புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

தெற்காசிய கால்பந்து: நேபாள அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா


தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

தெற்காசிய கால்பந்து
11–வது தெற்காசிய பெடரேஷன் கோப்பைக்கான கால்பந்து போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, இலங்கை, நேபாளம் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, வங்காளதேசம், பூடான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
‘ஏ’ பிரிவில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 2–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி நேற்று கடைசி லீக்கில் நேபாளத்தை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 3–வது நிமிடத்திலேயே நேபாளம் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. நவயுக் அடித்த பந்து கம்பத்தில் பட்டு திரும்பிய போது, அதை நேபாள வீரர் பிமல் மகர் கோலாக மாற்றினார். தடுப்பாட்டக்காரர்கள் செய்த தவறினால், தொடக்கமே இந்தியாவுக்கு சறுக்கலாக அமைந்தது.
இதையடுத்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர முயற்சித்த இந்தியாவுக்கு 26–வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ‘பிரீகிக்’ வாய்ப்பில் நீண்ட தூரத்தில் இருந்த அடிக்கப்பட்ட ஷாட்டை, கோல் பகுதியில் நின்ற இந்திய வீரர் ரோலிங் போர்ஜஸ் வலைக்குள் தள்ளினார். இதனால் முதல் பாதி 1–1 என்று சமன் ஆனது.
இளம் வீரரின் சாதனை
பிற்பாதியில் இந்திய வீரர்கள் முழு உத்வேகத்துடன் ஆடினாலும், பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் இரு அணி வீரர்களும் தடுமாறியதை காண முடிந்தது. 58–வது நிமிடத்தில் நேபாள வீரர் ஹேமன் குருங், சூப்பராக அடித்த ஷாட்டை, நல்லவேளையாக இந்திய கோல் கீப்பர் சுப்ரதா பால் ‘பாய்ந்து’ முறியடித்தார்.
இதன் பின்னர் இந்திய வீரர்களின் கை ஓங்கியது. 67–வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கோல் போட்டார். தெற்காசிய விளையாட்டில் அவரது 11–வது கோல் இதுவாகும். 74–வது நிமிடத்தில் சமனுக்கு கொண்டு வர நேபாளத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அனில் குருங் அடித்த ஷாட்டை, இந்திய கோல் கீப்பர் சுப்ரதா பால் தடுத்து நிறுத்தினார்.
81–வது நிமிடத்தில் இந்திய மாற்று ஆட்டக்காரர் லாலியன் ஜூவாலாசாங்டே, சக வீரரிடம் இருந்து பெற்ற பந்தை இடது காலால் உதைத்து கோலுக்குள் திணித்தார். இதன் மூலம், இந்திய கால்பந்து வரலாற்றில் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற மகத்தான சாதனையை மிசோரத்தை சேர்ந்த 18 வயதான ஜூவாலா சாங்டே படைத்தார். கடைசி நிமிடத்தில் ரோலிங் போர்ஜஸ் இடது பக்கத்தில் இருந்து அடித்த பந்தை, தலையால் முட்டி ஜூவாலா சாங்டே மேலும் ஒரு கோல் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார்.
இந்தியா வெற்றி
முடிவில் இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை துவம்சம் செய்து 2–வது வெற்றியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்தது. 2 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய நேபாளம் மூட்டையை கட்டியது. இந்த பிரிவில் இலங்கை அணியும் (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) அரைஇறுதியை உறுதி செய்தது.
இன்று ‘பி’ பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டங்களில் பூடான்–வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்–மாலத்தீவு அணிகள் மோதுகின்றன. இதில் தலா 2 வெற்றிகளுடன் ஆப்கானிஸ்தான், மாலத்தீவு அணிகள் ஏற்கனவே அரைஇறுதி சுற்றை எட்டி விட்டது. ஆனால் இந்த ஆட்டத்தின் முடிவு தான் ‘ஏ’ பிரிவில் அரைஇறுதியில் யாருடன் மோதுவது என்பது தெரிய வரும்.

ad

ad