆடிய கனே வில்லியம்சன் அரைசதத்தை கடந்தார்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்துள்ளது. வில்லியம்சன் 78 ரன்களுடனும் (120 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் வாட்லிங் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் 16 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சமீரா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இன்னும் 47 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் நியூசிலாந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதே சமயம் இன்றைய 4–வது நாளில் வில்லியம்சன் மற்றும் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோரின் விக்கெட்டுகளை சீக்கிரம் காலி செய்தால், இலங்கைக்கும் வெற்றி வாய்ப்பு உருவாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை. வில்லியம்சன் இன்னும் 23 ரன்கள் எடுத்தால் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைப்பார்.

ad

ad