புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2015

சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் : வடக்கு முதல்வர் அறிவுரை

எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ  ஓடியோடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை காரணம் வீண் விரயங்கள். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது இதிலிருந்து விடுபடுங்கள் இவ்வாறு வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

செய்வோம் செய்விப்போம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாகாணக் கண்காட்சியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிகாட்டல்களின் கீழ் இன்று பல கிராமங்களில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மகளீர்  கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவற்றின் செயற்பாடுகள் முன்னேற்றகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக்கிராம அபிவிருத்திச் சங்கங்கள் குறிப்பாக மகளீர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தமது செயற்பாடுகளை மிகவும் முனைப்புடன் ஆற்றி வருவது பாராட்டுதற்குரியது.

கடந்தகால கொடிய போரின் பின்னர் பல குடும்பங்களில் பெண்கள் தமது கணவன்மாரை இழந்து பிள்ளைகளை இழந்து பெற்றோர்களை இழந்து நிர்க்கதியாகி நின்ற நிலையில், பொருள் தேடலில் ஈடுபடக் கூடிய தந்தை, கணவன், ஆண் பிள்ளைகள் அற்ற நிலையில், பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டு வாழக்கூடிய பல குடும்பங்களுக்கு இவ்வாறான அமைப்புக்கள் உதவுங்கரங்களாக வாழ்க்கைக்கு ஒளியூட்டக் கூடிய அமைப்புக்களாக விளங்கி வந்துள்ளன.

போரின் காரணமாக ஒரு கணத்திலேயே பலரின் வாழ்க்கை முறைமைகள் தலைகீழாக மாற்றப்பட்டன.அப்போது வாழும் வகை தெரியாது தத்தித் திணறிய பல பெண்கள் இவ்வாறான மகளீர் அமைப்புக்கள் மூலம் தாமும் வாழ்க்கையில் முனைந்து முன்னேறக் கூடியவர்கள் என்பதனை நிரூபிக்கும் வகையில் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுக் கௌரவமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

எமது வடமாகாண சபையின் விவசாய அமைச்சு எம்முடன் இணைந்து கொண்டு கார்த்திகை மாதத்தில் “ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்” என்ற தொனியில் மரக்கன்றுகளை நாட்டுகின்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இந் நிகழ்வுகளின் போது முருகண்டிப் பிரதேசப் பகுதியில் இயங்கும் மகளீர் அமைப்புக்கள் தாமாகவே முன்வந்து எவருடைய அழைப்புக்களோ அல்லது கோரிக்கைகளோ இன்றி 8500 மரக்கன்றுகளைத் தாமாகவே அப்பிரதேசங்களில் நாட்டி எமக்கு பூரண ஆதரவைத் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்!

மேலும் மகளிர் அணிகளில் அங்கம் வகிக்கும் பெண்கள் ஒரு குழுவாக இணைந்து கொண்டு சுழற்சி முறையில் மிகக் குறைந்த வட்டியுடனான கடன் வழங்கல் போன்ற அரிய பல சேவைகள் மூலம் தம்மையும் வளர்த்துக் கொண்டு தம்முடன் இணைந்தவர்களையும் ஒரு சிறப்பான நிலைக்குக் கொண்டு செல்வது ஏனையோருக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது. அவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்துவது எமது கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் கடமையாகும்.

ஆண்களோ பெண்களோ கல்வி கற்றல் செயற்பாடுகளை ஓரளவு சிறப்பாக அல்லது அதிலும் குறைவாக நிறைவு செய்த பின்னர் அவர்களுள் பலர் வேலைதேடி எமது காரியாலயத்தை நோக்கி வாரா வாரம் படை எடுக்கின்றார்கள். ஆனால் இவர்களில் ஒரு சிலருக்கே எம்மால் உதவ முடிகின்றது. பலரிடம் நாம் சுயதொழில் பற்றி பேசிப்பார்கின்றோம். ஆனால் அவர்கள் அதைச் செவிமடுப்பதாகத் தெரியவில்லை.அப்படியானவர்களுக்கு இது போன்ற கண்காட்சிகள்இ கைப்பணி வேலைகள் மீதும் குடிசைக் கைத்தொழில்கள் மீதும் ஆர்வத்தை உண்டுபண்ணும் என நம்புகின்றேன்.


தமிழினத்தின் தற்போதைய நிலை, அதன் வருங்காலம் பற்றிச் சிந்தித்தால் எமக்குப் பொறுப்புணர்ச்சி தானே வந்து விடும். வீண் பொழுதைக் களிப்பதிலும் வெட்டிப் பேச்சுப் பேசுவதிலும் இருந்து எம்மை விலக்கிக் கொண்டு நாட்டுக்கு நன்மை தரும் நடவடிக்கைகளில் ஈடுபட முன்வரவேண்டும் என்று கருதுகின்றேன்.

இன்றைய இந்தக் கண்காட்சியானது பல குடும்பங்களுக்கு எதிர்காலத்தில் ஒளி கொடுக்கக்கூடிய வழிகளை எடுத்தியம்பும் ஒரு முன்மாதிரியான நிகழ்வாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் கிடையாது. ஒவ்வொரு அமைப்புக்களினதும் விசேட செயற்பாடுகளையும் ஆக்கங்களையும் குணாதிசயங்களையும் அவர்களினால் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்களில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. இவ்வாறான அமைப்புக்கள் மென்மேலும் சிறப்புடன் செயற்பட்டு நாம் எவர்க்குஞ் சளைத்தவர்கள் அல்ல என்ற செய்தியைக் கூறக்கூடிய வகையில் செயலாற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad