செவ்வாய், டிசம்பர் 08, 2015

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை


சென்னை அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போரூர் அருகே உள்ள ராமாவரம் பகுதியை சேர்ந்தவர் தீப்தி (வயது 28).

 கணவர் பெயர் கார்த்திக். இவரது வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் தீப்தி வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு வழியின்றி தவித்தார். கடந்த 2-ந் தேதி இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டன. இதனால் தீப்தி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உதவி கேட்டனர்.

இதனை பார்த்த ஒரு ஹெலிகாப்டர் உதவிக்கு வந்தது. விமானப்படை வீரர்கள் தீப்தியை மீட்டு தாம்பரம் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது கார்த்திக் தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்தார். அவருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. கார்த்திக் அங்கிருந்து புறப்பட்டு, 3-ந் தேதி தாம்பரம் வந்து சேர்ந்தார். 

தீப்தியின் பிரசவம் தொடர்பான மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டது. இதனால் தீப்தி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள கம்ப்யூட்டர் பதிவுகளில் தனது மருத்துவ அறிக்கைகள் இருக்கும் என்று ஆலோசனை தெரிவித்தார்.

அப்போது தீப்திக்கு லேசான பிரசவ வலி ஏற்பட்டதால் மீண்டும் அவரை ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையினர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பத்திரமாக தரை இறக்கப்பட்டு தீப்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 4-ந் தேதி தீப்திக்கு அங்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

கார்த்திக் கூறும்போது, ‘‘இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில் எங்கள் ஒவ்வொருவர் முகங்களிலும் மகிழ்ச்சியை வரவழைக்கும் தேவதைகள் போல எங்கள் மகள்கள் பிறந்திருக்கிறார்கள். இதனால் நாங்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறோம். விமானப்படை வீரர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

‘தீப்தியைத் தவிர இதுபோல மேலும் 3 முதல் 4 கர்ப்பிணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.