புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

அதிமுகவில் இருந்து முன்னாள் டிஜிபி நடராஜ் அதிரடி நீக்கம்: தொலைக்காட்சி பேட்டி எதிரொலியா?

தமிழக முன்னாள் டிஜிபி ஆ.நடராஜ், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில்
இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவி உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தவர் ஆ.நடராஜ். கடைசியாக சிறைத்துறை, தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்தார். சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியைப் பெறுவதற்காக அவர் சட்டப் போராட்டமும் நடத்தி வந்தார்.

நேர்மையான அதிகாரி என்று பொதுவாக கூறப்பட்டாலும் கூட அதிமுக அனுதாபி என்றும் பார்க்கப்பட்டவர் நடராஜ். அதிமுக ஆட்சியில் இவர் டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் டிஎன்பிஎஸ்சி தலைவராக கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரலில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார் நடராஜ்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நடராஜ் அதிரடியாக நீக்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.நடராஜ் (முன்னாள் காவல்துறை இயக்குநர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடராஜ் அளித்த பேட்டியின்போது, நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மீது அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதன் எதிரொலியாகவே அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad