புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் ஸ்ரீரங்கம்கோவில் இணையதளம் முடக்கம் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணையதளம் திடீர் என்று முடக்கப்பட்டதன் எதிரொலியாக
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவில் இணையதளம் முடக்கம் 

பூலோக வைகுண்டம் என கூறப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 21–ந் தேதி நடக்கிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சிறப்புகளையும், அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்கள் குறித்த தகவல்களையும் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கோவிலுக்கென, www.srirangam.org என்ற முகவரியில் இணையதளம் செயல்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலின் இணையதளத்தில் விழா குறித்த விபரங்களை பார்த்து தெரிந்து கொண்டனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் 

இந்தநிலையில் நேற்று அதிகாலை 2.50 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலின் இணையதளம் திடீரென முடக்கப்பட்டது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் இணையதளம் முடக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ‘‘காஷ்மீர் விடுதலை எங்கள் நோக்கம் என தொடங்கி,பாகிஸ்தான் ஜிந்தாபாத்’’ என முடியும் வாசகம் இடம் பெற்று இருந்தது.

மீண்டும் செயல்பட்டது 

இதனால் வைகுண்ட ஏகாதசி விழா குறித்த தகவல்களை அறிய முடியாமல் பக்தர்கள் தவித்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் இணையதளம் முடக்கப்பட்டு இருந்ததால், இந்த செயலில் தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

 இதற்கிடையே முடக்கப்பட்ட இணையதளம் நேற்று காலை 8.45 மணிக்கு கோவில் பற்றிய தகவல்களுடன் மீண்டும் செயல்பட தொடங்கியது.

கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு 

இதனை தொடர்ந்து கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூரிடம் கோவிலின் இணையதளம் முடக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் இதுகுறித்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட கலெக்டருக்கு இ–மெயிலில் வந்த மிரட்டலில் திருச்சியில் 5 இடங்களில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது.

இந்தநிலையில் தற்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணையதளம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் முடக்கப்பட்டதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ad

ad