புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2015

போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து படைத்தளபதிகளைக் பாதுகாக்குமாறு மைத்திரிக்கு கடும் அழுத்தம்

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகளைப் போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்ற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவுக்கு கடும் அழுத்தங்களை வழங்கி வருகின்றன சிங்கள அமைப்புக்கள்.
போரை முடிவுக்கு கொண்டுவந்தவர்கள் மீதே போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக ஏற்றுக்கொள்ள முடியாது எனச் சிங்கள அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த விடயத்தில் தலையிட்டு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை வழங்குமாறு கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளிடம் சிங்கள அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த இராணுவ அதிகாரிகள் இப்போது கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என மஹிந்த ஆதரவு அணியினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில,
“மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் உள்ளிட்ட முக்கிய இராணுவ கட்டளை அதிகாரிகள் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் விடயத்தில், அரசு அக்கறையின்றிச் செயற்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
எமது ஆட்சியில் இராணுவத்தினரை எவ்வாறு பாதுகாத்தோம் என்பது நன்றாகவே தெரியும். ஆனால், இன்று அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு இராணுவத்தை போர்க்குற்றவாளிகள் என நிரூபித்து மறுபுறம் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றது.
சர்வதேச சமூகத்தின் வேண்டுகோள் மற்றும் ஐ.நாவின் கோரிக்கைக்கு அமைய தமிழர் தரப்பைத் திருப்திப்படுத்தும் வகையில் இராணுவத்தினரைத் தண்டிக்க முயற்சிக்கிறது என்றார்.
மேலும், போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள் மீதே போர்க்குற்ற விசாரணைகளை நடத்த அரசு தீர்மானித்துள்ளது. எனவே, படை அதிகாரிகளை ஜனாதிபதி காப்பாற்றவேண்டுமெனச் சிங்கள அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக நேற்றுமுன்தினம் தனது ஓய்வுபெறும் வயதை எட்டிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸூக்குப் பதவி நீடிப்பை வழங்க ஜனாதிபதி தவறிவிட்டார்.
அவர் மீது போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே , ஜகத் டயஸூக்கு இராணுவ ரீதியான பாதுகாப்பை வழங்குவதற்காகச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், ஜனாதிபதி அதனைச் செய்யத் தவறிவிட்டார். இறுதிப் போரில் முக்கிய பங்காற்றிய ஜகத் டயஸ் உள்ளிட்ட படை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இராணுவ ரீதியான பாதுகாப்பை வழங்கவேண்டும்.
இல்லாவிடில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும். இல்லையெனில் ஜனாதிபதி தலைமையிலான இந்த நல்லாட்சி அரசு கடுமையான பின் விளைவுகளை மக்களிடமிருந்து எதிர்கொள்ள வேண்டிவரும்” என்று தெரிவித்துள்ள பேரினவாதச் சிங்கள அமைப்புக்கள் ஜனாதிபதிக்குக் கடுமையான அழுத்தங்களை வழங்கி வருகின்றன.
இதேவேளை, படையினரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளிடம் புலம்பெயர் சிங்கள அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்தாதஸ்ஸி ஆகிய தேரர்களுக்கு அவசர மனு ஒன்றைப் புலம்பெயர் சிங்கள அமைப்பு அனுப்பி வைத்துள்ளது.
உலக இலங்கைப் பேரவை என்ற அமைப்பே இவ்வாறு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நல்லாட்சி அரசு வரலாற்றில் என்னுமில்லாதவாறு அரசியல் பழிவாங்கல்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போர் வெற்றியின் முகாமையாளராகக் கடமையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இலக்குவைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவரைப் பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
புலிகளுக்குச் சார்பானவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் கோத்தபாய ராஜபக்ஷ குறிவைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவன்கார்ட் விவகாரத்தின் அடிப்படையில் கோத்தபாயவைத் தண்டிக்க முயற்சிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் எந்தவித பிரச்சினையும் கிடையாது எனச் சட்ட மா அதிபரும், பிரபல அமைச்சர்களும் பகிரங்கமாகக் கூறியுள்ளனர்.
அவன்கார்ட் நிறுவனம் சட்ட ரீதியானது. இந்த நிறுவனத்தின் ஊடாக, ஓய்வுபெற்ற படையினருக்கு வாழ்வாதாரம் வழங்கப்பட்டது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் கனடா போன்ற நாடுகளில் கடமையாற்றி வரும் இலங்கை மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் புலம்பெயர் சிங்கள அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad