புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2015

மதுரை மாவட்ட முன்னாள் ம.தி.மு.க. செயலாளர் தலைமையில் 400 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்; கருணாநிதி முன்னிலையில் விழா




மதுரை மாவட்ட ம.தி.மு.க. முன்னாள் செயலாளர் டாக்டர் சரவணன் தலைமையில் 400 பேர் நேற்று கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

400 பேர் இணைந்தனர்

ம.தி.மு.க.வின் மதுரை மாவட்ட செயலாளராக இருந்தவர் டாக்டர் சரவணன். பின்னர் ம.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். இந்தநிலையில் நேற்று தனது ஆதரவாளர்கள் 400 பேருடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க. வில் இணைந்தார். இதற்காக சென்னை அறிவாலயத்தில் நேற்று விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவில் கருணாநிதி பேசியதாவது:-

வரவேற்கிறேன்

ம.தி.மு.க.வின் முன்னாள் மதுரை மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன் தலைமையில் இன்றைக்கு ஏறத்தாழ 400 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை ஒப்படைத்துக் கொள்கிற நிகழ்ச்சி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நமது இயக்கத்தின் வலிவையும், பொலிவையும் மேலும் உறுதிப்படுத்தவும், வளர்க்கவும் இந்த நிகழ்ச்சி பயன்படும் என்று நம்புகிறேன்.

ஒரு கட்சியிலே இருந்து இன்னொரு கட்சிக்கு ஏன் போகிறார்கள்? எதற்காகப் போகிறார்கள்? என்ன காரணத்திற்காகப் போகிறார்கள் என்ற கேள்விகளுக்கெல்லாம், அவர்களைச் சார்ந்திருப்பவர்கள் விடையளிக்கத் தயாராக இருக்கிறார்கள். யாரையும் புறந்தள்ளுகிற நிகழ்ச்சியாக, எந்த நிகழ்ச்சியும் இதுவரை தி.மு.க. சார்பில் இங்கே நடைபெற்றதில்லை. எனவே தான் வந்து சேர்ந்தவர்களை எல்லாம் நான் இன்றைக்கு வாழ்த்தி வரவேற்கின்றேன்.

கொள்கை

அண்ணா வழியில் அயராது உழைப்போம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற இந்த வாசகங்களை மறந்து விடாமல், அண்ணா வழியில் உழைப்பதற்கும், இந்தித்திணிப்பை எதிர்ப்பதற்கும் நாம் ஒன்றுபட்டிருப்போம், ஒரு குரலில் ஒலிப்போம் என்று கூறி உங்களையெல்லாம் வரவேற்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

யோசித்து செயல்படுவோம்

அதனைத்தொடர்ந்து கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சுப்ரீம் கோர்ட்டு அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக முடியாது என்று தீர்ப்பு அளித்திருக்கிறது. தொடர்ந்து தி.மு.க. அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக ஆவது பற்றி குரல் கொடுத்து வந்திருக்கிறது? இந்தநிலையில் இன்று (நேற்று) வந்துள்ள தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆவது பற்றி நாங்களும் குரல் கொடுத்தோம், கொடுத்து வருகிறோம். கி.வீரமணியும் எங்களை போலவே குரல் கொடுத்து வருகிறார். அவரும், நானும் மற்றும் அர்ச்சகர் சட்டத்தை பற்றி ஆதரவாக பேசி வருபவர்களும் கலந்துபேசி எந்த வகையிலே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அமைந்திருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து அதன்பிறகு முடிவு செய்வோம். ஆண்டவனை வணங்குவதிலும், அர்ச்சிப்பதிலும் வேறுபாடு இருக்கக்கூடாது, உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது என்பதிலே தி.மு.க.வுக்கு அழுத்தமான கொள்கை உண்டு. அந்த அடிப்படையில் இந்த தீர்ப்பை ஆராய்ந்து பார்த்து ஆவண செய்வோம்.

கேள்வி:- தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தப்படுமா? மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- உரிய நேரத்தில் உரிய முறையில் யோசித்து செயல்படுவோம்.

இவ்வாறு கருணாநிதி பதிலளித்தார். 

ad

ad