புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2015

நேரு விளையாட்டு அரங்கில் மலைபோல் குவியும் நிவாரண பொருட்கள்


சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மலைபோல் வெள்ள நிவாரண பொருட்கள் குவிகிறது. இதுவரையில் 1,200 டன் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

உதவிக்கரம்

தமிழகத்தில் பெய்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் சின்னாபின்னமாகின. மழை வெள்ளத்தால் மக்கள் பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள மக்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.

அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், சமூகசேவை நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறி தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கம்

நிவாரண பொருட்களை கொடுக்க விரும்புவோர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒப்படைக்கலாம் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி அங்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் மலைபோல நிவாரண பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசுடன் இணைந்து நிவாரண பொருட்களை பிரித்து ஒருங்கிணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

1,200 டன் வினியோகம்

இதுகுறித்து நிவாரண பொருட்களை கண்காணிக்கும் குழுவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரவீன்குமார் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 3-ந்தேதி முதல் ஆவின் பால் பவுடர், அம்மா குடிநீர் போன்ற பொருட்கள் நிவாரணத்துக்காக பெறப்பட்டன. முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோளின்படி தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் வந்தவண்ணம் உள்ளன.

பெறப்படும் நிவாரண பொருட்கள் உடனுக்குடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக சென்னையில் உள்ள 15 மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பப்படுகிறது. திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதுவரையில் சுமார் 1,200 டன் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திரகுமாரி உதவி

சென்னை சித்தாலப்பக்கத்தில் ஏராளமானவர்கள் வீடு இழந்து மழை வெள்ளத்தால் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தி.மு.க. இலக்கிய அணி புரவலர் இந்திரகுமாரி வீட்டுக்கு தேவையான பொருட்கள், அரிசி, வேட்டி-சேலை, போர்வை, பாய், தலையணை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

புரசைவாக்கம் பெரிய மசூதி சார்பில் 30 ஆயிரம் உணவு பொட்டலங்களும், போர்வை, லுங்கி, நைட்டி, புடவை, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

டெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ‘ஜமியத் உலமாயே ந்த்’ நிறுவனம் சார்பில் ரூ.2 கோடி செலவில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஒருங்கிணைக்கும் பணிகளை ஜமியத் உலமா தேசிய பொதுசெயலாளர் முகமது அஷ்ஹது மதானி, முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் உள்ளிட்டோர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மனிதநேயம் மடியவில்லை

சாதி-மத பேதங்களை மறந்து மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன், போட்டி போட்டு நிவாரண உதவிகளை வழங்குவது, ‘மனிதநேயம் இன்னும் மடியவில்லை’ என்பதை பறைசாற்றும் விதமாக உள்ளது.

ad

ad