புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2015

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு... சேவை தம்பதி



ஒரு ரூபாய்க்கு சாப்பாடு... சேவை தம்பதி!
‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்பார்கள். ஈரோட்டைச்
சேர்ந்த வெங்கட்ராமன்-ராஜலட்சுமி தம்பதி நடத்தி வரும் உணவகம், ஏழைகளுக்கு உண்மையில் ஒரு சொர்க்கம்தான். ஒரு ரூபாய்க்கு தரமான உணவை வழங்கி, ஏழைகளின் பசியைப் போக்கி வரும் இந்தத் தம்பதியின் சேவை உள்ளம், பாராட்டுக்குரியது!
தணிந்த குரலில் பேசினார், வெங்கட்ராமன். ‘‘எங்க பரம்பரைத் தொழிலே ஹோட்டல்தான். என்னோட அப்பாவுக்கு அப்புறமா, நான் எங்க `ஏ.எம்.வி ஹோம்லி மெஸ்'ஸை கவனிக்க ஆரம்பிச்சேன். பொதுவா, ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்த கட்டணத்துல சாப்பாடு கொடுப்போம். இதுக்குக் காரணம், ஏழு வருஷத்துக்கு முன்ன நான் பார்த்த, உணர்ந்த விஷயங்கள்தான். பக்கத்துல இருக்கற அரசு மருத்துவமனைக்கு, நான் தினமும் சாப்பாடு கொடுக்கப் போவேன். அப்போ பல ஏழை நோயாளிகளும், அவங்களோட உறவினர்களும் சரியான சாப்பாடு இல்லாம சிரமப்படுறதைப் பார்க்கும்போது, மனசுக்கு கஷ்டமா இருக்கும். நம்மளால முடிஞ்சளவுக்கு கொஞ்சம் பேருக்காவது இலவச சாப்பாடு கொடுக்கலாம்னு தோணுச்சு.
அப்போ எங்க ஓட்டல்ல சொல்லிக்கிற அளவுக்கு பெரிய லாபமெல்லாம் இல்லாத நிலையில, `இந்த யோசனையைச் சொன்னா, ஏத்துக்குவாளா?'னு சின்னத் தயக்கத்தோட ராஜலட்சுமிகிட்ட பேசினேன். ‘வசதிப்பட்டவங்க மட்டும்தான் உதவி செய்யணுமா? நாமும், நம்மால முடிஞ்ச அளவுக்கு உதவலாம்!’னு அவ சொன்னப்போ, ரொம்ப சந்தோஷமா, நம்பிக்கையா இருந்தது!’’ - பெருமையுடன் மனைவி முகம் பார்க்கிறார் வெங்கட்ராமன்.
‘‘நாம இலவசமா ஒருத்தர்கிட்ட சாப்பாடு வாங்கிச் சாப்பிடுறோம் என்ற சங்கடம் வாங்குறவங்களுக்கு வர வேண்டாம்ங்கிறதுக்காக, ‘ஒரு ரூபாய்க்கு சாப்பாடு'ங்கிற யோசனையை இவர்கிட்ட சொன்னேன். ‘சரிதான். இதனால நமக்கும் இலவசமா சாப்பாடு கொடுக்குற எண்ணம் வராம இருக்கும்!’னு புரிஞ்சுக்கிட்டாரு. அப்படி ஏழு வருஷமா ஏழைகளுக்கு ‘ஒரு ரூபாய் சாப்பாடு’ கொடுத்துட்டு இருக்கோம். ஆரம்பத்துல, பத்து பேருக்கு கொடுக்க ஆரம்பிச்சோம். படிப்படியா, அதிகப்படுத்தி, இன்னிக்கு 70 பேருக்கு கொடுத்துட்டு இருக்கோம். இது தவிர, எங்க ஹோட்டலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, சாப்பாட்டு விலையில 20% - 50% வரை சலுகையும் கொடுக்கறோம்!’’ என்று உள்ளம் மகிழ்ந்து சொன்னார் ராஜலட்சுமி.
‘‘அரசு மருத்துவமனையில, என்னோட நண்பர் ஒருத்தர் வேலை செய்றாரு. தினமும் மூணு வேளைக்கும், மிகவும் ஏழ்மையான நோயாளிகளோட உறவினர்களுக்கு மட்டும் அவர் டோக்கன் கொடுத்துடுவாரு. எங்க ஓட்டல்ல நானும் என் மனைவியும், மூணு நேரமும் சாப்பாடு, டிபன் பார்சல்களை கட்டி வெச்சிருப்போம். நோயாளிகளோட உறவினர்கள் டோக்கனோட வந்து, ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிட்டுப் போவாங்க. நோயாளியோட, அவரோட உறவினர் ஒருவரும் சாப்பிடுவாங்களேனு ஒவ்வொரு பார்சல்லயும் கூடுதலாதான் சாப்பாடு இருக்கும். ஒரு நோயாளி டிஸ்சார்ஜ் ஆனதும், புது நோயாளிக்கு அந்த டோக்கனை மாத்திக் கொடுப்போம். இதுக்காக மாசம் நிறைய செலவாகுது. ஆனா, பணத்தைப் பார்க்காம, ஏழைகளோட வயிறு நிறையறதை மட்டுமே பார்க்குறதால, எங்களுக்கு சந்தோஷம்தான்!’’ என்று வெங்கட்ராமன் நிறுத்த, தொடர்ந்தார் ராஜலட்சுமி,
‘‘நாம செய்ற தர்மம் பிற்காலத்துல, நமக்கே புண்ணியமா வந்து சேரும்னு சொல்லுவாங்க. அது எங்க வாழ்க்கையில உண்மையா நடந்துச்சு. இந்த வருஷம் ப்ளஸ் டூ முடிச்ச எங்க ரெண்டாவது பொண்ணு ஆசைப்பட்ட மாதிரி இன்ஜினீயரிங் படிக்க வைக்க போதிய வசதியில்லாமலும், யார்கிட்டயும் உதவி கேட்காமலும் தடுமாறிட்டு இருந்தோம். லட்சக்கணக்குல செலவு பண்ணி படிக்க எங்களுக்கு விருப்பம் இல்லாததும் ஒரு காரணம். இந்த நிலையில, நாங்க ஒரு ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கறதை கேள்விப்பட்ட ஒருத்தர் எஸ்.ஆர்.எம். யுனிவர்சிட்டி நிர்வாகத்துக்கிட்ட சொல்லி, எங்க பொண்ணுக்கு இலவசமாவே ஸீட் வாங்கிக் கொடுத்தாரு. கடவுளா பார்த்து அவரை எங்களுக்காக அனுப்பி வெச்ச மாதிரி இருந்தது. ‘தர்மம் தலைகாக்கும்’ என்ற பழமொழி, எங்க வாழ்க்கையில உண்மையானது!’’
- சொல்லும்போதே கண்கள் ஒளிர்கின்றன ராஜலட்சுமிக்கு.
ஒரு ரூபாய் சாப்பாட்டை கை நிறைய பெற்றுக்கொண்ட பொன்னி, ‘‘என் பேரனோட காலுல கம்பி ஒண்ணு குத்தினதால, ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில அவனைச் சேர்த்துட்டு, நானும் கூடவே இருக்கேன். 20 நாளா இவங்க சாப்பாடுதான் எனக்கும், என் பேரனுக்கும். எங்களைப் போல ஆஸ்பத்திரியில இவங்க புண்ணியத்தால வயிறு நிறையுறவங்க நிறைய பேரு. இவங்க குடும்பம் நல்லாயிருக்கணும்!’’ என்று ஆசீர்வாதமாகச் சொல்ல, மனம் நிறைகிறார்கள் ‘ஒரு ரூபாய் சாப்பாடு’ தம்பதி!
சேவையின் பலன், சந்தோஷம்தானே?!

ad

ad