புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

காலத்தின் தேவை அறிந்து சேவையாற்றும் மனிதர்கள் என்றைக்கும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்கள்: சிறீதரன்

காலத்தின் தேவை அறிந்து மக்களுக்கு சேவையாற்றும் மனிதர்கள் மக்கள் மனங்களில் என்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.
அவர்களது புகழ் காலத்தால் மறக்கப்படுவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கை முதலுதவிச் சங்கத் தொண்டர்களைக் கௌரவித்து அவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
இலங்கை முதலுதவிச் சங்கத் தொண்டர்களுக்கான சின்னம் சூட்டுதலும் அவர்களது சேவையைப் பாராட்டிச் சான்றிதழ் வழஙங்கிக் கௌரவிக்கும் நிகழ்வும் கடந்த 24 ஆம் திகதி தொண்டமானாறு வீரகத்திப் பிள்ளை மகா வித்தியாலயத்தில் காலை 10.00 மணிக்கு மேற்படி சங்கத்தின் வடமாகாண ஆணையாளர் பொ.அருந்தவராசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சி.சிறீதரன் தனது உரையில் தெரிவித்தார்.
அவர் அங்கு தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில், காலத்தின் தேவையைக் கருத்தில்க் கொண்டு அரும்பணியாற்றி வரும் ஒரு சங்கமாக இலங்கை முதலுதவிச் சங்கம் காணப்படுகின்றது. தேவை அறிந்து சேவை செய்ய வேண்டும் என்ற மனசு எல்லோருக்கும் வந்துவிடுவதுமில்லை சேவை செய்யும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதும் இல்லை.
மனித குலத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அரும்பெரும் உயர்ந்த நிலை எல்லோரிடமு வருவதில்லை.
உலகம் பூராகவும் விஸ்தரிக்கப்பட்டு பெருஞ் சேவையாற்றிவரும் செஞ்சிலுவைச் சங்கம் என்ற மிகப் பெரும் சேவை அமைப்பு சுவிஸ் நாட்டைச் சேர்ந்த கென்றி டூனால்ட் என்ற மகானின் சிந்தனையில் உதித்த ஒரு அமைப்புத்தான்.
அதேபோல உலகம் போற்றும் அன்னை தெரேசா அவர்களின் மிகப்பெரும் சேவை, சாரணியத்தை அறிமுகம் செய்த பேடன் பவல் போன்றோரின் சேவை மனப்பாங்கினால் இன்றைக்கு உலகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைக்கு மனிதர்களது மனநிலைகளில் பிறருக்கு உதவிசெய்ய வேண்டும் சேவை செய்யவேண்டும் என்ற நல்ல மன நிலை உருவாக்கம் பெற்றுள்ளது. இதனால் ஆரோக்கியமான சமூகம் உருவாகும் என்பதே உண்மை.
இதேபோலத்தான் மக்களது துன்பங்களுக்காகச் சிலுவை சுமந்த இயேசு பிரான், கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா இவர் மக்களது விடுதலைக்காச் சேவையாற்றச் சென்று வெளியில் இருந்த நாட்களை விட சிறையில் இருந்த நாட்களே அதிகம் என்று சொல்லப்படுகின்றது.
இதே போலத்தான் எமது தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்கள் எமது தமிழ் மக்களுக்கள் பட்ட துன்பங்களை பொறுக்க முடியாது தனது சிறுவயதிலேயே மக்களின் விடிவுக்கான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும், தனது வாழ்நாட்களில் குறிப்பிட்டளவு காலத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்ற மன நிலை வந்துவிட்டால் அவர்கள் மனிதர்களாகவன்றி புனிதர்களாகவே போற்றப்படுவார்கள் என்பதே உண்மை.
இந்த முதலுதவிச் சங்கத்தில் இணைந்து மக்களுக்குச் சேவைசெய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகின்றேன். உங்களது உயர்ந்த பணி தொடர எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் மது, போதைவஸ்த்து என்று தீய பழக்கங்களுக்கு அடிமையாகி தீயவழிகளில் செல்கின்ற அதேநேரம் நீங்கள் இப்படியான ஒரு நல்ல செயலில் உங்களை ஈடுபடுத்தி மனித சமூகத்திற்கு முன்மாதிரியகச் செயற்படுவது உங்களின் பெருந்தன்மையையும் உங்களது பெற்றோரின் பெரும் பாக்கியமும் ஆகும். எனது கரங்களால் உங்களுக்குச் சின்னம் அணிவிப்பதில் நானும் பெருமை அடைகின்றேன்' என்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் க. கனகேல்வரன், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் செந்தூரன், வடமராட்சி உதவிக் கல்விப் பணிப்பாளர் யோ.ரவீந்திரன், தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலய தர்மகர்த்தா சிவசண்முக ஐயர், வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், வல்வெட்டித்துறைப் பொலிஸ் அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad