புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2015

மழையால் தனித் தீவான சென்னை: மீட்புப் பணிகளில் அரசு படுதோல்வி: ராமதாஸ் குற்றச்சாட்டு



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையில் அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு கடந்த மூன்று நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை அனுபவித்து வருகின்றனர். ஏற்கனவே கடுமையான மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களும் மீண்டும் வெள்ளத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 30 செ.மீ.க்கு மேல் மழை பெய்திருக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்திருப்பதால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஏரிகளில் இருந்து அதிகபட்சமாக 34,000 கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், பல ஏரிகள் உடைந்ததாலும் மூன்று மாவட்டங்களிலும் ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளே மூழ்கும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் வேளச்சேரி, மேடவாக்கம், பழைய மகாபலிபுரம் சாலையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகள், வட சென்னை, அம்பத்தூர், முகப்பேர் போன்ற பகுதிகளிலும் மழை நீர் ஓடுவதற்கு வழியில்லாததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

சென்னைக்கு வருவதற்காக சென்னை&திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற எல்லா முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் விழுப்புரத்திற்கு அப்பால் உள்ள தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து  தென் மாவட்டங்களுக்கு செல்லும் தொடர்வண்டிகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை விமான நிலையமும் நேற்றிரவு முதல் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. சென்னையில் பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் தவிக்கின்றனர்... அவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை வரலாறு காணாதது ஆகும். இத்தகைய தருணங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சிரமம் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், இதற்கெல்லாம் முக்கியக் காரணம் தமிழகத்தில் இப்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசு தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. சென்னையிலும், கடலூர் மாவட்டத்திலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அதற்குப் பிறகாவது அடுத்தடுத்த மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை. சென்னையில் 80% பகுதிகள் கடந்த இரு நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருண்டு கிடக்கின்றன. இந்தியாவின் நான்கு பெருநகரங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னையில் சில மணி நேரம் மழை பெய்தால் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்; இல்லாவிட்டால் மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் உயிரிழக்க நேரிடும் என்ற நிலையில் தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக  ஆட்சி செய்து வரும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வைத்துள்ளன. வளர்ச்சியை ஏற்படுத்துவதில் சுணக்கம் காட்டிய திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் ஏரிகளையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமிப்பதில் மட்டும் வேகம் காட்டியதால் தான் தமிழகம் வெள்ளக்காடாகியுள்ளது.

அதேநேரத்தில் இத்தனை நெருக்கடிகளுக்கு இடையிலும் வருவாய்த்துறை,  பொதுப்பணித்துறை, மின்துறை, காவல்துறை, தீயவிப்புத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த கடைநிலை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி பாராட்டத்தக்கது தான். ஆனால், அவர்களை வழி நடத்த வேண்டிய அரசு எந்திரம் முற்றிலுமாக செயலிழந்து விட்டது. தேசிய பேரிடர் என அறிவிக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர்  போர்ப்படை தளபதியைப் போல முன்னின்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வழிநடத்திச் செல்ல வேண்டும். மீட்புப் பணிகளுக்கென கட்டுப்பாட்டு அறை அமைத்து அங்கிருந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மேற்பார்வையிட்டு விரைவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், பெயரளவில் 10 நிமிடங்கள் மட்டும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி விட்டு போயஸ்தோட்டத்துக்கு சென்று ஓய்வெடுப்பதையே தமது பெரும் கடமையாக முதலமைச்சர் கருதுகிறார்.

வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அனுப்பப்பட்ட அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள விருந்தினர் மாளிகைகளில் தங்கி அனைத்து வசதிகளுடன் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகளோ, ‘‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழகத்தில் பலத்த மழை பெய்திருக்கிறது’’ என்று உளறுவதில் தான் புளங்காகிதம் அடைகின்றனர். மொத்தத்தில் பொதுமக்கள் தான் ஒட்டுமொத்த துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவதாக அளித்த வாக்குறுதிகளை நம்பி ஆட்சிப் பொறுப்பில் அமர்த்திய மக்களுக்கு ஜெயலலிதா அளித்த பரிசு தான் இப்போது அவர்கள் அனுபவிக்கும் துயரமாகும்.

இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் மனதுக்கு நிம்மதியளிக்கும் ஒரே விஷயம் மக்கள் காட்டும் மனிதம் தான். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்றே தெரியாத நிலையிலும் அவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்கி பாதுகாக்கும் மக்களின் பெருந்தன்மை பாராட்டத்தக்கது. பேரிடர் காலத்தில் அரசு எந்திரம் தோல்வியடையும் போது மனிதம் வெற்றி பெற்று மக்களைக் காப்பாற்றுகிறது. சோதனையான இக்காலகட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும்; நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து துறையினருக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ad

ad