சென்னையில் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ஈக்காடுதாங்கல், வேளச்சேரி என பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
எறும்பு போல ஊர்ந்து கிடக்கின்றன. தலைநகர் சென்னையில் இப்படி தழைத்துக் கிடக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நிறுவனங்களின் ஆணைக்கிணங்க தலைசாய்க்க கட்டாயப்படுத்தப்படும் இந்த ஊழியர்களைச் சார்ந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் தமிழகம் எங்கும் இருக்கின்றன. சென்னையில் கடந்த மாதம் தொடக்கம் முதல் அவ்வப்போது கனமழை பெய்யத் தொடங்கியது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மிகப் பெரிய பேரிடரை சென்னை மாநகரம் சந்தித்தது.
டிசம்பர் 1-ல் (செவ்வாய்க்கிழமை) சென்னையின் முகத்தை மழைவெள்ளம் மாற்றிக் காட்டியது. முக்கியப் பகுதிகளான அடையாற்றின் கரையோரப் பகுதிகள், கோட்டூர்புரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைகளையொட்டிய திருவான்மியூர், பாலவாக்கம், சோஷிங்கநல்லூர் போன்ற பல இடங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்துமே சென்னையில் சமீப காலத்தில் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருகையால் மளமளவென ரியல் எஸ்டேட் துறையில் உச்சத்தில் நின்றவை.
இப்பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகள் அனைத்தும் யூகிக்க முடியாத அளவில் சுமார் அரை மணி நேரத்தில் மூழ்கத் தொடங்கின. அடுக்குமாடிகள் பலவற்றின் கீழ்தளங்கள் மூழ்கி முதல் தளம் வரை எட்டி மேலிருந்த அனைவரையும் அச்சுறுத்தியது. இருளில் மூழ்கியது சென்னை. இத்தகைய தருணத்தில் சென்னையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படும் தொழில்நுட்ப நிறுவனங்களில் செயல் கவனிக்கத்தக்க ஒன்று.
ஆமாம், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எஸ்.எம்.எஸ். பாய்ந்தது. அதில் 'நான் - க்ரிடிகல்' ப்ராஜக்ட்களில் அல்லாதவர்களுக்கு வெள்ளப் பெருக்கு அபாயம் காரணமாக விடுப்பு வழங்கப்படுவதாக தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் க்ரிடிகல் ப்ராஜக்ட்டில் பணிபுரிபவர்கள்தான்.
ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு விட்டதாக வெளியுலகுக்கு செய்தி பரவியது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு. க்ரிடிகல் ப்ராஜக்ட்களில் இருப்பவர்கள் அனைவரையும் மிகவும் 'பத்திரமாக' வைத்துக்கொண்டது அந்த நிறுவனங்கள். இரவில் தூங்க போர்வைகள், உணவு, ஸ்னாக்ஸ், உடை, பல் தேய்க்க பேஸ்ட், சோப், என அனைத்தையும் வழங்கி உள்ளேயே குறைந்தது 3 நாட்கள் வைத்துக் கொண்டது. வெளியே வெள்ளம் பெருக்கெடுக்க, குடும்பங்கள் நீரில் தத்தளிக்க இளைஞர்கள் பலரும் வேலையில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
வெள்ள பாதிப்பு மீட்பில் ஐ.டி. நிறுவனங்கள் செய்ததென்ன?
சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல ஐ.டி. நிறுவனங்கள் மூழ்கின. கீழ்தளத்தில் இருந்த நிறுவனங்களின் சர்வர்கள் பொசுங்கின. சென்னையில் மட்டும் ஒவ்வொரு நிறுவனங்களும் பல கிளைகளை கொண்டுள்ளன. தரமணி, கிண்டி, பொத்தேரி, துரைப்பாக்கம், கந்தன்சாவடி, சோழிங்கநல்லூர், திருவான்மியூர், ஒக்கிய துரைப்பாக்கம், காரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பெருங்குடி, கொட்டிவாக்கம், நாவலூர், சிறுசேரி, போரூர், ஈக்காடுதாங்கல் என இந்த நிறுவனங்களுக்கு தொழில்நுட்பப் பூங்காக்கள் பல்வேறு மூலைகளில் உள்ளன. இவை அனைத்துமே இன்று செழித்த பகுதிகளாக விளங்குகின்றன. ஆனால் மழை வெள்ளத்தால் இவர்களது கிளைகள் பலவற்றும் பாதிப்படைந்தன.
பாதிப்புக்குள்ளானதில் ராமாபுரம் ஐ.டி பூங்காவும் ஒன்று. இந்த பூங்கா கடந்த வாரம் பெய்த இடைவிடாத மழையால் முற்றிலும் சின்னாபின்னமானது. நிறுவனத்தினுள் சிக்கிய ஊழியர்கள் அனைவரையும் மீட்க தங்களது வாகனங்கள் மற்றும் உதவி ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். உள்ளே இருந்த ஊழியர்கள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில் தங்களது அடையாள அட்டையுடன் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.
தங்களை வெள்ளத்திலிருந்து மீட்ட நிறுவனம் தமது குடும்பத்தினரிடம் சேர்த்துவிடும் என்று பெருமூச்சுவிட்டனர் ஊழியர்கள். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மீட்கப்பட்டு வரிசையில் நின்று கொண்டிந்தவர்களில் எனது நண்பரும் ஒருவர். செல்ஃபோன் நெட்வொர்க் அனைத்து கிடைத்த தருணத்தில் இதனை என்னிடம் அவர் தொலைப்பேசியில் விவரித்தார்... அவர் கூறும்போது, "எனது நிறுவனத்தில் முதல் தளம் வரை மூழ்கியிருந்த நிலையில் மின்தூக்கிகள் வேலை செய்யவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. பின்னர் எங்களை சிலர் வந்து மீட்டனர்.
நிறுவனத்தின் வெளியே அடையாள அட்டையுடன் வரிசைப்படுத்தி நிற்க வைக்கப்பட்டனர். அடுத்ததாக நாங்கள் தேர்ந்த தொழில்நுட்ப கேட்டகிரியை கேட்டுக் கொண்டு ஜாவா, சி லாஞ்வேஜ், அக்கவுண்ட்ஸ் என வகைப்படுத்தினர். அடுத்ததாக எங்கள் அனைவரையும் பாதிக்கப்படாத கிளைகளுக்கு நிறுவனத்தின் செலவில் செல்ல உத்தரவு வந்தது. மற்ற பயிற்சி ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்." என்றார்.
இவரது நிலைமை இப்படி என்றால், மற்றொரு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியருக்கு திடீரென அலுவலகத்துக்கு வரக் கூறி உத்தரவு எஸ்.எம்.எஸ். வந்தது. சென்னையில் செல்ஃபோன் நெட்வொர்க்கள் அனைத்தும் செயல்பட தொடங்கியவுடன் அவருக்கு அந்த தகவல் கிடைத்தது.
ஆனால் அவர் இருந்த நிலை வேறு. வேளச்சேரி ராம் நகரில் முதல் தளம்வரை வெள்ள நீர் எட்டி இருந்த நிலையில், இரண்டாவது தளத்தில் வாடகைக்கு விட்டிருந்த நபரின் வீட்டில் தனது தந்தையுடன் தங்கியிருந்தார் அந்த பெண்.
"முற்றிலும் மழை வெள்ளத்தால் வீடு சூழப்பட்டுவிட்டது. அலுவலகம் வருவது சாத்தியமில்லை" என்று அந்த பெண் தனது துறை அதிகாரியை தொடர்புகொண்டு தெரிவித்தார். ஆனால் "இந்த பதிலை நான் மானேஜரிடம் கூற முடியாது. எப்படியாவது அலுவலகம் வாருங்கள் அல்லது லேப்டாப் மூலம் வேலையை முடியுங்கள்" என்று அவரது டி.எல். கூறினார்.
இப்படி ஐ.டி. நிறுவனங்களின் பாதிக்கப்படாத கிளைகளுக்கு ஊழியர்கள் பலரும் மீட்கப்பட்டு 'பார்சல்' செய்யப்பட்டனர்.
போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்ததால் ஊழியர்களை அலுவலகம் அருகே இருந்த நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இங்கு பணியாற்ற முடியாதவர்கள் பலரும் பெங்களூரு, பாண்டிச்சேரி, கொச்சி, கொல்கத்தா என பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டனர். குடும்பத்தினர் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் நிலையில் ஐ.டி. பூங்காவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மழைவெள்ள பாதிப்பைத் தாண்டிய மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.
ஆனால், இத்தகைய சூழலிலும் நிறுவனத்தின் நிர்ப்பந்தத்தை ஏற்கும் இளைஞர்கள் இந்த நிறுவனங்களின் வசம் உள்ளனர் என்றே கூற வேண்டும். இத்தகைய இக்கட்டான சூழலில் வேறு நகரங்கள் சென்று பணியாற்றினால் ஊக்கத் தொகை, பெர்ஃபாமென்ஸ் அலவன்ஸ் என பல நன்மைகள் கிடைக்கும் என்று இதனை ஏற்கும் மனநிலையில் ஐ.டி. இளைஞர்கள் உள்ளனர்.
இதற்காக சென்னையில் நெட்வொர்க் கிடைக்காத ஊழியர்கள் தங்களது பிற பகுதிகளுக்கு லேப்டாப்புடன் ஓடிச் சேன்று நிறுவனத்துக்காக பணியாற்ற காத்திருக்கின்றனர். இந்த மனநிலையில் இருந்த மற்றொரு நண்பர், "நிறுவனம் எங்களுக்கு நல்ல காரியம் தான் செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில் லேப்டாப் கொண்டு பணியாற்றுவது தான் மாற்று வழி. பேரிடரால் சென்னை முற்றிலும் முடங்கியது, வேலையை முடிக்க முடியாது என்று பன்னாட்டில் உள்ள தலைமையகத்துக்கு பதில் கூற முடியாது.
அப்படி கூறினால் அடுத்த வேலை வராமல் போய்விடும். வேலை செய்ய ஆட்கள் இருக்கும் கொச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு அடுத்த ப்ராஜெக்ட் சென்றுவிடும். இந்த சூழலை புரிந்த நாங்கள் எங்கிருந்தும் பணியாற்ற தயாராகவே இருக்கிறோம்" என்றார்.
அதேநேரத்தில், "கரண்ட் இல்லையென்றால்கூட சிஸ்டம் யுபிஎஸ் உதவியால் கொஞ்சநேரம் செயல்படும். பெருநகரம் மாபெரும் பாதிப்பில் தத்தளிக்கும்வேலையில் அதனோடு தொடர்புடைய மனித மூளை ஸ்தம்பித்துப்போய் இருக்கும். கம்யூட்டர் சிஸ்டத்துக்கு இருக்கும் சலுகைகூட மனிதனுக்கு இல்லை" என்று நொந்துகொண்டார் ஓர் ஐ.டி. நண்பர்.