புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2015

சென்னையில் 5 லட்சம் பேர் தத்தளிப்பு - இரண்டு நாட்களுக்கு மோசமான நிலைமை - விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டது


சென்னையில், வெள்ளத் தில், ஐந்து லட்சம் பேர் சிக்கி தத்தளிக்கின்றனர். இதுவரை, 50 ஆயிரம் பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். முழுமையாக மீட்பு பணிகளை செய்ய முடியாமல், மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம் முடங்கி போயுள்ளன.
சென்னையில் வரலாறு காணாத மழையால், நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நகரின் பிரதான பகுதிகளில் போக்கு வரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று நாள் முழுவதும் கொட்டி தீர்த்த மழையால், நகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய், வீராங்கல் ஓடை என, நீர்வழித்தடங்களை ஒட்டிய குடியிருப்பு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன.செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதர நீர்நிலைகளில் இருந்து வெளியேறி பாய்ந்து வரும், 50 ஆயிரம் கன அடி நீர் என, அடையாறு ஆற்றில், 80 ஆயிரம் கன அடி நீர் வினாடிக்கு செல்கிறது. 40 ஆயிரம் கன அடி நீரை மட்டுமே கடத்தும் திறன் கொண்ட ஆற்றில், இரு மடங்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பாதி அளவு நீர், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. அடையாறு ஆற்றை ஒட்டிய நந்தம்பாக்கம், மணப்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர்., நகர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகள் தான், சென்னையில் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என, சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது.இந்த பகுதிகளில் இருந்து மட்டும், 20 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்; ஒட்டு மொத்தமாக, 62 ஆயிரம் பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்; 97 நிவாரண மையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகங்களால் முழுமை யாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை செய்ய முடியவில்லை; அரசு இயந்திரங் கள் முடங்கியுள்ளன.கூவம் ஆற்றை ஒட்டிய அண்ணாநகர், வில்லிவாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.அண்ணா சாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜாபர்கான் பேட்டையில் மட்டும், மொட்டை மாடிகளில், 1,500 குடும்பங்கள் சிக்கி தவிக்கின்றன. அவர்களை மீட்க ஹெலிகாப்டர் சேவையை மாநகராட்சி அணுகி உள்ளது. படகுகள் போதிய அளவில் ஏற்பாடு செய்யப்படாததால், மீட்பு பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக மாநக ராட்சி நிவாரண பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலையே நேற்றுஏற்பட்டது.
இரண்டு நாட்களுக்கு மோசமான நிலைமை
சென்னை:'தமிழகத்தில் அடுத்த, 72 மணி நேரத்துக்கு கனமழை தொடரும். இதில், இரண்டு நாட்களுக்கு அதாவது, 48 மணி நேரம் மிக கன மழை பெய்யும். இதனால் நிலைமை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகலாம்' என, இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழக அரசை எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரத்தோர், நேற்று வெளியிட்ட அறிக்கை:வங்க கடலின் தென் மேற்கு பகுதியில், நிலைகொண்டுள்ள, காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழக கடலோர மாவட்டங்களில், அடுத்த, 72 மணி நேரத்துக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதன் பின், காற்று மேல் அடுக்கு சுழற்சியால், தமிழகத்தில், பரவலாக, ஏழு நாட்களுக்கு கன மழை நீடிக்கும்.
ஆனால், அடுத்த இரண்டு நாட்களுக்கு அதாவது, 48 மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை நீடிப்பதால், நிலைமை மோசமாக இருக்கும். இதுகுறித்து, மத்திய அரசின் செயலர் ராஜிவ் மகரிஷி தலைமையில், உயர்மட்ட கூட்டம் டில்லியில் நடந்தது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திர அரசின் தலைமைச் செயலர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக தலைமைச் செயலர் ஞானதேசிகன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பங்கேற்றார். மழை நிலவரம் மற்றும் தொடரும் கனமழை பற்றி, அவரிடம் எச்சரிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், ஒரு ஆண்டில் பெய்யும் மழையில், 48 செ.மீ., மழை, வட கிழக்கு பருவ மழை மூலம் கிடைக்கும். இதில், தமிழக கடலோர மாவட்டங்களில், 60 சதவீதம், பிற மாவட்டங்களில், 40 - 50 சதவீத மழை பெய்யும். ஆனால், தற்போது சராசரிக்கும் கூடுதலாக, 50 சதவீத மழை பெய்துள்ளது.
சென்னையில், சராசரியை விட, 89 சதவீத மழை அதிகமாக பதிவாகி உள்ளது. காஞ்சிபுரம் - 154; திருவள்ளூர் - 139; வேலுார் - 136; திருநெல்வேலி - 110 சதவீத மழை சராசரியை விட அதிகமாக பெய்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தாம்பரத்தில் 49 செ.மீ., மழை :
சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில், நேற்று காலை, 8:30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில்
பதிவான மழை (செ.மீ.,):
lகாஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் - 49
lதிருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் - 47
lவிழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - 42
lதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி,
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு - 39
lசென்னை மாவட்டம், வட சென்னை - 29
lதிருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு,
நாகபட்டினம் மாவட்டம், வேதாரண்யம் - 14
lகடலுார் - 13
lவேலுார் மாவட்டம், அரக்கோணம் - 11
தேதி வாரியாக மழை நிலவரம்:
சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:
டிச., 3, 4, 5: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில், மிதமான மற்றும் மிக கன மழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
டிச., 6: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மற்றும் மிக கன மழை பெய்யும்.சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் கனமழை பெய்யும்; காற்று வேகமாக வீசும்.
சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது
சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பலத்த மழையின் காரணமாக சென்னையில் இருந்து விமான போக்குவரத்து அடியோடு முடங்கியது. நாளை காலை 6 மணி வரை சென்னை விமானநிலையத்தில் இருந்து எந்த விமானமும் புறப்பட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் இருக்கிறது என்றும், இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது.

ad

ad