புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2015

சென்னை வெள்ள சேதம் பற்றி அமெரிக்க நிபுணர்கள் கருத்து; ‘‘இந்திய நகர வடிவமைப்பாளர்களுக்கு பாடம்’’

சென்னையின் தற்போதைய வெள்ளப்பெருக்கு, இந்திய நகர வடிவமைப்பாளர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருப்பதாக அமெரிக்க
வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

உலக நாடுகள் ஆய்வு

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து உள்ளது. சென்னையில் மழை விடாமல் பெய்து வருவதாலும், சரியான வடிகால் வசதிகள் இல்லாததாலும் வெள்ளம் வடிவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

வரலாறு காணாத இந்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இந்த சோதனையான தருணத்தில் தமிழக மக்களுக்கு உதவிபுரிய பல்வேறு நாடுகள் முன்வந்துள்ள நிலையில், சென்னையின் மழை வெள்ளத்துக்கான காரணங்களையும் அந்த நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன.

எச்சரிக்கை மணி

இந்த நிலையில் சென்னை வெள்ளப்பெருக்கு குறித்து மிக்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்வின் புனதம்பேகர் கூறும்போது, ‘சென்னை வெள்ளப்பெருக்கு இந்திய அரசு எந்திரத்துக்கு மிகப்பெரும் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. இந்திய நகர வடிவமைப்பாளர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் தேசிய பேரழிவுகளை சமாளிக்கும் வகையில் திட்டங்களை மேம்படுத்த அறைகூவல் விடுப்பதாக அமைந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

இதைப்போல உலக வளங்கள் நிறுவனத்தின் இந்திய தழுவல் உத்திகளுக்கான தலைவர் நம்பி அப்பாத்துரை கூறுகையில், ‘புவி வெப்பமயமாதல் போன்ற வானிலை மாற்றத்தால் தான், சென்னையில் 17 நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்துள்ளது. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதில் இருந்து பல்வேறு அனுபவங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது’ என்றார்.

பொருளாதார தாக்கம்

மேலும் சென்னை வெள்ளப்பெருக்கு தேசிய பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். 

இது குறித்து ரோஸ் வர்த்தகப்பள்ளி பேராசிரியர் புனீத் மஞ்சண்டா கூறும்போது, ‘சுற்றுலாவாசிகளுக்கு மிகப்பெரும் நுழைவாயிலாக சென்னை விளங்கி வருகிறது. ஆனால் அங்கு சாலைகள் போன்ற உள்ளூர் கட்டுமானங்களில் தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சேதத்தால் சுற்றுலா மற்றும் தொழில்வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படும்’ என்று தெரிவித்தார்.

சிறப்பு வழிபாடு

இதற்கிடையே மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மிக விரைவில் மீண்டு வருவதற்காக நியூஜெர்சி பிராங்கிளின் நகரில் உள்ள பாலாஜி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.  

ad

ad