புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2015

தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தை சுவிஸ் ஈழத்தமிழரவை மகிழ்வுடன் வரவேற்கிறது

கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிறீலங்கா அரசால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும்
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையானது இன்றுவரை தீர்க்கப்படாமலும் பல சவால்களை எதிர்நோக்கியவண்ணமும் உள்ளது.
2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்ட ஆயுதங்களுடன் தமிழரின் பேரம் பேசும் சக்தியும் வஞ்சகமாய் நிர்மூலமாக்கப்பட்டு தமிழர்கள் தலைமையற்ற கையறுநிலைக்குள் தள்ளப்பட்டனர். ஒட்டுமொத்தமாக தமிழர்களை மந்தைகளாக முடக்கி தாம் தீர்மாணிக்கும் தீர்வொன்றை தமிழர்களின் தலையில் கட்டிவிடலாம் என்று இன்றுவரை கொழும்பு மையவாத சிங்கள பௌத்த பெருந்தேசியவாத இனவழிப்புச் சித்தார்ந்தத்தை வரித்துள்ள சிறீலங்கா அரசு கங்கணங்கட்டித் திரிகிறது.
இந்நிலையில் தமிழர்கள் எதிர்நோக்குவது வீட்டுப் பிரச்சனையோ காணிப்பிரச்சனையோ இல்லை, தமிழர்களுக்கு வேண்டியது வெறும் நல்லிணக்கமோ அபிவிருத்தியோ இல்லை, தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வானது 13 ஆம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலானதும் இல்லை என்ற புரிதலற்ற ஒரு சிலரின் தான்தோன்றித்தனமான முடிவுகளுக்குள் தமிழர் அரசியல் தலைவிதி பலியாகிவிடுமோ என்ற ஏக்கமும், அச்சமும் உலகத்தமிழர் மனங்களில் அகம்கொண்டது.
இந்த அரசியல் அனர்த்த சூழ்நிலையில்தான் வடமாகாணசபையும் அதை நேர்த்தியாக வழிகாட்டிச் செல்லும் எங்கள் முன்னாள் கௌரவ நீதியரசர், மதிப்பிற்குரிய மாண்புமிகு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயாவின் தீர்மாணங்களும், நடவடிக்கைகளும் வரண்ட தேசத்தில் முளைவிடும் வீர விதைகளாக எம்முன்னெழுந்து மிகப்பெரும் நம்பிக்கையை கட்டியெழுப்பியது. அத்துடன் வரலாற்று ரீதியாகவே அமையப்பெற்ற தமிழர்களின் மரபுவழித்தாயகமான வடகிழக்கின் வரலாற்றுப் பின்புலத்தை சரியாகச் சீர்தூக்கி அதன் அடிப்படையில் தமிழரின் அரசியல் தலைவிதி நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்ற வடகிழக்கு மக்களின் நிலைப்பாடு புலம்பெயர்ந்து அகதியாக வாழும் எமக்கும், தேசவிடுதலைப் பணிகளை முன்னெடுக்கும் பலகோடிக்கணக்கான தமிழின உணர்வாளர்களுக்கும் மிகப்பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ் வரலாற்றுச் சூழமைவில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா உட்பட பல கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், மதத்தலைவர்களும், குடிசார் அமைப்புக்களும், கற்றோர்களும் சான்றோர்களும் எனப் பலர் ஒன்றுபட்டு “தமிழ் மக்கள் பேரவை” என்ற அரசியல் கலப்பற்ற மக்கள் இயக்கத்தை நிறுவி தனிப்பட்ட முடிவுகளால் சீரழியும் தமிழர் அரசியலை ஒழித்து மக்கள்மயப்படுத்தப்பட்ட கூட்டுத்தலைமையை உருவாக்க திடசங்கற்பம் பூண்டு நிற்பது தமிழனின் அடங்காப்பற்று உயிர்ப்புடனிருப்பதை கட்டியம் கூறியுள்ளது.
தமிழர்கள் எமது சுயநிர்ணய உரிமையும், இறையாண்மையும் எமது வரலாற்றுத் தாயகத்தில் எமக்கேயான பிறப்புரிமைக்கு ஒப்பானது. இவற்றைக் காக்கும் காப்பரணாக “தமிழ் மக்கள் பேரவை” திகழும் என்ற மாபெரும் நம்பிக்கையுடன் தமிழின விடுதலை நோக்கிய பயணத்தில் சுவிஸ் தமிழர்கள் எத்தனை சவால்கள், பேரிடர்கள் வரினும் இருகரம்பற்றி உறுதுணையாக நிற்போம் என்ற செய்தியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை
சுவிஸ் ஈழத்தமிழரவை

ad

ad